கும்பம்: 2016 ராகு – கேது பெயர்ச்சிப் பலன்கள்


கும்பராசிக்கு இதுவரை சாதகமற்ற பலன்களைக் கொடுத்து வந்த அஷ்டம ராகுவும், இரண்டாமிட கேதுவும் தற்போது கெடுபலன்களைத் தர இயலாத விதத்தில் ஏழாமிடத்திற்கும், ராசிக்கும் மாற இருக்கிறார்கள்.


ஏற்கனவே ராகு-கேதுக்கள் இருந்து வந்த எட்டு-இரண்டாமிடங்கள் கும்பத்தினரை கடுமையாகப் பாதித்து கெடுபலன்கள் நடந்த இடம் என்பதால் தற்போது மாற இருக்கும் ஒன்று, ஏழாமிடங்கள் என்பதால் நிச்சயமாக கெடுதல்கள் எதுவுமிருக்காது.


அதேவிட முக்கியமாக பெயர்ச்சியின் ஆரம்பத்தில் ஏழாமிடத்திற்கு வரும் ராகு ஏற்கனவே அங்கு நிலை கொண்டு உங்கள் ராசியைப் பார்த்து சில மாதங்களாக நல்ல பலன்களை உங்களுக்கு தந்து கொண்டிருக்கும் குருபகவானுடன் இணைந்து சுபத்தன்மை பெற்றவராகி உங்களுக்கு நற்பலன்களை அளிக்கும் தகுதி பெற்றவராகிறார் என்பதால் ஏழாமிடத்து ராகு உங்களுக்கு நன்மைகளைச் செய்வார்.


அதேபோல இதுவரை இரண்டாமிடத்தில் இருந்து உங்களின் தனம், வாக்கு, குடும்பம் ஆகியவற்றைப் பாதித்து உங்களின் பணவரவுகளைத் தடுத்து உங்களுக்குப் பொருளாதாரச் சிக்கல்களை இதுவரை கொடுத்துக் கொண்டிருந்த கேதுபகவானும் அந்த இடத்திலிருந்து மாறி ஜென்மம் எனப்படும் ராசிக்கு மாறுகிறார் என்பதால் கேதுவும் நற்பலன்களையே செய்வார்.


பொதுவாக ஜென்மகேது நன்மைகளைச் செய்வதில்லை என்ற கருத்து இருந்தாலும் கும்பம், விருச்சிகம், கன்னி ஆகிய மூன்று வீடுகளில் இருக்கும் கேது கெடுபலன்களைத் தரமாட்டார் எனும் விதிப்படி தற்போது உங்களின் ராசியில் அமரும் கேதுபகவான் கண்டிப்பாக உங்களுக்கு நன்மைகளை மட்டுமே செய்வார்.


அதிலும் பெயர்ச்சியின் ஆரம்பத்தில் சுமார் எட்டுமாதங்கள் வரை கேதுபகவான் குருவின் பார்வையில் இருப்பதால் மிகுந்த நன்மைகளை உங்களுக்குச் செய்வார் என்பது உறுதி.


ஏழாமிடத்து ராகுவின் குரு இணைவால் அந்த வீட்டின் சுபத்தன்மைகள் அதிகரித்து திருமணம், வாழ்க்கைதுணை லாபம், நண்பர்கள் உதவி, கூட்டுத்தொழில் மேன்மை, பயணநன்மை போன்ற பலன்கள் இனிமேல் கும்ப ராசிக்காரர்களுக்கு நடைபெற ஆரம்பிக்கும்.


அதேபோல கேதுபகவான் சுபத்தன்மை பெற்று ராசியில் இருப்பதால் குருபார்வை பெற்ற ராசிநாதன் சனியின் மறு உருவமாகி உங்களின் சிந்தனை, செயல்திறன், பேச்சு இவைகளைச் சீர்படுத்தி ஊக்கமும் ஏற்படுத்தி அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு ஏற்றதினை உண்டாக்குவார் என்பது உறுதி.


பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பணியில் இருக்கும் சில கும்ப ராசிக்காரர்கள், அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு மதிப்பு வாய்ந்த பதவி, அல்லது அதிகாரம் தரும் பதவி மற்றும் அந்தஸ்து உண்டாகும் செயல்கள் கௌரவமான நிகழ்வுகள் நடந்து நீங்கள் புகழ் பெறுவதற்கான அமைப்பு இப்போது இருக்கிறது.


