இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில்
பதிமூன்றாவது இடத்தை பெறுவது அஸ்த நட்சத்திரமாகும். இதன் அதிபதி சந்திர
பகவானாவார். இது கன்னி ராசிக்குரிய நட்சத்திரமாகும். இது உடலில் சிறு
நீர்ப்பை, குடல் சுரப்பிகள் போன்றவற்றை ஆளுமை செய்கிறது. இது ஒரு பெண்
நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர்
வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் பூ,ஷ,ந,ட ஆகியவை. தொடர் எழுத்துக்கள் பூ
கே ஆகியவையாகும்.
குண அமைப்பு;
அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நட்சத்திராதிபதி சந்திர பகவான்
என்பதால் அழகான முகமும் வசீகரமான உடலமைப்பும் கொண்டவர்களால் இருப்பார்கள்.
எப்பொழுதும் சுறுசுறுப்பானவர்களாகவும், சிறந்த நகைச்சுவையாளர்களாகவும்
இருப்பார்கள். அதிக உணர்ச்சி வசப்படக் கூடியவர்களாக இருப்பதால் சட்டென
கடினமான வார்த்தைகளை உபயோகிப்பார்கள். என்றாலும் மற்றவர்களுக்கு உதவி செய்ய
கூடிய பரோகார சிந்தனைப் பெற்றவர்கள். வெகுளியான குணமிருக்கும். மிகவும்
சிக்கனமாக செயல்படுவார்கள். அதிக சுயநலமும் இருக்குமாதலால் பண விஷயத்தில்
மிகவும் கவனமுடன் இருப்பார்கள். இயற்கையை ரசிப்பார்கள்.
குடும்பம்;
சிறு வயதில் கஷ்டப்பட்டாலும் மத்திய வயதிலிருந்து வசதி வாய்ப்பபுகள்
பெருகும். தாய் சொல்லை மதித்து நடப்பார்கள். காதல் வயப்படக்கூடியவர்கள்.
மனைவி சொல்லே மந்திரம் என நினைப்பார்கள். எந்த முடிவாக இருந்தாலும் மனைவியை
கலந்தாலோசித்தே முடிவெடுப்பார்கள். அளவான குடும்பத்தை பெற்றவர்கள்.
மற்றவர்கள் விஷயத்தில் தேவையின்றி தலையிட மாட்டார்கள். இனிப்பாக பேசியே
பெண்களை கவர்ந்திழுத்து விடுவார்கள். பிற மதத்தினரைக் கூட மதிக்கும்
பண்பும், உற்றார் உறவினர்களுக்கும் உதவி செய்யும் ஆற்றலும் கொண்டவர்கள்.
தன்னை நம்பி வந்தவர்களை காப்பாற்றும் இரக்க சுபாவம் உடையவர்களாதலால் பாவ
புண்ணியம் பார்த்து உதவுவார்கள். உணவுப் பிரியர்கள்.
தொழில்;
அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எடுத்த காரியங்களை முடித்தே தீர
வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பானவர்களாகவும்,
சிறந்த நகைச்சுவையாளர்களாகவும் பல துறைகளில் அனுபவம் பெற்றவர்களாகவும்
இருப்பார்கள். சித்தர் பீடாதிபதி, அறிவியல் அறிஞர், வரலாற்று பேராசிரியர்,
கல்வெட்டு ஆய்வாளர் போன்ற துறைகளில் சாதனை செய்வார்கள். வெளியூர் பயணங்கள்
என்றால் தடையின்றி மேற்கொள்வார்கள். கமிஷன் கட்டிட காண்டிராக்ட், ஏஜென்ஸி,
வண்டி வாகனம் மற்றும் உணவு வகை போன்ற துறைகளிலும் சம்பாதிக்கும் யோகம்
அமையும். இசை ஆர்வம் உடையவர்கள் என்பதால் பணியில் ஈடுபடும் போது பாடிக்
கொண்டோ அல்லது பாடல்களை கேட்டுக் கொண்டோ இருப்பார்கள் எதிரிகளை தோல்வியுற
செய்வதில் வல்லவர்கள். எந்த துன்பம் வந்தாலும் தடையின்றி உழைத்து
கொண்டேயிருப்பார்கள். சில நெருக்கடி காலங்களில் பிறரின் மேலேறி சவாரி
செய்து முன்னேறவும் தயங்க மாட்டார்கள். கொள்கைகளில் சற்று அழுத்தமானவர்கள்
என்பதால் ஆறு மாதத்திற்கொரு முறை பணியாளர்களை மாற்றி கொண்டேயிருப்பார்கள்.
