லக்கினத்தில் ராகு

1.       லக்கினத்தில் ராகு ஜாதகன் சோம்பல் உடையவன். அடிக்கடி நோய்வாய்ப் படக்கூடியவன். அது தலைவலியாகவும் இருக்கலாம், காய்ச்சலாகவும் இருக்கலாம். அல்லது வயிற்றுக் கோளாறுகளாகவும் இருக்கலாம். நோயின் தன்மைகளும், வந்து தாக்கும் நேரமும், காலமும் ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து மாறுபடும் ஜாதகனுக்கு தர்மசிந்தனை, மகிழ்ச்சி மற்றும் வயதான காலத்தில் தன் குழந்தை களால் மகிழ்ச்சி போன்றவை இருக்காது. சிலருக்கு சொத்து சுகம் இருக்காது. சிலருக்கு நீண்ட ஆயுள் இருக்காது. ஜாதகத்தில் எட்டாம் வீடும்,ஆயுள்காரகனும் வலுவாக இல்லையென்றால், அவர்களுடன் ராகுவும் சேர்ந்து ஜாதகனைப் இரக்க வேண்டியிருக்கும், மேஷம், ரிஷபம், கடகம் ஆகிய ராசிகள் லக்கினமாக இருந்து அதில் ராகு இருந்தால் மேற்கூறியவற்றில் தீய பலன்கள் எதுவும் ஜாதகனுக்கு இருக்காது. காரணம் ராகுவிற்கு அவைகள் உகந்த லக்கினங்கள்!

2.       ராகு 2ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகனுக்குக் குறைந்த அளவே செல்வம் இருக்கும். சிலர் கடனில் மூழ்க நேரிடும் ஜாதகன் சாதுரியம் உள்ளவன் சாமர்த்தியம் உள்ளவன். அந்த சாதுரியங்களில் சிலாருக்கு தந்திரமும் ஒளிந்திருக்கும். அடுத்தவன் கண்ணில் படாது. சட்டென்று கோபம் வரக்கூடியவன். பொதுவாகவே இரண்டில் தீய கிரகங்கள் இருந்தால் சொத்து இருக்காது. அல்லது சேராது. அப்படியே இருந்தாலும் பல காரணங்களால் கரைந்துவிடும். இங்கே இருக்கும் ராகு நிச்சயமாகக் கரைப்பான். அல்லது சொத்தைச் சேர்க்க விடமாட்டான்.

3.       ராகு 3ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் மற்றவர்களைக் கவரக்கூடியவன். யாராக இருந்தாலும் சாய்த்து விடுவான். பெண்களாக இருந்தால் எளிதில் சாய்த்து விடுவான். எப்படிச் சாய்ப்பான் தன்னை பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டிருப்பான் (இருக்காதா பின்னே?) தாராள மனமுடையவன். ஊதாரி. கையில் காசு வைத்துக் கொள்ள மாட்டான் உறவுகள், நண்பர்கள், கேளிக்கைகள் என்று பணத்தை வைத்துத் செலவு செய்வான். பெண்ணாக இருந்தால், நகை நட்டு, புடவை, அலங்காரச்சாதனங்கள் என்று செலவு செய்வர் இந்த அமைப்பினருக்கு நீண்ட ஆயுள் உண்டு. அதோடு குபேரயோகம் போல பணம் வரும். சொத்துக்களும் வந்து சேரும்!3ஆம் வீடு, 6ஆம் வீடு, 10ஆம் வீடு, 11ஆம் வீடு ஆகிய இடங்கள் தீய கிரகங்களுக்கு உகந்த இடங்கள் ஆகும்.

4.       ராகு 4ஆம் வீட்டில் இருந்தால்: மருத்துவ ஜோதிடத்தின்படி, இது இருதயத்திற்கான இடம். இங்கே ராகு இருப்பது நல்லதல்ல. இருதய சம்பந்தப் பட்ட நோய்கள் வரும். இந்த இடம் சொத்து, சுகங்களுக்கான இடம். இங்கே அமரும் ராகு அவை இரண்டையும் இல்லாமல் செய்துவிடுவான். மகிழ்ச்சி இருக்காது. சொத்துக்கள் இருக்காது. இருந்தாலும் நிலைக்காது. வண்டி வாகனங்கள் இருக்காது. பல ஜாதகர்களை இந்த அமைப்பு பொடி நடையாக வாழ்க்கை முழுவதும் நடக்க வைத்துவிடும். உறவினர்களிடம் ஒட்டுதல் இருக்காது. அவர்களில் பலர் விரோதிகளாகி விடுவார்கள். சிலருக்கு தன் தாயின் மீதே பிடிப்பு இருக்காது! இருக்கும் பன்னிரெண்டு இடங்களில் ராகு இங்கே அமர்வதுதான் மோசமாகப் போவிடும். சோகமாகப் போய்விடும். வாழ்க்கை முழுவதும் அவதியாகிவிடும்.

5.       ராகு 5ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் சுயநலவாதி. தன்னைப் பற்றி மட்டுமே நினைப்பான். வெற்றிக்கு வேண்டிய அதிரடிகள் எல்லாம் இருக்காது. சற்றுக் கோப தாபம் உடையவன். உறவினர்கள் அவனைக் கழற்றிவிட்டு விடுவார்கள். அதாவது உறவினர்கள் இவனைக் கண்டால் ஒதுங்கி விடுவார்கள் சிலருக்கு குழந்தை பிறப்பது தாமதமாகும். சிலருக்கு ஒரு குழந்தை மட்டும் இருக்கும் ஜாதகத்தில் காரகன் குரு நன்றாக இல்லையெனில், இந்த அமைப்பினருக்குக் குழந்தை இருக்காது.

6.       ராகு 6ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகனுக்கு வயிற்றுக் கோளாறுகள் இருக்கும். அது அவனைப் படுத்தி எடுக்கும் ஜாதகனுக்கு வளமான வாழ்க்கை அமையும். அதோடு சேர்த்து அல்லது அவனது வளமையைப் பார்த்து, பொறாமைப்படும் எதிரிகளும் இருப்பார்கள். ஜாதகன் தர்ம சிந்தனைகளை உடையவனாக இருப்பான். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் புகழ் உடையவனாக இருப்பான். சாப்பாட்டு ராமனாக இருப்பான் anything under the sun என்று எதையும் ரசித்து சாப்பிடக்கூடியவனாக இருப்பான். அவன் சாப்பிடுவதெல்லாம் மருந்து மாத்திரைகள் இன்றி தானியங்கி இயந்திரம்போல ஜீரணமாகிவிடும். வெற்றிகள் பலவற்றை அடையக்கூடியவனாக இருப்பான். அவனுடைய தொழில் ஸ்தானமும், இந்த அமைப்பும் சேர்ந்தால், சிலர் ராணுவத்தில் பணிபுரிவார்கள். அதிகாரியாக இருப்பான். ஆற்றல் நிறைந்தவனாக இருப்பான். பல நண்பர்கள், கூட்டாளிகள் புடைசூழ அரசனைப் போல வாழ்வான். நீண்ட ஆயுளைப் பெற்றவனாக இருப்பான்.