அதிக முனைப்பு இல்லாமலேயே தொழில் முயற்சிகளில் பெரிய லாபங்கள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. கமிஷன் தரகு போன்றவைகளின் மூலமாக நல்ல பெரிய தொகை ஒரே நேரத்தில்லம்ப்பாக கிடைக்கும். பங்குச் சந்தை லாட்டரி போட்டி பந்தயங்கள் போன்றவைகள் இப்போது கை கொடுக்கும். வருகின்ற வருமானத்தை முதலீடாக்குவது நல்லது. வீட்டுமனை, நிலம் போன்றவைகள் இப்போது வாங்கிப் போடுவீர்கள். குழந்தைகளின் பேரில் டெபொசிட் செய்வீர்கள்.


வியாபாரிகளுக்கு வியாபாரம் திருப்திகரமாக இருக்கும். நல்ல வேலைக்காரர்கள் அமைவார்கள். எந்த ஒரு விஷயமும் வெற்றி தரும். ஆரம்பிக்கும் காரியத்தை சுபமாக முடிக்க முடியும். கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள்.


சில தொழில்முனைவோர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து அமோகமான தொழில் வெற்றியைப் பெற்று பெரும்பணக்காரர்கள் ஆவதற்கு தற்போது வாய்ப்பு இருக்கிறது. விடா முயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள்அருள் உங்கள் பக்கம் இருக்கும் என்பது நிச்சயம்.


இளைய பருவத்தினர் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இப்போது சந்திப்பீர்கள். உங்கள் பிற்பகுதி வாழ்க்கையை நிர்ணயிக்கும் பெயர்ச்சியாக இது இருக்கும். உங்களின் புத்திசாலித்தனத்திற்கும், செயல் திறமைக்கும் சவால்கள் இருக்கும். மனதிற்குள் நீங்கள் போட்டு வைத்திருக்கும் திட்டங்களை இப்போது செயல்படுத்தி சோதனை செய்வீர்கள்.


வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் இப்போது உங்களுக்கு கை கொடுக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைக்கும். இதுவரை வெளிநாடு செல்லாதவர்கள் இப்போது வெளிநாட்டுப் பயணம் செல்லும்படி இருக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள் இருக்கும்.


புதிதாக வேலை தேடிகொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ற வேலை உடனடியாக கிடைக்கும். ஒருசிலருக்கு வெளியூரிலோ வெளிமாநிலத்திலோ தூரதேசங்களிலோ தங்கி வேலை செய்ய கூடிய அமைப்புகள் உருவாகும். இருக்கும் இடத்தில் இருந்து தொலைதூரம் செல்லும் படியான மாற்றங்கள் சிலருக்கு உருவாகும்.


அரசு வேலை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மத்திய மாநில அரசுகளின் முதன்மைத் தேர்வுகளான ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் போன்ற பதவிகளுக்கு நல்லமுறையில் தேர்வுகளை எழுத முடியும். ஏற்கனவே தேர்வுகளை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.


பெண்களுக்கு நன்மைகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும். நீங்கள் சொல்வதையும் கேட்கலாமே என்று கணவர் நினைப்பார். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள்.


சிலருக்கு சொந்த வீடு அமையும் யோகம் மிகவும் அருமையாக இருக்கிறது. வாகன மாறுதல் கண்டிப்பாக இருக்கும். தற்போது இருக்கும் வாகனத்தை விட சிறப்பான புதிய வாகனம் வாங்க முடியும். இதுவரை வாகனம் இல்லாதவர்களுக்கு நல்ல வாகனம் வாங்கும் யோகம் இருக்கிறது.


கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பீர்கள். குழந்தைகளால் படிப்புச் செலவுகள் போன்றவைகள் இருந்தாலும் அவர்களைப் பற்றிய கவலை இருக்காது. குடும்பத்தில் பொருட் சேர்க்கை இருக்கும். சேமிக்க முடியும் அளவிற்கு வருமானம் இருக்கும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள்.


மகன் மகள்களால் பெருமைப்படக் கூடிய செய்திகள் இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்யும் பிள்ளைகளை தற்போது பார்க்க முடியும். பிள்ளைகள் விரும்பும் பள்ளி, கல்லூரிகளில் அவர்கள் விரும்பும் படிப்பில் சேர்க்க முடியும். இதுவரை சேமிக்க முடியாதவர்கள் குழந்தைகளின் பெயரில் அவர்களின் எதிர்காலத்திற்காக ஏதேனும் ஒரு வழியில் முதலீட்டு சேமிப்புகள் செய்ய முடியும்.


நீண்ட நாட்களாக தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாடு சிறப்பாகச் செய்ய முடியும். நேர்த்திகடன்கள் செலுத்துவீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். ஷீரடி மகான் ராகவேந்திரர் மகாபெரியவர் பகவான்ரமணர் சத்யசாய் போன்ற ஆன்மிகத் திருவுருக்கள் அவதரித்து அருளாட்சி செய்த திருத்தலங்களை தரிசிப்பீர்கள்.


