குருமகா திசை
குரு திசை மொத்தம் 16&வருடங்கள் நடைபெறும். ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் குருபகவான் பலம் பெற்று சூரியன், சந்திரன், செவ்வாய் போன்ற
நட்பு கிரகங்களின் சேர்க்கை சாரம் பெற்று ஆட்சி, உச்சம் பெற்றாலும், பூமி, மனை வீடு போன்றவற்றால் சிறப்பான அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். சிறப்பான
புத்திர பாக்கியம் அமையும். சமுதாயத்தில் பெயர் புகழ், மதிப்பு மரியாதை
உயரும். பணவரவுகள் தாரளமாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் நாணயம் தவறாமல் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உற்றார்
உறவினர்களின் ஆதரவும், பெரியோர்களின் ஆசியும் கிட்டும். அரசு வழியில் அனுகூலம், வங்கிப்பணிகளில் உயர்பதவி, ஆசிரியராக பணிபுரியும் வாய்ப்பு, பலருக்கு உதவி செய்யும் அமைப்பு, சமுக பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஆலய நிர்வாக பணிகளில்
உயர்பதவிகள் கிட்டும். கல்வியில் சாதனைப்
புரியும் அமைப்பு உண்டாகும். ஆன்மீக தெய்வீக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். பல நற்பணிகளுக்காக செலவு செய்ய
நேரிடும்.
குருபகவான் பலமிழந்து பகை, நீசம், பாவிகள் சேர்க்கை மற்றும் பார்வைப் பெற்றால் குருதிசை காலங்களில் கடுமையான பண நெருக்கடிகள்
ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்களில் நம்பியவர்களே
துரோகம் செய்வார்கள், கடன் தொல்லைகள் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை
நாணயக் குறைவால் சமுதாயத்தில் மதிப்பு குறைவு நிலை
உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள், ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை உண்டாகும். எதிர்பாராத கண்டங்களும், சோதனைகளும் ஏற்படும். குடும்பத்தில் வறுமை, புத்திரர்களிடையே பகை மற்றும் புத்திர பாக்கியமின்மை, சுப காரியங்களில் தடை, உற்றார் உறவினர்களுடன் விரோதம் செய்யும்
தொழில் வியாபாரத்தில் நலிவு நஷ்டம் உண்டாகும். பிராமணர்களில் சாபத்திற்கு ஆளாக கூடிய நிலை, எதிர்பாராத தன விரயங்கள் குடும்பத்தில் நிம்மதி குறைவு, கணவன் மனைவியிடையே ஒற்றுமையின்மை ஏற்படும்.
ஒருவர் ஜாதகத்தில் 2&ம் இடமும் தனக்காரகன் குருவும் சிறப்பாக, இருந்தால் பொருளாதார நிலை மேன்மையாக அமையும்.
குரு அந்தனன் என்பதால் தனித்து அமைவதைவிட
கிரகங்களின் சேர்க்கையுடன் அமைவதே சிறப்பு. அதிலும் குரு கிரக சேர்க்கையுடன் ஆட்சி உச்சம் பெற்று அமைந்திருந்தால்
குரு திசையாக உண்டாக கூடிய நற்பலன்களை வர்ணிக்கவே
முடியாது. குரு சந்திரனுக்கு கேந்திர ஸ்தானங்களில் அமைந்தால் கஜகேசரி யோகமும், திரிகோண ஸ்தானங்களில் அமைந்தால் குரு சந்திர யோகமும், செவ்வாய்க்கு கேந்திரத்தில் அமைந்தால் குருமங்கள யோகமும், குரு உச்சம் பெற்று கேந்திர திரிகோணங்களிலிருந்தால் ஹம்ச
யோகமும், கேது சேர்க்கை பெற்றால் கோடீஸ்வர யோகமும், ராகு சேர்க்கைப் பெற்றால் சண்டாள யோகமும் உண்டாகிறது. இந்த கிரக
சேர்க்கைகள் பெற்ற தசா புக்தி வரும் போது அனுகூலமான நற்பலன்களை அடைய முடியும்.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் குருவுக்குரியதாகும். இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு குருதிசை முதல் திசையாக வரும் குரு பலம் பெற்று குரு திசை முதல் திசையாக குழந்தை பருவத்தில் நடைபெற்றால் குழந்தைக்கு நல்ல
ஆரோக்கியம், சுறுசுறுப்பு, பெற்றோருக்கு மேன்மை உண்டாகும். இளமை
பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மேன்மை, நல்ல அறிவாற்றல், தெய்வீக எண்ணம் பரந்த மனப்பான்மை, மற்றவர்களிடம் நல்ல பெயரை எடுக்கும் அமைப்பு உண்டாகும். மத்திம பருவத்தில்
நடைபெற்றால் தாராள தன வரவுகள் நல்ல பழக்க வழக்கம், பொது நலப் பணிகளில் ஈடுபடும் அமைப்பு சமுதாயத்தில் கௌரவமான நிலை ஏற்படும். முதுமை
பருவத்தில் நடைபெற்றால் ஆன்மீக தெய்வீக காரியங்களில்
நாட்டம், தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு பரந்த
மனப்பானமை யாவும் உண்டாகும்.