7.       ராகு 7ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் ஊதாரியாக இருப்பான். பணத்தின் அருமை தெரியாமல் அதிகமாகச் செலவு செய்பவனாக இருப்பான். சிலருக்கு மகிழ்ச்சி இருக்காது. எப்போதும் உழன்று கொண்டிருப்பான். சிலருக்கு தேவையான புத்திசாலித்தனம் இருக்காது. சுதந்திரமாக இருக்க ஆசைப்படுவான் அடிக்கடி நோய்வாய்ப்படுபவனாக இருப்பான், இந்த அமைப்புள்ள சிலருக்கு, மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சிலர் அவமானத்திற்கு உள்ளாக நேரிடும். பெண்களால் திட்டு வாங்க நேரிடும். அதீத நோயால், உடல் சீர்கெடும். சிலருக்குப் அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும்படியான வாழ்க்கை அமையும்.

8.       ராகு 8ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் அடிக்கடி துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கும் வீண் பழிச்சொல்லிற்கும் ஆளாக நேரிடும். இந்த அமைப்புள்ள சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கும்.(எல்லோருக்கும் அல்ல!) சிலருக்கு வம்ச விருத்தி இல்லாமல் இருக்கும். முன் கர்ம வினை தொடர்கிறது என்று பொருள். சிலருக்கு உறவுகளும் அதிகம் இருக்காது; செல்வமும் இருக்காது. துயரங்கள் மட்டும் அதிகமாக இருக்கும். பொதுவாக இந்த அமைப்பினர் வாக்குவாதம், விதண்டாவாதம் செய்யக்கூடியவர்கள் சமயங்களில் சாதாரணப் பேச்சுக்கூட சண்டையில் முடியும் அநேக சூழ்நிலைகளில் தோல்வியையே தழுவ வேண்டியதாக இருக்கும். வெற்றிச் செல்வி விலகிப் போய்விடுவாள். ஆண்களாக இருந்தால், சிலருக்கு மூல நோய் உண்டாகும் (Piles Complaint) பெண்களாக இருந்தால் மாதவிடாய்ப் பிரச்சினைகள் இருக்கும்.

9.       ராகு 9ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகத்தில் மற்ற அமைப்புக்கள் வலுவாக இருந்தால் இந்த இடத்தில் அமரும் ராகு ராஜ யோகத்தைக் கொடுப்பான். இல்லையென்றால் இல்லை! ராஜயோகம் உள்ளவர்களுக்கு, செல்வம், உறவுகள், ஆண் குழந்தைகள் என்று எல்லாம் அசத்தலாக இருக்கும் ஞானம் உள்ளவர்களையும், பெரியோர்களையும் போற்றும் தன்மையுடையவாக ஜாதகன் இருப்பான். இந்த இடத்து ராகு ஜாதகனின் தந்தைக்குக் கேடாக இருக்கும். பூர்விகச் சொத்துக்களுக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும்!

10.   ராகு 10ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் செய்யும் தொழிலில் அல்லது வேலையில் புகழ் பெறுவான். இயற்கையாகவே தொழில்நுட்ப அறிவு இருக்கும். சிலர் பாவச் செயல்களைச் செய்வதற்குத் தயங்க மாட்டார்கள். சிலர் வீரதீரச் செயல்களைச் செய்பவர்களாக இருப்பார்கள் மொத்தத்தில் வீரம், தைரியம், பாராக்கிரமம் ஆகியவைகளைக் கொண்டவனாக ஜாதகன் இருப்பான். எல்லா செளகரியங்களையும் பெற்றவனாக இருப்பான் அறிவு, அந்தஸ்து ஆகியவற்றால் மேம்பட்ட வாழ்க்கைச் சூழலில் ஜாதகனின் வாழ்க்கை அமைந்து சிறக்கும்!

11.   ராகு 11ஆம் வீட்டில் இருந்தால்: பதினொன்றாம் இடத்தில் ராகு அமையப் பெற்ற ஜாதகன் அதிகம் படித்தவனாகவும், அதிகம் பொருள் ஈட்டுபவானகவும் இருப்பான். நீண்ட ஆயுளை உடையவனாக இருப்பான். நல்ல நண்பர்களையும், நல்ல கூட்டாளிகளையும் கொண்டவனாக இருப்பான். செய்யும் தொழிலில் அல்லது வேலையில், அனைத்து நுட்பங்களையும் தெரிந்தவனாக இருப்பான். அல்லது விரைவில் எதையும் கற்றுக்கொண்டு செயல்படுபவனாக இருப்பான். வலுவானவனாக இருப்பான். வளம் உடைய வாழ்க்கை அவனுக்குக் கிடைக்கும் அல்லது அமையும். அத்தனை சுகங்களையும், செளகரியங்களையும் அனுபவிப்பவனாக ஜாதகன் இருப்பான்

12.   ராகு 12ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் பாவச் செயல்களைச் செய்பவனாக இருப்பான். அதையும் பிறர் அறியாத வண்ணம் செய்வான். உடல் உபாதைகளுக்கு ஆளாவான்.கண்களில் கோளாறுகள் உண்டாகலாம். சிலருக்கு, செல்வமும் ஆண் வாரிசுகளும் இல்லாமல் இருக்கும். லுவில்லாதவன். மன, மற்றும் உடல் வலிமை இல்லாதவன். பார்க்கும் வேலை அல்லது தொழில்களில் இருந்து வீழ்ச்சி அடைய நேரிடும் இந்த இடத்து ராகு, மேலும் ஒரு தீய கிரககத்தின் (சனி, அல்லது செவ்வாயின்) சேர்க்கை பெற்றால் வீழ்ச்சி நிச்சயமாக உண்டு.