இதுவரை தீர்த்தயாத்திரை செல்லாதவர்கள் நினைத்த புனிதத்தலத்திற்கு சென்று வருவீர்கள். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் கயிலை போன்ற வடமாநில புனித யாத்திரை செல்லும் பாக்கியம் சிலருக்கு கிடைக்கும்.


சொல்லிக்கொடுக்கும் பணி, சாப்ட்வேர், அச்சகம், புத்தகம், அக்கவுண்ட்ஸ், பத்திரிக்கைத்துறை போன்ற துறைகளில் இருக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி அபரிதமான நன்மைகளைத் தரும். மேற்கண்ட துறைகளில் இருப்போரின் வாழ்க்கை லட்சியங்கள் இப்போது நிறைவேறும்.


ரியல்எஸ்டேட், வீடுகட்டி விற்போர், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், காய்கறி மொத்த வியாபாரம், வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, சிகப்பு மற்றும் வெள்ளை நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு பட்ஜெட்டை மீறி செலவுகளும் விரயங்களும் இருக்கும் என்றாலும் நல்ல வருமானம் வந்து அனைத்தையும் ஈடு கட்டும்.


குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும். தாய்வழி சொந்தங்களிடம் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் தீரும். அம்மாவின் ஆதரவு கிடைக்கும். தாயார் வழியில் நன்மைகள் உண்டு. மாமன்கள், சித்திகள் உதவுவார்கள். உயர்கல்வி கற்க இருந்து வந்த தடைகள் நீங்கி சிலர் மேற்படிப்பு படிப்பீர்கள்.


இந்தப் பெயர்ச்சி முழுக்க உங்களின் பொருளாதார நிலைமை கவலைகள் இன்றி மிகவும் சரளமாகவும் மேன்மையாகவும் இருக்கும். ஆரம்பத்தில் இருந்தே. ஏதேனும் ஒரு வகையில் பணம் வந்து போய்க் கொண்டிருக்கும். என்பதோடு வருமானக் குறைவு என்பது இருக்கவே இருக்காது என்பதால் இந்த ராகு கேது பெயர்ச்சியை நீங்கள் வரவேற்கவே செய்வீர்கள்.

மீனம்: 2016 ராகு – கேது பெயர்ச்சிப் பலன்கள்


இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியில் நல்ல பலன்களை அனுபவிக்க போகும் ராசிகளில் மீனமும் ஒன்று. இதுவரை மீனத்திற்கு ஒன்று, ஏழாமிடங்களில் அமர்ந்து சாதகமற்ற பலன்களைக் கொடுத்துக் கொண்டிருந்த ராகு-கேதுக்கள் மிகவும் நல்ல பலன்களைத் தரக்கூடிய ஆறு, பனிரெண்டாமிடங்களுக்கு மாறுவதால் மீன ராசிக்கு இந்தப் பெயர்ச்சி மிகுந்த நன்மைகளை தரும்.

ஆறாமிடத்திற்கு மாறும் ராகுவால் கடன் தொல்லை நீங்குதல், ஆக்கபூர்வமான கடன் அமைதல், கடனால் பிரச்சினை இல்லாத சூழல், ஆரோக்கிய மேன்மை, இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள் அகலுதல் வேலை, செய்யும் இடத்தில் பிரச்சினை இல்லாத தன்மை போன்ற நல்ல பலன்கள் நடக்கும் என்பதால் இந்த பெயர்ச்சி மீனத்திற்கு சந்தோஷத்தைத் தரும் என்பது நிச்சயம்.

ஏற்கனவே ராகு ஏழாமிடத்தில் இருந்த பாதிப்புகளால் மணவாழ்வில் குறைகள் இருந்தவர்கள் வாழ்க்கைத் துணையால் நிம்மதிக் குறைவை சந்தித்தவர்கள் இனிமேல் அது நீங்கப் பெறுவீர்கள். கருத்துவேறுபாடுகளாலோ, வேலை விஷயமாகவோ பிரிந்திருந்த தம்பதியினர் ஒன்று சேர்வீர்கள்.

கூட்டுத்தொழிலில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி பங்குதாரர்களிடையே இணக்கமான சூழ்நிலை உருவாகி தொழில் மேன்மை பெறும். தவறான மூன்றாம் நபர்களால் பிரிக்கப்பட்ட நண்பர்களும், குடும்ப உறுப்பினர்களும் ஒன்று சேர்வீர்கள்.