குரு பலமிழந்திருந்து குழந்தை பருவத்தில்
திசை நடைபெற்றால் உடல் நிலையில் பாதிப்பு
வயிறு கோளாறு உண்டாகும். இளமை பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் தடை, வீண் செலவுகளை செய்து மற்றவர்களிடம் அவப் பெயரை எடுக்கும் நிலை ஏற்படும். மத்திம வயதில்
நடைபெற்றால் புத்திர வழியில் கவலை, பொருளாதார தடை, குடும்பத்தில் நிம்மதி குறைவு, உறவினர்களிடையே பகை உண்டாகும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் சமுதாயத்தில்
அவப்பெயர் தேவையற்ற பழக்க வழக்கங்களால் அவமரியாதை பிறர் சாபத்திற்கு ஆளாக கூடிய நிலை, உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும்.
குரு
திசை குருபுக்தி
குருதிசையில் குருபுக்தியானது 2 வருடம் 1 மாதம் 18 நாட்கள் நடைபெறும்.
குருதிசையில் குருபுக்தியானது 2 வருடம் 1 மாதம் 18 நாட்கள் நடைபெறும்.
குருபகவான் பலம் பெற்றிருந்தால் ஆன்மீக தெய்வீக
காரியங்களில் ஈடுபாடு, புண்ணிய நதிகளில் நீராடும் யோகம் ஹோமம், யாகம் போன்றவை செய்யும் வாய்ப்பு, பல வித்தைகளிலும், சங்கீதங்களிலும் தேர்ச்சி கல்வியில் மேன்மை, உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் வாய்ப்பு, பொன் பொருள் சேர்க்கை, அரசு வழியில் உயர்வு, பலரை வழிநடத்தக்கூடிய வாய்ப்பு, குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் அமைப்பு உண்டாகும்.
குருபகவான் பலமிழந்திருந்தால் பகைவரால் தொல்லை, பணநஷ்டம், தேவையற்ற வம்பு வழக்குகளில் சிக்க கூடிய நிலை, மனைவி பிள்ளைகளை விட்டு சன்யாசம் செல்வது, நோயால் பாதிப்பு போன்ற அனுகூல மற்ற பலன்கள் ஏற்படும்.
குருதிசையில் சனி புக்தி
குருதிசையில் சனிபுக்தியானது 2 வருடம் 6 மாதம் 12 நாட்கள் நடைபெறும்.
சனி பலம் பெற்றிருந்தால் தன தான்யம் பெருகும், இரும்பு சம்மந்தப்பட்டத் தொழிலில் அதிக லாபம் கிட்டும். சேமிப்பு
பெருகும். அரசு வழியில் உயர்வான பதவிகள் கிட்டும். வண்டி வாகன யோகம், சேமிப்பு பெருகும் யோகம், அதிக வேலையாட்களை அமர்த்தி சிறப்பாக வேலை வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும்.
சனி பகவான் பலமிழந்திருந்தால் பண வரவுகளில்
நஷ்டம், அரசு வழியில் தொல்லை, அபராதம் செலுத்தும் நிலை உண்டாகும்.
வண்டி வாகனங்களால் விபத்துகள், பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களால்
பிரச்சனைகளை சந்திக்க கூடிய சூழ்நிலை உண்டாகும்.
குருதசா புதன் புக்தி
குருதிசையில் புதன் புக்தியானது 2வருடம் 3மாதம் 6நாட்கள் நடைபெறும்.