செவ்வாய்யும் பரிகாரமும்

சூரியன், சந்திரன், இவர்களுக்கு மட்டுமில்லை, மற்றுமுள்ள ராகு, குரு, சனி, புத, கேது, சுக்ரன் எல்லோருக்குமே சேனாதிபதி நான் தான். மற்ற கிரகங்கள் தீமை செய்யும் நிலையிலிருந்தால் "சூரியன் பலமிழந்துட்டாரு", "கேது கெட்டிருக்காரு" என்று தான் ஜோதிடர்கள் சொல்வார்கள். நான் தீமை செய்யும் நிலையில் இருந்தால் மட்டும் ஜாதகத்தையே தோஷ ஜாதகம் என்று ஓரமாய் வைத்து விடுவார்கள்!

ஏன் தெரியுமா? என் இலாகா அப்படி! நான் அதிகாரம் செலுத்தும் விஷயங்கள் அப்படி!

வயதில் இளையவர்கள் போலீஸ், மிலிட்டரி, ரயில்வே, எரிபொருள், மின்சாரம், ரத்தம், ஆயுதங்கள், வெடி பொருட்கள், எலும்புக்குள் வெள்ளையணுக்களை (நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுபவை இவையே - நோய்வராது காப்பவை) உற்பத்தி செய்யும் மஜ்ஜை. கோபம், நெருப்பு, தர்க்கம், வியூகம், தெற்கு திசை, பவழக்கல், சத்ரிய குலத்தினர், அறுவை சிகிச்சை, விபத்து, சமையல் இவை எல்லாவற்றிற்கும் நானே அதிபதி.

சூட்டுக் கட்டிகள், ரத்தம், எரிச்சல் தொடர்பான வியாதிகள், போட்டி, ஸ்போர்ட்ஸ், என்.சி.சி. முருகக்கடவுள், பால், கொம்புள்ள பிராணிகள், மாமிசம், பலி இவையும் என் இலாகாவின் கீழ் வருபவையே. நீங்கள் ஹை, லோ பிபி, ரத்தசோகை, அல்ஸர் போன்ற வியாதிகளால் அவதிப்படுபவரா?
சகோதரர்களே எதிரிகளாகி, பிற எதிரிகளுடன் சேர்ந்து உங்களைத் தொல்லைப்படுத்துகிறார்களா? ஏற்கனவே விபத்து, தீவிபத்து எதிலாவது சிக்கியுள்ளீர்களா? அறுவை சிகிச்சை நடந்துள்ளதா? காதல் திருமண விசயங்களில் பின்னடைவால் வருந்துபவரா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் உள்ளேன் என்று அர்த்தம்.மேற்சொன்ன உபாதைகள் ஏதுமின்றி நான் அதிகாரம் செலுத்தும் துறைகளில் எந்தப் பிரச்சினையுமின்றி தொழில், வியாபாரம் செய்து வருகிறீர்களா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நன்மை செய்யும் நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம்.

நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள், என்னால் விளையும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.

 பரிகாரங்கள்
1. ரத்ததானம் பற்றி உங்களுக்கிருக்கும் பிரமைகளைப் போக்கிக் கொண்டு உங்கள் குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய ஆரம்பியுங்கள். எப்படியும் ரத்த சேதம் உறுதி என்னும் போது ரத்த தானம் கொடுத்தால் விபத்து தவிர்க்கப்படும்.புண்ணியமும் வரும் அல்லவா?

2. நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு ஆக்கியோ வாங்கியோ போடுங்கள் (காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு என்றால் உத்தமம்).

3. பள்ளிகள், நூலகங்கள், பள்ளி வாசல்கள், கோயில்கள், சேவை நிறுவனங்களுக்கு மின்சாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.

4. உங்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். முடிந்தால் கராத்தே ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுங்கள்.

5. உங்கள் வீடு (அ) வியாபார ஸ்தலத்தில் தெற்கு (அ) தென் கிழக்குப் பகுதியில் பள்ளங்கள் இருந்தால் முதலில் மூடிவிடுங்கள்.

6. மலை மேல் உள்ள சுப்ரமணியரை வழிபடுங்கள்.

7. தியானம் பயிலுங்கள். கோபம் என்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள்.

8. நான் அதிகாரம் செலுத்தும் துறைகளில் இருந்து விலகுங்கள்.
 அவற்றிலிருந்து வரும் ஆதாயங்களைத் தவிர்த்துவிடுங்கள்.

செவ்வாய் கிரகம் ரத்தத்திற்கும், விபத்திற்கும் உரியது. ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய், சனி பார்வை பெற்றிருந்தாலும், செவ்வாய்+சனி சேர்க்கை பெற்றிருந்தாலும் அவருக்கு அடிக்கடி சிறு விபத்துகள் ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட ஜாதகர் தாமாகவே முன்வந்து ரத்ததானம் செய்யலாம். இதன் மூலம் விபத்தால் ரத்த இழப்பு ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ளலாம். அந்தக் காலத்தில் ரத்தத்தின் சேர்க்கையிலும் மாறுதல் காணப்படும். செவ்வாய்+சனி சேர்க்கை இருந்தால் ரத்தத்தில் இரும்புச் சத்து, கால்சியம் அதிகரிக்கும். எனவே, இதுபோன்ற கூட்டு கிரக சேர்க்கை பெற்றவர்கள் சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

செவ்வாயும் சந்திரனும் கூட்டணி

1. லக்கினத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால், அது மேஷ லக்கினம், விருச்சிக லக்கினமாக இருந்தால் அல்லது கடக லக்கினமாக இருந்தால் நல்லது. ஜாதகனுக்கு எல்லாம் நன்மையே. இல்லையென்றால் ஜாதகனுக்கு சுகக் கேடு. ஆரோக்கியக் கேடு.

2. இரண்டாம் வீட்டில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால், ஜாதகனின் வாழ்க்கை வளமாகவும் செல்வம் மிக்கதாகவும் இருக்கும். அதோடு இதய நோய் உடையவனாகவும், அடிக்கடி விபத்துக்களில் சிக்கிக் கொள்பவனாகவும் இருப்பான்.

3. மூன்றாம் வீட்டில் இந்த அமைப்பு இருந்தால், ஜாதகன் அம்சமாக இருப்பான். அம்சம் என்றால் என்ன வென்று தெரியுமல்லவா? எதையும் ரசிப்பவனாக இருப்பான். வாழ்க்கை ரசனைகள் மிகுந்து இருக்கும். அதே நேரத்தில் மனதில் கவலைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் குறைவிருக்காது. சிலரது (நன்றாகக் கவனிக்கவும்) சிலர் தனது துணையை இளம் வயதிலேயே பறிகொடுக்க நேரிடும்!

