எண் 7 (7, 16,25)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

7 என்ற எண்ணும் மனித வாழ்வில் பெருமை மிகுந்ததாகவே கருதப்படுகிறது.. வானவில்லின் வண்ணங்கள் ஏழு, கடல்கள் ஏழு, ஏழு ரிஷிகள், வாரத்தின் கிழமைகள் ஏழு என ஏழாம் எண்ணும் பல சிறப்புகளைப் பெற்று விளங்குகிறது. 7,16,25 எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் ஆவார்கள். ஏழாம் எண்ணுக்குரிய கிரகம் கேதுவாகும். ஏழாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு சந்திரனின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்களின் குண நலன்களும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏழாம் எண்ணிற்குரிய ஆங்கில எழுத்துக்கள் ளி. ஞீ  ஆகியவை.

குணநலன்கள்

ஏழாம் எண்ணில் பிறந்தவர்களின் சிந்தனை, செயல்பாடு, அணுகுமுறையாவும் தனித்தன்மை வாய்ந்ததாகவே இருக்கும். தான் பிறர் வழியில் செல்லாது தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொள்வது இவர்களின் நோக்கமாகும்.  இவர்களை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ளமுடியாது. தெய்வ பக்தியும், இறை வழிபாடுகளிலும் அதிக நாட்டம் இருக்கும். நல்லதோ கெட்டதோ பிறருக்காக தம்மை மாற்றிக்கொள்ளமாட்டார்கள். சில நேரங்களில் கலகலப்பாக மற்றவரை சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட இவர்கள், சில நேரங்களில் அதிக மௌனத்தை சாதிப்பார்கள்.  தன்னம்பிக்கையும் துணிச்சலும் பெற்றவர்களாக இருந்தாலும், ஒருவித அச்சம் மனதில் நிறைந்திருக்கும். பல்வேறு விதமான வாய்ப்புகள் வாழ்வில் முன்னேறுவதற்கு கிடைத்தாலும், தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என பிடிவாத குணத்துடன் தன் வழியிலே செல்வார்கள். இதனால் வாழ்வில் பல சமயங்களில் சங்கடமான சூழ்நிலைகளையே சந்திக்க நேரிடும். கலைத் துறை, இசைத்துறை போன்றவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும். வாழ்வில் பல்வேறு சாதனைகளை செய்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

பொது காரியங்களில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு உதவி செய்வதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. வாழ்க்கையில் எப்போதுமே சுகத்தை அனுபவிக்க துடிப்பவர்கள். இவர்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ள நேரம் கிடைப்பது அரிது. கற்பனை சக்தி அதிகம் பெற்றவர்கள். ஆதலால் சின்ன விஷயங்களுக்கு கூட  அதிகம் கவலைப்படுவார்கள். எந்தவொரு காரித்திலும் ஈடுபடுவதற்கு முன்னாலும் தீர ஆலோசித்த பின்தான் ஒரு முடிவுக்கு வருவார்கள். வெகுளித்தனம் படைத்தவர்களாயினும் முக்கிய கருத்துக்களை மறைத்து வைத்துக் கொள்வார்கள். கைமாறு எதிர்பாராமல் பிறருக்காக பல அரிய காரியங்களில் ஈடுபட்டு பலரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். கொடுத்த வாக்குறுதிகளை தவறாமல் காப்பாற்றுவார்கள்.

உடல்நிலை ஆரோக்கியம்

ஏழாம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நடுத்தர உயரம் கொண்டவர்களாக இருப்பார்கள். இளம் வயதில் மிகவும் ஒல்லியான தோற்றம் உடையவர்களாக இருந்தாலும் நடு வயதில் நல்ல சதைபிடிப்பு உண்டாகும். உடல் அமைப்பும் மற்றவர்களை கவர்ந்திழுப்பதாக இருக்கும். கூர்மையான மூக்கு, கெட்டியான பாதங்கள், வட்டமான முகமும், மாநிறமும், குவிந்த உதடுகளும் இருக்கும். மெல்லிய குரலில் பேசினாலும் பேச்சில் உறுதி இருக்கும் நடையில் வேகமும், குறுகுறுப்பான பார்வையும் இருக்கும். இவர்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும். வாய்வு சம்மந்தப்பட்ட நோய், மலசிக்கல்கள், சுவாச நோய்கள், காச நோய் போன்ற பாதிப்புகளும் உண்டாகும். எந்த நோய் ஏற்பட்டாலும் மருத்துவ செலவுகள் உண்டாகாமல் குணமாகாது. தேவையற்ற பழக்க வழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பது உடல் நலத்திற்கு நல்லது.

குடும்ப வாழ்க்கை

ஏழாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்வு அவ்வளவு திருப்தியளிக்கும் என்று கூறமுடியாது. வாழ்வில் சுக துக்கங்கள் மாறி மாறி வரினும் எதையும் பொருட்படுத்த மாட்டார்கள். அமைதி ஏற்பட வேண்டும் என்பதற்காக இவர்கள் செய்யும் முயற்சிகள் ஓரளவுக்கு பயன் அளிக்கத்தான் செய்யும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகம் கொண்டவர்கள். ஆதலால் குடும்ப சுகத்திற்காக அவ்வளவு ஈடுபாட்டுடன் செயல்பட மாட்டார்கள். உற்றார், உறவினர்களாலும், உடன் பிறந்தவர்களாலும் ஓரளவுக்கே அனுகூலப் பலன்கள் உண்டாகும்.  தாய், தந்தையரால் அவ்வளவு நற்பலன்கள் உண்டாகாது. என்றாலும் தாயின் ஆதரவும் ஆசியும் எப்போதும் உண்டு.  இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் யோகசாலிகள் என்றே கூற வேண்டும். கோபத்தைக் குறைத்துக் கொண்டால் வாழ்க்கை துணையால் அனுகூலம் உண்டாகும்.