புதன் பலம் பெற்றிருந்தால் கல்வியில் ஈடுபாடு, கணக்கு, கம்பூயூட்டர் துறையில் நாட்டம், ஆடை ஆபரண சேர்க்கை, நல்ல வித்தைகளை கற்று தேறும் அமைப்பு, தொழில் வியாபாரம் உத்தியோகத்தில் உயர்வு, குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூட கூடிய அமைப்பு போன்ற நற்பலன்கள்
உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
புதன் பலமிழந்திருந்தால் கல்வியில் மந்த நிலை
ஞாபகசக்தி குறைவு, நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளால் உடல் நிலை பாதிப்பு, குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள், மனைவி பிள்ளைகளிடையே கருத்து வேறுபாடு தாய் மாமன் வழியில் விரோதம், செல்வம் செல்வாக்கு குறைவு போன்ற
அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.
குருதசா கேதுபுக்தி
குருதிசையில் கேது புக்தியானது 11 மாதங்கள் 6 நாட்கள்
நடைபெறும்.
கேது பகவான் நின்ற வீட்டதிபதி பலம்
பெற்றிருந்தால் நல்ல புகழ் பெயர் கௌரவம் உண்டாகும். தன தான்ய லாபங்கள் கிட்டும். ஆடை ஆபரண சேர்க்கை, உறவினர்களின் உதவி, மந்திரங்கள் யாகம்
ஹோமம் கற்பது, செய்வது போன்றவற்றில் ஈடுபாடு உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக
தூரதேசங்களுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் அமையும். எடுக்கும் காரியங்களில் நற்பலன் ஏற்படும்.
கேது பகவான் நின்ற வீட்டதிபதி
பலமிழந்திருந்தால் பயம், கல்வியில் மந்த நிலை, வம்பு வழக்குகளில் தோல்வி இல்லற வாழ்வில்
ஈடுபாடு குறைவு, எடுக்கும் காரியங்களில் தடை, இடம் விட்டு இடம் போக கூடிய சூழ்நிலை வாழ்வில் நிறைய அவமானங்கள் ஏற்படகூடிய நிலை, எதிர்பாராத விபத்துக்களில் சிக்கும் நிலை கருசிதைவு கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு போன்ற அனுகூல மற்ற பலன்கள் ஏற்படும்.
குருதசா சுக்கிர புக்தி
குருதிசையில்
சுக்கிர புக்தியானது 2 வருடம் 8 மாதங்கள் நடைபெறும்.
சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில்
சுபிட்சம், பூரிப்பு, சுபகாரியங்கள் கைகூடும் அமைப்பு, சுகவாழ்வு, பொன், பொருள் ,ஆடை, ஆபரண, வண்டி வாகன சேர்க்கை, சொகுசான வீடு, அலங்காரப் பொருட்கள் யாவும் அமையும்.
உத்தியோகம், தொழில் வியாபாரம் போன்றவற்றில் உயர்வு, அரசு வழியில் கௌரவங்கள் அமையும். உடல் நலமும் சுறுசுறுப்பாக இருக்கும்.
சுக்கிரன் பலமிழந்திருந்தால் உடல்நலக்குறைவு, மர்ம ஸ்தானங்களில் நோய், பணவிரயம், வறுமை, கணவன் மனைவியிடையே
இல்வாழ்வில் ஒற்றுமை குறைவு, பெண்களால் அவமானம் உண்டாகும். பொன் பொருளை இழக்க நேரிடும்.
குருதிசை சூரிய புக்தி
குருதிசை சூரிய
புக்தியானது 9 மாதம் 18 நாட்கள் நடைபெறும்.
சூரியன் பலம் பெற்று அமைந்திருந்தால் பெற்ற தந்தை, தந்தை வழி உறவுகளால் அனுகூலம், மனைவி பிள்ளைகளால் உயர்வு, ஆடை ஆபரண சேர்க்கை, நல்ல பூமி மனை வீடு வண்டி வாகன யோகங்கள், திருமண சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு, புத்திசாலித்தனம், நினைத்ததை முடிக்கும் ஆற்றல், ஆலயங்களுக்கு செல்லும் வாய்ப்பு
உண்டாகும். சமுதாயத்தில் பெயர் புகழ் உயரும்.
சூரியன் பலமிழந்திருந்தால், குழந்தைகளுக்கு தோஷம், பணவிரயம், உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பு, கண்களில் பாதிப்பு, இடம் விட்டு இடம் போக கூடிய சூழல், தந்தைக்கு தோஷம், தந்தையிடம்
விரோதம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும்.