4. நான்காம் இடத்தில் இந்த அமைப்பு இருந்தால், ஜாதகன் மிகுந்த அதிர்ஷ்டசாலி! ஜாதகனுக்கு எதையும் மோதிப் பார்க்கும் குணம் இருக்காது. வருவது வரட்டும் என்று மேலோட்டமாக இருப்பான். வலிமையான மனம் உடையவனாக இருப்பான். இளைய உடன் பிறப்புக்களுடனான உறவு சுகமாக இருக்காது!

5. ஐந்தாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால், ஜாதகனைப் பரபரப்பான ஆசாமியாகவும், தகறாறு செய்யும் மனப்பான்மையுடையவனாகவும் மாற்றிவிடும். ஆனால் ஜாதகன் அதிகாரமுள்ளவனாக இருப்பான்.

6. ஆறாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு, ஜாதகனுக்குப் பலவிதமான பிரச்சினைகளைக் கொடுக்கும். எதிரிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். சிலருக்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும்.

7. ஏழாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு செல்வம், புகழ் இரண்டையும் கொடுக்கும். அதே நேரத்தில் திருமண வாழ்வில் கசப்பை உண்டாக்கி விடும். கசப்பு எந்த அளவு வேண்டுமென்றாலும் இருக்கலாம். உறவுகளை ஓரங்கட்டிவிடும். சிலருக்கு இதயநோய்கள் உண்டாகும். ஒரு ஆறுதல் ஜாதகன் எதிரிகளைத் துவம்சம் செய்து விடுவான். சிலருக்கு இரண்டு தடவைகள் திருமணம் நடக்கலாம்.

8. எட்டாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு மிகவும் மோசமானது. அழிவை ஏற்படுத்தக் கூடியது. திருமண வாழ்வில் முறிவை ஏற்படுத்தும். அல்லது கணவன்/மனைவி இருவரில் ஒருவரைக் காலி செய்துவிடும்.சிலருக்கு முதல் திருமணம் ரத்தாகி, இரண்டாவது திருமணம் நடக்கலாம். சிலருக்கு அதீதமான பணத்தைக் கொடுக்கும். அதே நேரத்தில் ஆயுளைக் குறைத்து விடும் அபாயமும் உண்டு!

9. ஒன்பதாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு சக்தி, அதிகாரம், வலிமை, வளமை என்று எல்லாவற்றையும் கொடுக்கும், அதே நேரத்தில் ஜாதகனின் ஆயுளைக் குறைத்து விடும் அபாயமும் உண்டு! அல்லது ஜாதகன் விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயமும் உண்டு!

10. பத்தாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால் ஜாதகனுக்கு அதீத வருமானம் உடைய வேலை அல்லது தொழில் அமையும். சிலருக்கு உடல் வலிமை இருக்கும். மன வலிமை இருக்காது.

11. பதினொன்றாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால் ஜாதகனுக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். சமூக சேவையில் ஜாதகன் பெயர் எடுப்பான். ”காசுமேல காசு வந்து கொட்டுகிற நேரம் இது; ராஜலக்‌ஷ்மி வந்து கதவைத் தட்டுகிற நேரம் இது” என்று பாடிக் கொண்டிருப்பான். பணம் கொட்டும். சிலரின் ஜாதகத்தில் செவ்வாய்க்கு இந்த இடம் உகந்த இடம் இல்லையென்றால், ஜாதகன் ஆர்வக்குறைவாக இருப்பான். ஆனால் பணம் மட்டும் மழையாகக் கொட்டும்!

12. பன்னிரெண்டாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால் தீமைகளே அதிகம். இடம் என்ன சாதாரணமான இடமா என்ன? விரைய ஸ்தானம் (House of Loss) உடல் உபத்திரவம், மன உபத்திரவம், கடன், அதிர்ஷ்டமின்மை, உறவுகளின் இழப்பு, நண்பர்களின் பிரிவு என்று எல்லாமுமே படுத்துவதாக இருக்கும். கவலைப் படாதீர்கள், இந்த அமைப்பு உங்களுக்கு இருந்தால், நீங்கள் ஞானியாகி விடலாம். ஞானியாகிவிட்டால் அதைவிட மேன்மையான நிலை எதுவும் இல்லை!

ஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கும் நிலைகளுக்கான பலன்கள்!

1 லக்கினத்தில் செவ்வாய் இருந்தால்: ஜாதகன் கோபக்காரன். எடுத்தற்கெல்லாம் சட்டென்று கோபம் வரும்! உக்கிரமானவன். சிலருக்கு அடிக்கடி உடற் காயங்கள் ஏற்படும். சிலருக்கு (ஜாதகத்தில் மற்ற அமைப்புக்கள் சரியாக இல்லாவிட்டால்) குறைந்த ஆயுளிலேயே போர்டிங் பாஸ் கொடுக்கப்பட்டுவிடும். ஒரு வியாதி போனால் இன்னொரு வியாதி கதைவைத் திறந்து கொண்டு உடனே வரும்! ஜாதகன் சலனபுத்திக் காரணாக இருப்பான். தீரனாகவுன் இருப்பான் சிலர் வன்கன்மையாளராகவும் (cruel) இருப்பார்கள்.

2 இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: குறைந்த அளவு செல்வம் இருக்கும். கல்வியும் குறைந்த அளவே இருக்கும். சிலர் தீயவர்களுக்கு சேவை செய்வார்கள். வாக்குவாதம் செய்பவர்கள் (argumentative) செவ்வாயின் இந்த அமைப்பு, கல்விக்கும், செல்வத்திற்கும் ஏற்றதல்ல! இரண்டாம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தால் அது செல்வத்திற்குக் கேடானது. செல்வம் இருக்காது. அப்படியே தேடிப் பிடித்தாலும் தங்காது அல்லது நிலைக்காது!

3 மூன்றாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: ஜாதகன் பிடிவாதக்காரன். சாதனையாளன்.செல்வச்சூழல்களை அனுபவிக்கக்கூடியவன். புகழ் பெறுவான். எல்லா வசதிகளும் வந்து சேரும். தனித்தன்மை வாய்ந்தவன்.நீண்ட ஆயுளை உடையவன். தர்ம, நியாயங்கள், நன் நடத்தைகள் ஆகியவற்றை உதறி விட்டுச் சிலர் வாழ்வார்கள்.