பொருளாதாரம்

ஏழாம் எண்ணில் பிறந்தவர்களின் ஆரம்ப கால வாழ்க்கை வசதி குறைந்து காணப்பட்டாலும், இவர்கள் வளர வளர பொருளாதார நிலையும் வளர்ந்து கொண்டே இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் இவர்களுக்கு கிடைப்பது அரிது. எதிலும் எதிர்நீச்சல் போட்டுதான் முன்னேற முடியும். இவர்களுக்கு கடன் வாங்குவதென்பது பிடிக்காத விஷயம்.  கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அவற்றை அடைக்கக்கூடிய ஆற்றலும் கொண்டவர்கள். பொருளாதார நிலையில் சங்கடங்களை சந்திக்க நேர்ந்தாலும் இது விதியின் பயன் என கருதாமல் முன்னேற்றத்திற்கான வழிகளை கண்டு பிடித்து மேன்மையடைவர். நிலையான வருமானம் இல்லாவிட்டாலும் கவலைப்படாமல் எப்படியாவது சமாளித்து விடுவார்கள். பூர்விக வழியில் ஓரளவுக்கு செல்வம், செல்வாக்கு வந்து சேரும்.

தொழில்

ஏழாம் எண்ணில் பிறந்தவர்கள் பல துறைகளில் பிரசித்தி அடைவார்கள். 7ம் எண்ணிற்கு ஞானக்காரகன் கேது அதிபதி  என்பதால், பல புதிய சிந்தனைகளால் புதிய கண்டுபிடிப்புகளை செய்வார்கள். திரைப்படத் துறைகளிலும் முன்னேற்றம் பெறுவார்கள். ஜலத் தொடர்புடைய தொழில்கள், படகு, கப்பல் மூலமாக வியாபாரங்கள், தண்ணீரில் மீன் பிடிக்கும் தொழிலில் கூட மேன்மைகள் உண்டாகும். மத சம்பந்தமான தத்துவ பேச்சாளர்களாகவும் விளங்குவார்கள். கடல் வழியில் ஏற்றுமதி இறக்குமதி போன்ற துறைகளிலும் சம்பாதிக்கும் யோகம் அமையும். உத்தியோகத்துறையில் அவ்வளவு உயரிய பயணிகள் கிடைக்காது. சமையல் வேலை, வீட்டு வேலை செய்பவர்களாகவும் இருப்பார்கள். ரசாயன ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட துறைகளும் இவர்களுக்கு ஏற்றதே.

நண்பர்கள், பகைவர்கள்

ஏழாம் எண்ணில் பிறந்தவர்கள் சற்று குழப்பமான மனநிலையை உடையவர்களாக இருப்பார்கள். பிடிவாத மான குணம் இருக்கும். 8,5 ம் எண்ணில் பிறந்தவர்கள் அவர்களை அனுசரித்து செல்லும் குணமுடையவர்களாக இருப்பார்கள். 1,2,9 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுடன் அனுசரித்து செல்வது கடினமான காரியம்.

கேதுவுக்குரிய காலம்

கேதுவும் சந்திரனைப் போலவே ஆற்றல் கொண்டவர் என்பதால் கேதுவுக்கும் திங்கட்கிழமையே உகந்த நாளாக உள்ளது. கேதுவுக்கு ஒரு மணி நேரமே குறுகிய கால அளவு ஆகும்.

கேதுவுக்குரிய திசை

வடமேற்கு திசை கேதுவுக்குரியது. ஜல சம்பந்தப்பட்ட இடங்கள் கேதுவுக்கு உரியவை.

கேதுவுக்குரிய கல்

கேதுவுக்குரிய கல் வைடூரியம், லேசான பச்சையும், பழுப்பும் கலந்த மஞ்சள் நிறமும் உடையது வைடூரியம். இந்த இரண்டு நிறமும் ஒரே கல்லில் காணப்படுகிறது.  எனவே இது பார்ப்பதற்கு பூனை கண் போன்று இருப்பதால் கேட் ஐ என்றும் அழைக்கின்றனர். இதற்கு மாற்றாக ஒப்பல் என்ற கல்லையும் அணியலாம். வைடூரியம் மிகவும் தெய்வீக தன்மை வாய்ந்ததால் இதற்கு எந்த தீட்டும் படாமல் பாதுகாத்து அணிந்து கொள்வதன் மூலம் வாழ்வில் பல நன்மைகள் உண்டாகும்.

பரிகாரம்

கேது பகவானுக்கு பரிகாரம் செய்வது, சர்ப சாந்தி செய்வது நல்லது. கணபதியை தினமும் வழிபாடு செய்வது, சதுர்த்தி விரதங்கள் மேற்கொள்வது, கணபதி ஸ்தோத்திரம் சொல்வது மூலம் செல்வம், செல்வாக்கு பெருகும். 

அதிர்ஷ்டம் தருபவை

அதிர்ஷ்ட தேதி - 7,16,25

அதிர்ஷ்ட நிறம்- வெள்ளை, காவி

அதிர்ஷ்ட திசை-வடமேற்கு

அதிர்ஷ்ட கிழமை -திங்கள்

அதிர்ஷ்ட கல் -வைடூரியம்

அதிர்ஷ்ட தெய்வம்-கணபதி

No comments:

Post a Comment