சண்டை போட்டுக் கொண்டிருந்த எதிர்கால தம்பதியினர் தவறுகளை உணர்ந்து ஒருவருக்கொருவர் குணங்களை மாற்றிக் கொள்வீர்கள். இதுவரை தாமதமான இளைய பருவத்தினருக்கு உடனடியாக திருமணம் கூடி வரும்.


இதுவரை உங்கள் ராசியில் இருந்து உங்களை முடக்கி வைத்திருந்த கேது பகவான் தற்போது அவருக்கு பிடித்த வீடான கும்ப வீட்டிற்கும், பனிரெண்டாமிடத்திற்கும் மாறி செல்வதால் இதுவரை உங்களை விட்டு விலகியிருந்த சுறுசுறுப்பு மீண்டும் உங்களிடம் வந்து ஒட்டிக்கொள்ளும்.


தவறான முடிவுகளை எடுத்து வருந்திக் கொண்டிருந்தவர்கள் இப்போது உங்களை சீர்ப்படுத்திக் கொள்வீர்கள். ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தற்போது நிவாரணம் கிடைக்கும்.


உங்கள் சிந்தனை தெளிவாக இருக்கும். பேச்சு சிறக்கும், செயல்திறன் கூடும், உங்களுடைய நல்ல வார்த்தைகளைக் கொண்ட பேச்சுக்களால் அடுத்தவர்களால் விரும்பப்படுவீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு இதுவரை இருந்து வந்த தாழ்வுமனப்பான்மை இனிமேல் நீங்கும்.


பனிரெண்டாமிடத்து கேதுவின் முக்கிய பலனாக குறிப்பிட்ட சில மீனராசிக்காரர்களுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். 2016 ஆரம்பத்திலேயே சிலருக்கு கோவில் பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். சிலர் சிதிலமடைந்து கவனிப்பாரற்று கிடைக்கும் பழைய கோவில்களை புனருத்தானம் செய்வித்து அதன் மூலம் ஏழு தலைமுறைக்குத் தேவையான புண்ணியத்தை சேர்த்துக் கொள்வீர்கள்.


கேதுபகவான் ராசியிலிருந்து விலகுவதால் உங்கள் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். முகத்தில் எந்நேரமும் சந்தோஷம் தெரியும். இதுவரை மனதில் இருந்து வந்த குழப்பங்கள் உடனே விலகும். சென்ற காலங்களில் உங்களை வாட்டி வதைத்த சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மைகள் இனிமேல் உங்களிடம் நெருங்காது. அனைத்து விஷயங்களிலும் இருந்த வந்த தொல்லைகள் தடைகள் தாமதங்கள் விலகி அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசப் போகிறது.


இந்தக் ராகு கேதுப் பெயர்ச்சிக்குப் பிறகு புதிய மனிதரைப் போல உணருவீர்கள். உங்களின் அந்தஸ்து மதிப்பு அனைத்தும் உயரும் நேரம் இது. அடுத்தவர்களால் கௌரவமாக நடத்தப் படுவீர்கள். நீங்கள் தொட்டது துலங்கும் நேரம் இது. நீங்கள் நினைத்தது நடக்கும் காலம் இது. பிறந்த ஜாதகத்தில் நல்ல யோக தசா புக்திகள் நடந்து கொண்டு இருந்தால் உங்களில் சிலர் சாதனைகளை படைத்து புகழின் உச்சிக்கு செல்வீர்கள்.


இதுவரை வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த போட்டிகளும், எதிர்ப்புகளும், பொறாமைகளும், தடைகளும் விலகி அனைத்தும் உங்களுக்கு நன்மை தரும் விஷயங்களாக மாறும். பணிபுரியும் இடங்களில் இதுவரை இருந்து வந்த நிம்மதியற்ற சூழல் இனிமேல் இருக்காது.


உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களுக்கு தொல்லை கொடுத்த மேல் அதிகாரிகள் மாறுதலாகி உங்களைப் புரிந்து கொண்டவர்கள் அங்கே வருவார்கள். இதுவரை தடைப்பட்ட பதவிஉயர்வு, சம்பளஉயர்வு போன்றவைகள் இப்போது கிடைக்கும்.


தொழில்அதிபர்கள், உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், கலைஞர்கள் உள்ளிட்ட எல்லாத் துறையினருக்கும் இது மிகவும் நல்ல நேரம். எந்தக் காரியமும் உங்களுக்கு அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். ஊரில் இருக்க முடியாமல் வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பி பழைய வாழ்க்கையைத் தொடரும்படி சம்பவங்கள் நடைபெறும். காதலால் மனஉளைச்சலுக்கு ஆளானவர்கள் மற்றும் காதலைப் பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேருவார்கள் அல்லது புதிய துணை கிடைக்கும்.