4 நான்காம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: உறவுகள், வீடு வாசல், சொத்துக்கள், தாய்ப்பாசம், வாகனவசதி போன்றவைகள் இல்லாத அல்லது கிடைக்காத அல்லது மறுக்கப்பட்டவனாக ஜாதகன் இருப்பான். இது அத்தனையும் எனக்கு இருக்கிறது என்று ஒருவர் சொன்னால் இந்த அமைப்பின் மேல் சுபக்கிரகங்களின் பார்வை பட்டுக் கொண்டிருக்கும் ஜாதகன் பெண்களின்மேல் அதீதமான ஈர்ப்பு உள்ளவன். சிலர் பெண்களுக்காக உருகி கோதாவரி ஆறு போல ஓடக்கூடியவர்களாக இருப்பார்கள். மனப் போராட்டங்கள் மிகுந்த ஜாதகம். (பெண்பித்து இருந்தால் மனப்போராட்டம் ஏன் இருக்காது?

5 ஐந்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: பெண்குழந்தைகள் மட்டுமே இருக்கும். வாழ்க்கை வசதிகள், சொத்துக்களில் குறைபாடுகள் இருக்கும். அல்லது சொத்து, சுகம் இல்லாமல் இருக்கும். சிலர் மனம் வெறுக்கும் சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும். தர்ம, நியாயங்கள், நன்நடத்தைகள் ஆகியவற்றை உதறி விட்டு வாழ நேரிடும். சிலர் குறுகியமனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். சிலர் எடுத்ததெற்கெல்லாம் கோபம் கொள்ளுகின்ற குணத்தை உடையவர்களாக இருப்பார்கள்.

6 ஆறாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: நல்ல கட்டுமஸ்தான மற்றும் ஆரோக்கியமான உடல் அமைப்பு இருக்கும் ஜாதகன் ஊராக இருந்தாலும் சரி, போராக இருந்தாலும் சரி, எதிரிகளை துவம்சம் செய்யக்கூடியவனாக இருப்பான். மனதில் பயமே இருக்காது. சிலருக்கு அதீத பெண் ஆசை இருக்கும் அதாவது ஆதீதமான காம உணர்வுகள் இருக்கும். எப்போதும் காம சிந்தனைகள் மேலோங்கி இருக்கும். சிலர் தங்கள் முயற்சியால் மேன்மை அடைவார்கள். புகழ்பெறுவார்கள்.

7 ஏழாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: தர்ம நியாயம் இல்லாத காரியங்களைச் செய்பவான ஜாதகன் இருப்பான். சுபக்கிரகங்களின் பார்வை இருந்தால் அது குறையும். சிலருக்கு மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சண்டைபிடிக்கும், அல்லது சண்டை போட்டு சட்டையைப் பிடிக்கும் மனப்பான்மை இருக்கும் அநேக நோய்கள் ஒவ்வொன்றாகத் தேடிவரும். மனையாளும் அதனால் பாதிக்கப்படுவாள். சிலர் கல்மனதுக்காரர்களாக இருப்பார்கள்.

8 எட்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: உடலும், உள்ளமும் நலமாக இருக்காது. சொத்து சேராது. சுகம் எட்டிபார்க்காது. சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கும். ஜாதகத்தில் வேறு அம்சங்கள் நன்றாக இல்லாவிட்டால் ஜாதகன் சீக்கிரமே சிவனடி சேர்ந்து விடுவான். தர்ம, நியாயங்களைப் பற்றிக் கவலைப்படாத மனதைக் கொண்டிருப்பான்.

9 ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: தந்தையோடு நல்ல உறவு இருக்காது. தந்தை மேல் அன்பு பாசம் இருக்காது. ஜாதகன் அதிரடியான ஆள். கடுமையான ஆள் ஜாதகன் கண்களுக்குப் புலப்படாத கலைகளில் ஆர்வம் உள்ளவனாக இருப்பான். அதில் தேர்ச்சியும் பெறுவான்.

10 பத்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: இது செவ்வாய் நமக்கு நன்மைகளை அள்ளித் தரும் இடம். ஜாதகன் ராஜ அந்தஸ்துடன் இருப்பான். வீரன். சூரன். வெற்றியாளன் ஆற்றல் உடையவன்.ஆர்வம் உடையவன். மகன்கள் இருப்பார்கள்.சொத்து சுகம், புகழ் என்று எல்லாம் கிடைக்கும்.

11 பதினொன்றாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: மகன்கள் இருப்பார்கள்.சொத்து சுகம், புகழ், வளம் எல்லாம் இருக்கும் வயாக்ரா சாப்பிடமலேயே ஆண்மை உணர்வு அதிகமாக இருக்கும் மன உறுதி இருக்கும்.(அது இருந்தால் இது இருக்காதா என்ன?) நிறைய நண்பர்கள், கூட்டாளிகள் இருப்பார்கள். ஜாதகன் உண்மையிலேயே தனித்தன்மை வாய்ந்தவனாக இருப்பான். ஜாதகன் எதையும் தெளிவாகப் பேசக்கூடியவனாக இருப்பான.

12 பன்னிரெண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: கண்களில் குறைபாடுகள் ஏற்படும். பயப்பட வேண்டாம். கண் நோய்கள் ஏற்படலாம். ஜாதகன் சோம்பல் உடையவன். சோம்பல்தான் அவனுடைய முதல் மனைவி! பொருளாதார இழப்புக்கள் இருக்கும். பல சொத்துக்களைத் தொலைப்பான் துன்பங்கள், துயரங்கள் என்று எல்லாமே ஜாதகனுக்கு எதிராகக் கொடிபிடிக்கும் சிலர் படு கருமியாக இருப்பார்கள். சாப்பிடும்போது காக்காய் வந்தால் கையைக் கழுவி விட்டு காகத்தை ஓட்டுபவர்கள் என்று வைத்துக் கொள்ளூங்கள்.

நவக்கிரகங்களும் உங்களின் தொழில் உத்தியோக அமைப்பும்

ஒருவரின் ஜீவன அமைப்பு பற்றி ஜோதிட ரீதியாக ஆராயும் போது ஜென்மலக்னத்திற்கு 10ம் வீடும், 10 ம் அதிபதியும், 10ம் வீட்டில் அமையப் பெற்ற கிரகமும், 10ம் அதிபதி அம்சத்தில் எந்த கிரகத்தின் வீட்டில் இருக்கின்றாரோ அக்கிரகமும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேற்கூறிய கிரகங்களில் எந்தக் கிரகம் அதிக பலம் பெறுகிறதோ அக்கிரகத்திற்குரிய துறையில் ஜாதகர் பிரகாசிக்க கூடியபோகம் உண்டாகும்.