குரு திசையில் சந்திர புக்தி
குருதிசையில் சந்திரபுக்தியானது 1வருடம் 4மாதங்கள் நடைபெறும்.
சந்திரன் பலம் பெற்றிருந்தால் அரசாங்க வழியில்
அனுகூலம், பெயர் புகழ் செல்வம் செல்வாக்கு உயரக் கூடிய யோகம், வீடு மனை, வண்டி வாகன யோகங்கள், குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, உயர்தரமான உணவுகளை உண்ணும் அமைப்பு, கடல் கடந்து பயணங்கள் செய்யும் வாய்ப்பு அவற்றால் அனுகூலங்கள் உண்டாகும்.
சந்திரன் பலமிழந்திருந்தால் ஜலதொடர்புடைய
பாதிப்புகள், பயணங்களால் அலைச்சல் டென்ஷன் தாய்க்கு தோஷம், தாய்வழி உறவுகளிடையே பகைமை மனசஞ்சலம், குழப்பம், தனவிரயம், துக்கம், பெயர் புகழ் பாதிக்கப்படக் கூடிய நிலை, ஊர் விட்டு , நாடு விட்டு, வெளியூர் வெளிநாடுகளில் அலைந்து திரிய
வேண்டிய நிலை, சிறுநீரகப் பிரச்சனைகள் ஏற்படும்.
குருதிசை செவ்வாய் புக்தி
குருதிசையில்
செவ்வாய் புக்தி காலங்களானது 11 மாதம் 6 நாட்கள் நடைபெறும்.
செவ்வாய் பலம் பெற்றிருந்தால் பூமி மனை
போன்றவற்றால் சம்பாதிக்கும் அமைப்பு, சேரும் யோகம், அரசு, அரசு சார்ந்த துறைகளில் உயர்வு, அதிகாரமிக்க பதவிகளை வகுக்கும் யோகம், உடன் பிறப்புகளால் லாபம், தொழில் வியாபாரத்தில் மேன்மை, திருமண சுப காரியங்கள் கை கூடும்
வாய்ப்பு போன்ற நற்பலன்கள் அமையும்.
செவ்வாய் பலமிழந்திருந்தால் பங்காளி மற்றும் உடன்
பிறப்புகளிடையே பகை, தேவையற்ற வம்பு வழக்கு, உடல் நலத்தில் பாதிப்பு, வெட்டு காயங்கள், வண்டி வாகனங்களால் விபத்து, சிறை தண்டனை, பெண்களால் ஆபத்து, வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் நிலை, பைத்தியம் பிடிக்க கூடிய நிலை, மனக்குழப்பங்கள் அக்னியால் பாதிப்பு போன்றவை உண்டாகும்.
குருதிசையில் ராகுபுக்தி
குருதிசையில்
ராகுபுக்தியானது 2 வருடம் 4 மாதம் 24 நாட்கள் நாட்கள்.
ராகு பலம் பெற்று, ராகு நின்ற வீட்டதிபதியும் பலம்
பெற்றிருந்தால் சற்று நன்மை தீமை கலந்த பலன்களை அடைய முடியும். அரசு வழியில் சிறு சிறு சோதனைகளை சந்தித்தாலும் எதிர்பாராத திடீர்
தனவரவுகளும் கொடுக்கும்.
ராகு பலமிழந்திருந்தால் பணவிரயம் திருடர்கள்
மற்றும், பகைவரால் பயம், எதிர்பாராத கலகம், உடல் நிலை பாதிப்பு, தோல் நோய்கள் மனதில் துக்கம், பணவிரயங்கள் உண்டாகும்.
குருவுக்குரிய பரிகாரங்கள்
வியாழக் கிழமைகளில் விரதமிருந்து குரு தட்சினா
மூர்த்திக்கு கொண்டை கடலையை ஊற வைத்து மாலையாக கோர்த்து, மஞ்சள் நிற
மலர்களால் அலங்கரித்து நெய் திபமேற்றி வழிபடுவது நல்லது. ஐந்து முக ருத்ராட்சம் அணிவது குரு எந்திரம் வைத்து வழிபாடு செய்வது, சர்க்கரை நோட்டு புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை பிராமணர்களுக்கு தானம் செய்தல், வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வது உத்தமம். புஷ்பராக கல்லை அணிவது
நற்பலனை தரும்.
No comments:
Post a Comment