சிலருக்கு வாழும் ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உண்மையான அவதார புருஷர்களை அடையாளம் காண்பீர்கள். உங்களில் சிலர் ஆன்மிகத்தின் உச்ச நிலைக்கு சென்று அடுத்தவரால் ஆராதிக்கப்படுவீர்கள்.


நீண்ட தூர புனித யாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதானவர்கள் காசி கயா போன்ற புனித யாத்திரைகள் செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.


கோவில் அர்ச்சகர்கள், நமது பாரம்பரியம் பண்பாடு சம்பந்தப்பட்ட கலைகளை கற்றுத்தருபவர்கள் நீதித்துறையில் பணிபுரிபவர்கள், மேன்மை தங்கிய நீதியரசர்கள், சட்டவல்லுனர்கள், பணம் புரளும் துறைகளான வங்கி சிட்பண்ட் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இந்தப் பெயர்ச்சி மிகுந்த நன்மைகளைத் தரும்.


இதுவரை உங்களைப் பிடிக்காமல் உங்களை எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் உங்களைப் பார்த்து பயப்படும்படியாக நிலைமை மாறும். கடன் பிரச்னைகள் தலை தூக்காது. புதிய கடன்கள் வாங்கும்படி நேரிட்டாலும் பழைய கடன்களை சுத்தமாக அடைத்துவிட்டு நிம்மதியாக இருப்பீர்கள்.


வேறு இன மொழி மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் இந்த வருடம் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். வெகு தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆனாலும் உற்சாகமாக இருப்பீர்கள்.


ஆகஸ்டுக்குப் பிறகு குருபகவானால் நல்ல மாறுதல்கள் இருக்கும். வீடு மாற்றம் தொழில் மாற்றம் வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான ஒரு விஷயத்தில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று இப்போது நடக்கும். இயந்திரம் சம்பந்தப்பட்ட தொழில், நகரும் பொருட்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு இப்போது தொழில் மாற்றங்கள் இருக்கும். அது நல்லதாகவும் இருக்கும்.


பூர்வீக சொத்து சம்பந்தமாக இது வரை இருந்து வந்த பாகப்பிரிவினை பிரச்னைகள், பங்காளித் தகராறு போன்றவைகள் இந்த வருடம் சுமுகமாக உங்களுக்கு லாபகரமாக முடிவுக்கு வரும். போலீஸ், கோர்ட், கேஸ் என்று அலைந்தவர்கள் உங்கள் கண்முன்பே உங்களுக்கு சாதகமாய் பிரச்னைகள் முடிவதைக் காண்பீர்கள்.


கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். இதுவரை இருந்து வந்த விரயச் செலவுகள் இனிமேல் இருக்காது. எனவே ஏதேனும் ஒரு தொகையை அது சிறியதாக இருந்தாலும் சேமிக்க முடியும்.


இதுவரை மகன் மகள் விஷயத்தில் இருந்து வந்த மனக் கவலைகள் தீரப் போகிறது. வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்த இளைய வயதினருக்கு நல்ல வேலை கிடைக்கும். தாமதமாகிக் கொண்டே வந்த மகன், மகள் திருமணத்தை நடத்த முடியும். குழந்தைகளால் பெருமைப் படத்தக்க சம்பவங்கள் இருக்கும்.


பங்குதாரர்கள் இடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதிதாக ஆடம்பர வாகனம் வாங்குவீர்கள். அரசாங்க வழியில் நன்மைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். உங்களுடைய மாற்றங்களை அடுத்தவர்கள் உணரும்படி நடந்து கொள்வீர்கள்.

 
பெண்களுக்கு இது மிகச் சிறப்பான நன்மைகளைத் தரும் பெயர்ச்சியாகும்.. உங்களின் மதிப்பு உயரும். நான்குபேர் கூடும் இடத்தில் தனித்துவமாக தெரிவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும்.


இதுவரை காணாமல் போயிருந்த உங்களின் மனதைரியம் இப்போது மீண்டும் வரும். எதையும் சமாளிப்பீர்கள். ஒரு சிலர் ஏதேனும் ஒரு செயலால் புகழ் அடைவீர்கள். சகோதர உறவு மேம்படும். இளைய சகோதரத்தால் நன்மை உண்டு. தம்பி தங்கையர்களுக்கு நல்லது செய்ய முடியும். மூத்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள்.


மொத்தத்தில் மீனத்திற்கு திருப்புமுனையாக இந்தப் பெயர்ச்சி அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.