சூரியன் 

ஜென்ம லக்னத்திற்கு 10 வீட்டில் வலுபெற்ற  கிரகமாக சூரியனிருந்தால் வாழ்வில் பல சாதனை படைக்கும் அமைப்பு, அதிகம் சம்பாதிக்க கூடிய யோகம் உண்டாகும். சூரியன் 10ல் பலமாக அ¬ந்திருந்தால் அரசு, அரசாங்க துறைகளில்  கௌரவபதவி, வங்கிபணி, மருத்துவத்துறை, வருமான வரித்துறை, நீதித்துறைகளில் அதிகாரமிக்க  பதவிகளை அடையும் வாய்ப்பு  நல்ல நிர்வாகத்திறனும் உண்டாகும். 

சூரியன் வீடான சிம்மத்திலும் சுபகிரகங்கள் அமைவது நல்லது. சிம்மத்தில் சனி, ராகு,  போன்ற பாவ கிரகங்கள்அமையப் பெற்றால், செய்யும் தொழிலில் போட்டி, பொறாமை மறைமுக எதிர்ப்புகள், வேலையாட்களால் பிரச்சனை, தேவையற்ற இன்னல்களை எதிர்கொள்ளக்கூடிய அமைப்பு, சட்ட சிக்கல்கள் உண்டாகும். சூரியன் வலுப்பெற்று அதன் தாசாபுக்தி நடைபெறும் காலங்களில் தொழில் உத்தியோக ரீதியாக உயர்வுகளும் உண்டாகும். அதுவே சூரியன் பலமிழந்து அமைந்து விட்டால் அக்காலங்களில் எதிர்பாராத இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

சந்திரன் 

சந்திரன் 10ல் வலுப்பெற்று அமைந்தால் பயணத்தொடர்புடைய துறை, ஜல சம்மந்தப்பட்ட துறை, கடல் சார்ந்ததுறை, உணவகதொழில், எண்ணெய் வகை சம்மந்தப்பட்டவை, பண்ணை தொழில், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்டவைகள், அன்றாடம் உபயோகிக்கக்கூடிய பொருட்கள், விலை உயர்ந்த துணி வகைகள், உப்பு சம்பந்தப்பட்ட தொழில், மலைப் பகுதிகளில் பணிபுரியும் அமைப்பு, தாய் வழியில் தொடரும் தொழில்களை செய்யும் வாய்ப்பு உண்டாகும். சந்திரனின் வீடான கடகத்திலும் சுபகிரகங்கள் அமைவது நல்லது. சந்திரன் பலம் பெற்று திசை நடைபெற்றால் தொழில், உத்தியோக ரீதியாக அடிக்கடி  பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய அமைப்பு கொடுக்கும். நல்ல வருமானத்தையும் ஈட்ட முடியும். அதுவே சந்திரன் பலமிழந்து அதன் திசை புக்திகள் நடை பெற்றால், தேவையற்ற மனக்குழப்பங்களால் தொழிலில் இடையூறு, லாபங்கள் குறையக்கூடிய சூழ்நிலை உண்டாகும். 

செவ்வாய் 

செவ்வாய் 10ல் பலம் பெற்றிருந்தால் பூமி மனை, ரியல் எஸ்டேட், தோட்டம், கட்டிட வல்லுனராகக்கூடிய அமைப்பு, ராணுவம், பாதுகாப்புத்துறை, போலீஸ், நிர்வாகத்துறை, வழக்கறிஞர் துறை போன்றவற்றில் உயர் பதவிகளை வகிக்கும் அமைப்பு உண்டாகும். மற்றும் மருத்துவத்துறை, அறுவை சிக்சை பிரிவுகள், உளவுத்துறை, சிறைத்துறை, வட்டாட்சியர், மின்சார பொறியாளர் போன்ற துறைகளில் சாதனை செய்யும்  அமைப்பு உண்டாகும். அனு உலை பணி தபால் துறை, தூதரக பணிபுரியக் கூடிய வாய்ப்பு, சர்க்க்கஸில் மிருகங்களை பழக்குபவராகவும், இரும்பு வெட்டுபவராகவும், தீப்பெட்டித் தொழில், மன்ணென்ணெய் தயாரிக்கும் பணியில் ஈடுபடுபவராகவும் இருக்கக்கூடிய வாய்ப்பு அமையும். செவ்வாய் பலம் பெற்று அமைந்து, செவ்வாய் திசை நடைபெற்றால் எந்த வொரு துறையிலும் நல்ல நிர்வாகத்திறமையுடன் செயல்பட்டு சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். அதுவே, செவ்வாய் பலமிழந்திருந்தால் பகைவர்களின்  தொல்லைகள் அதிகரித்து அதனால் தொழில் நஷ்டமடைய நேரிடும். 

புதன் 

புதன் 10ல் பலம் பெற்று அமையப் பெற்றால் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் பணி, கணக்கர்கள் கவிஞர்கள், எழுத்தாளர், பேச்சாளர் பணி, மற்றவர்களுக்கு உபதேசிக்கும் பணி, கணிதத்துறை, ஆடிட்டர், தபால் துறை, இன்சூரன்ஸ் துறை போன்றவற்றில் பணிபுரியக்கூடிய  வாய்ப்பு, செய்தி சேகரிக்கும் பத்திரிக்கை துறை, எடிட்டர்கள், பதிப்பாளர் பணி, ஜோதிடத்துறை, பெயிண்டிங், பிரிண்டிங், புத்தக வர்த்தகம், டிசைன்  வரைகலைப் பணி போன்றவற்றில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு அமையும். தாய் வழி மாமன்களுடன் சேர்ந்து தொழில் செய்யும் வாய்ப்பும் உண்டாகும். புதன் வலுப்பெற்று அமைந்து, அதன் திசை நடைபெறும்போது தொழில், பொருளாதார ரீதியாக ஏற்றத்தை அடைய முடியும். அதுவே புதன் வலுவிழந்து அதன் திசை நடைபெற்றால் உடன் பணிபுரிபவர்கள் உடன் பழகுபவர்களாலேயே தொல்லை ஏற்படும்.

குரு 

குரு 10ல் வலுப்பெற்று அமையப் பெற்றால் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மருத்துவ ஆலோசகர்கள், வரித்துறை, கல்வித்துறை, அரசியல் அமைப்பு உருவாக்குதல், ஆலய அறப்பணிகள், ஆராய்ச்சியாளர்கள், வர்த்தகத்துறை, சட்டம் ஒழுங்கு பாதுகாத்தல், வங்கிகளில் பணத்தை கையாளும் துறை, மத சமய தொடர்புடைய துறைகள், ஜோதிடத் துறை, அறக்கட்டளை பணிகள் போன்றவற்றில் ஈடுபட்டு சம்பாதிக்கக்கூடிய அமைப்பு உண்டாகும். குரு பலம் பெற்றிருந்து அதன் தசா புக்திகள் நடைபெறும் காலங்களில் தாராள தனவரவும், செய்யக்கூடிய தொழில் உத்தியோகத்தில் உயர் பதவிகள் தேடி வரக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். அதுவே குரு பலமிழந்து திசை நடைபெற்றால் தைரியமற்ற நிலை, தேவையற்ற அவப்பெயர்களை சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை, உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடி, வீண் பழிச் சொற்கள் உண்டாகும். 

சுக்கிரன் 

சுக்கிரன் 10ல் பலம் பெற்று அமைந்திருந்தால் கலை, இசை, நடிப்பு, நாட்டியம், சங்கீதத் துறை போன்றவற்றில் சம்பாதிக்கும் வாய்ப்பும், தங்க நகைகள் விற்னை, ஆடம்பர ஆடைகள் சம்பந்தப்பட்ட தொழில், மாட மாளிகைகள் கட்டும் பணி, பட்டுத் துறை, பால் துறை, வாசனை பொருட்கள் விற்பனை, குதிரை பந்தயம் போன்றவற்றில் பணம் சம்பாதித்தல், மருந்து விற்பனை போன்றவற்றில் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். சுக்கிரன் வலுபெற்று அமைந்து திசை நடைபெற்றால் தொழில் ரீதியாக வாழ்வில் பல வகைகளில் முன்னேற்றங்கள் தேடிவரும். செல்வம், செல்வாக்கு பெருகும். அதுவே சுக்கிரன் பலமிழந்து திசை நடைபெற்றால் தொழில் ரீதியாக இழப்புகள், பெண்களால் அவமானங்கள் ஏற்பட்டு நஷ்டம் உண்டாகும்.

சனி 

சனி 10ல் பலம் பெற்று அமைந்திருந்தால் விவசாயத் துறை, மருத்துவத்துறை, இன்சூரன்ஸ், ஏஜென்ஸி, பஞ்சாயத்துத் துறை, மருந்து தொழிற்சாலைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு, இரும்பு, ஈயம் மற்றும் எண்ணெய் வியாபாரம், நிலம், சொத்து, வர்த்தக கூட்டுறவு துறைகளில் பணி செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். காவலாளி, தோட்ட வேலை, மாட்டு தொழுவத்தில் பணி புரியும் வேலை, செருப்பு தைத்தல் போன்ற தொழில்களை செய்ய நேரிடும். சனி பலம் பெற்றிருந்தால் தொழிலில் நிறைய சம்பாதிக்கக்கூடிய யோகத்தை கொடுக்கும். அதன் தசாபுக்தி காலங்களில் மேலும் மேலும் உயர்வு உண்டாகும். அதுவே, சனி பலமிழந்திருந்தால் தேவையற்ற பழக்க வழக்கங்களால் திருடி சம்பாதிக்கும் சூழ்நிலை, அடிமைத் தொழில், வாழ்நாள் முழுவதும் கஷ்ட ஜீவனம் நடத்தக்கூடிய நிலை உண்டாகும். 

ராகு

ராகுபகவான் 10ல் அமையப் பெற்றால் விண்வெளிகளில் பயணம் செய்யும் தொழில், வானொலி, சர்க்கஸ் போன்ற துறைகளிலும், தெய்வீகப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பும் உண்டாகும். ராகுவுக்கு சொந்த வீடு இல்லை என்ற காரணத்தால் ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் ராகு தசா புக்தி காலங்களில் தொழில், உத்தியோக ரீதியாக சம்பாதிக்கும் யோகம் சிறப்பாக அமையும். அதுவே, ராகு நின்ற வீட்டதிபதி பலமிழந்து ராகு பாவ கிரகங்களின் பார்வை சேர்க்கைப் பெற்றிருந்தால் இழிவான வேலைகளைச் செய்யக்கூடிய அமைப்பு, அடிமைத் தொழில், தேவையற்ற பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி சம்பாதிக்கவே முடியாமல் வாழ்க்கையே பாலாகும்.

கேது 

கேது 10ல் இருந்தால் விஞ்ஞானம், வெளிநாட்டு வர்த்தகம், மெஸ்மரிசம், கட்ட பஞ்சாயத்து மூலமும், ஆன்மிக தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பும் அமையும். ராகுவுக்கு கூறியதுபோல கேதுவுக்கும் சொந்தவீடு இல்லை என்பதால் மேற்கூடிய பலன்களே உண்டாகும். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும்

துர்க்கா தேவியை வழிபட்டால் பில்லி, சூன்யம் பறந்தோடும்

சிறப்பான திதிகளில் ஒன்று பவுர்ணமி. இந்த நாளில் சூரியன் இருக்கும் ராசிக்கு ஏழாவது ராசியில் சந்திரன் இருந்து இருவரும் பார்த்துக் கொள்வதால் இந்த பவுர்ணமி யோகம் உண்டாகிறது. சந்திரன் அம்பாளின் அம்சமாக ஜோதிட, வேத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.

கிரகங்களின் அதிர்ஷ்டம் பெற்ற நாள் பவுர்ணமி. அன்றைய தினம் கடல் தன் இயல்பு நிலையில் இருந்து மாறி சீற்றத்துடன் கொந்தளிக்கும். அதுபோல நம் மனமும் அமைதியில்லாமல் அலை பாயும். மனோ வியாதி உள்ளவர்களுக்கு அன்றைய தினம் சற்று கடினமான தினமாக இருக்கும். சந்திரன் மனோகாரகன், மனத்தை ஆள்பவன். அதனால் பவுர்ணமியில் இந்த மாற்றங்கள் ஏற்படுவதாக சொல்கின்றன சாஸ்திரங்கள்.

பவுர்ணமி தினத்தில் அம்பாள் வழிபாடு மிகவும் சிறப்பானது. ஸ்ரீசக்கர நாயகியான ஆதிபராசக்தி பதினாறு அம்சங்களாக மகா திரிபுர சுந்தரியாக பவுர்ணமியன்று அருள்பாலிப்பதாக ஐதீகம். மேலும் ஸ்ரீ சந்திரிகா என்ற அவதாரத்திலும், துர்க்கையின் அம்சத்திலும் அம்பாள் இருப்பதாக சித்தர்கள் தங்கள் நூலில் குறிப்பிட்டுள்ளனர். பவுர்ணமி தினத்தில் மாலை ஆறு மணிக்கு மேல் சத்திய நாராயணன் பூஜை செய்வது மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். சித்தர்களின் கூற்றுப்படி, நம் துக்கங்களையும், தடைகளையும், இடையூறுகளையும், நோய், நொடிகளையும், பில்லி, சூன்யம், ஏவல் போன்ற தீவினைகளையும், கிரக தோஷங்களையும் போக்கும் வழிபாடு ஸ்ரீதுர்க்கா தேவி வழிபாடு. துர்க்கா தேவியை ஒவ்வொரு பவுர்ணமி வரும் கிழமைக்கேற்ப வழிபடுவதால் அந்த கிரக தோஷ அவஸ்தையில் இருந்து விடுபடலாம்.

ஞாயிற்றுக்கிழமையில் வரும் பவுர்ணமி, சூரியனுக்கு ஏற்றதாகும். சூரிய திசை நடப்பவர்கள், சூரிய தோஷம் உள்ளவர்கள், கிருத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரக்காரர்கள், 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், சிம்ம ராசியில் பிறந்தவர்கள் ஆகியோர் வழிபட சகல யோகங்கள் விருத்தியடையும். துர்க்கைக்கு சிகப்பு புடவை அல்லது சட்டைத் துணி சாற்றி, செந்தாமரை மலர் வைத்து, அர்ச்சனை செய்ய வேண்டும். செவ்வாழைப்பழம், சர்க்கரைப் பொங்கல் படைத்து பக்தர்களுக்கு வழங்கலாம். தீராத நோய்கள் தீரும். மன அமைதி ஏற்படும்.

திங்கட்கிழமையில் வரும் பௌர்ணமி சந்திரனுக்கு ஏற்ற தினமாகும். சந்திர திசை நடப்பவர்கள், ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரக்காரர்கள், 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் கடக ராசியில் பிறந்தவர்கள் ஆகியோர் வழிபட யோகங்கள் விருத்தியடையும். துர்க்கைக்கு வெண்பட்டு, ஆரஞ்சு புடவை சாற்றி மல்லிகை பூ மாலை சூட்டி அர்ச்சனை செய்ய வேண்டும். அனைத்து பழவகைகளுடன் கல்கண்டு சாதம் படைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக தரலாம். மன அமைதியும், சுபகாரிய விஷயங்களும் கூடிவரும். வெளிநாட்டு பயணங்களில் இருக்கும் தடை விலகும்.

செவ்வாய்க்கிழமையில் வரும் பவுர்ணமி, அங்காரகன் எனும் செவ்வாய்க்கு ஏற்ற தினமாகும். செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், மிருக சீரிடம், சித்திரை, அவிட்ட நட்சத்திரக்காரர்கள், 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், மேஷம், விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் ஆகியோர் வழிபட யோகங்கள் விருத்தியடையும். துர்க்கைக்கு சிகப்பு நிற புடவை அல்லது துணி சாற்றி செவ்வரளி, சிகப்பு நிற பூக்களால் அர்ச்சனை செய்து பழங்கள், சித்ரான்னம் படைத்து பக்தர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். எதிர்ப்புகள் மறையும். சகோதர உறவுகளால் நன்மை ஏற்படும். நிலம் சொத்து சேர்க்கை ஏற்படும்.

புதன்கிழமையில் வரும் பவுர்ணமி புத பகவானுக்கு ஏற்ற தினமாகும். புதன் திசை நடப்பவர்கள், ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரக்காரர்கள், 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், மிதுனம், கன்னி ராசியில் பிறந்தவர்கள் ஆகியோர் வழிபட சகல யோகங்கள் விருத்தியடையும். துர்க்கைக்கு பச்சைநிற புடவை சாற்றி மரிக்கொழுந்து, முல்லை, மல்லிகையால் அர்ச்சனை செய்து பால் பாயாசம், பஞ்சாமிர்தம் படைத்து பக்தர்களுக்கு தரலாம். கல்வி தடை விலகும், ஞாபக சக்தி அதிகரிக்கும். மாமன் வகை உறவுகள் பலப்படும்.

வியாழக்கிழமையில் வரும் பவுர்ணமி வியாழன் என்ற குருவிற்கு ஏற்ற தினமாகும். குரு திசை நடப்பவர்கள், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள், 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் தனுசு, மீனம் ராசியில் பிறந்தவர்கள் ஆகியோர் இந்நாளில் வழிபட சகல யோகங்கள் விருத்தியடையும். துர்க்கைக்கு மஞ்சள் நிற புடவை அல்லது ஜாக்கெட் துணி சாற்றி, சாமந்தி, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்து கொண்டைக்கடலை சுண்டல், தயிர் சாதம், பழங்கள் படைத்து பக்தர்களுக்கு வழங்கினால் சுபகாரியத் தடைகள் விலகும். தோஷங்கள் நீங்கும். செல்வாக்கு, பொன், பொருள் சேர்க்கை உண்டு.

வெள்ளிக்கிழமையில் வரும் பவுர்ணமி சுக்கிரனுக்கு ஏற்ற தினமாகும். திருமணத் தடை, களத்திர தோஷம் உள்ளவர்கள் சுக்கிர திசை நடப்பவர்கள் பரணி, பூரம், பூராட நட்சத்திரக்காரர்கள், 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ரிஷபம், துலாம் ராசியில் பிறந்தவர்கள், ஆகியோர் வழிபட, சகல யோகங்கள் விருத்தியடையும்.  துர்க்கைக்கு வெண்பட்டு புடவை சாற்றி மல்லிகைப்பூ, கதம்ப பூமாலை, பழ வகைகள் நிவேதனம் செய்ய வேண்டும். பிரிந்த தம்பதியர் சேருவார்கள். தடைபட்ட கட்டிட வேலைகள் நிறைவேறும். கையில் பணம் புரளும்.

சனிக்கிழமையில் வரும் பவுர்ணமி, சனீஸ்வரருக்கு ஏற்ற தினமாகும். நாவில் சனி, அஷ்டம சனி, ஏழரை சனி மற்றும் சனி திசை நடப்பவர்கள், பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள், 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், மகரம், கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஆகியோர் வழிபட சகல யோகங்கள் விருத்தியடையும். துர்க்கைக்கு நீலநிற புடவை அல்லது நீலத்துணி சாற்றி மரிக்கொழுந்து, சங்கு பூ, கதம்ப மாலை அர்ச்சனை செய்து காய்கறி கலந்த சாதம், எள் சாதம், தயிர் சாதம், பாலில் தேன் கலந்து படைத்து பக்தர்களுக்கு தந்தால் தீராத நோய், நொடிகள் தீரும். மன அமைதி ஏற்படும். கிரக தோஷம் விலகும்.