செய்வது தொழிலோ, உத்தியோகமோ அதில் சாதனைகள் பல படைப்பார்கள்.
நோய்கள்;
அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகள்,
தோல் வியாதி, கண்கள் மற்றும் மூக்கில் பிரச்சனைகள், உடலில் கெட்ட நீர்
சேரக் கூடிய சூழ்நிலை போன்றவற்றால் மருத்துவ செலவுகள் உண்டாகும்.
திசை பலன்கள்;
அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக வரும் சந்திர
திசையின் மொத்த காலங்கள் பத்து வருடம் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு
மீதமுள்ள சந்திர தசா காலங்களை அறிய முடியும். இத்திசை காலங்களில் உடல்
நிலையில் ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகள், தாய்க்கு சிறு சிறு சோதனைகள்
தோன்றி மறையும்.
இரண்டாவதாக வரும் செவ்வாய் திசையின் மொத்த காலங்கள் 7 வருடங்களாகும்.
இத்திசை காலங்களில் செவ்வாய் பலம் பெற்று அமைந்திருந்தால் கல்வியில்
முன்னேற்றம் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும் இல்லையெனில் கல்வியில் மந்த
நிலையையும், உடல் ரீதியாக ஆரோக்கிய பாதிப்பினையும் உண்டாக்கும்.
மூன்றாவதாக வரும் ராகு திசை காலங்கள் 18 வருடங்களாகும். இத்திசை காலங்களில்
கல்வியை தொடர முடியாத நிலை, குடும்பத்தில் பிரச்சனை, எதிலும் எதிர்
நீச்சல் போட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தேவையற்ற நட்புகளாலும் பிரச்சனைகள்
உண்டாகும்.
நான்காவதாக குரு திசை சாதிக்க வைக்கும் நல்ல தொழில் யோகத்தையும் பொருளாதார
மேன்மையையும் கொடுக்கும். ஐந்தாவதாக வரும் சனி திசை காலங்கள் யோகத்தை அள்ளி
தரும் சமுதாயத்தில் பெயர் புகழ் உயரும். பொருளாதாரம் உயர்வடையும் பூமி,
மனை, வண்டி வாகனம், ஆடை ஆபரணம் யாவும் சேரும்.
செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
அஸ்த நட்சத்திரத்தில் உபநயனம், தாலிக்கு பெண் உருக்குதல், மஞ்சள்
நீராட்டுதல், சீமந்தம், காதணி விழா, கல்வி கற்க தொடங்குதல், யாத்திரை
செல்லுதல் ஆடை ஆபரணம், வண்டி வாகனம் வாங்குதல், புது மனை புகுதல் கடற்
பயணம் மேற்கொள்ளுதல், விதைவிதைத்தல், களஞ்சியத்தில் தானியம் சேர்த்தல்
மந்திரம் கற்றல், நோய்க்கு மருந்துண்ணுதல் புதிய வேலைக்கு விண்ணப்பித்தல்
வியாபாரம் தொடங்குதல், கிணறு வெட்டுதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
வழி பாட்டு ஸ்தலங்கள்
புவனகரி;
கடலூர் மாவட்டம், சிதம்பரத்திற்கு வடமேற்கில் 7 கி.மீ தொலைவிலுள்ள வேதபுரீசுவரர்&மீனாட்சியம்மன் அருள் பாலிக்கும் ஸ்தலம்.
திருவாதவூர்;
மதுரைக்கு வடகிழக்கில் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மாணிக்கவாசகர்
அவதாரத் தலத்திலுள்ள புருஷா மிருக தீர்த்தமும் வேதநாதர் ஆரணி
வல்லியம்மையும் அருள் பாலிக்கும் தலமும் சிறப்பு வாய்ந்தது.
செய்யாறு;
காஞ்சிபுரத்திற்கு தெற்கே 28 கி.மீ தொலைவிலுள்ள திருவத்திரத்திலுள்ள இறைவன் வேதபுரீசுவரர் இளமுலை நாயகி திருத்தலம்.
எழிலூர்;
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு மேற்கில் 4 கி.மீ தொலைவிலுள்ள வேதபுரீசுவரர் ஸ்தலம்.
தர்மபுரி;
தர்மபுரி மாவட்ட தலை நகரத்தில் கோட்டை கோயில் என்றழைக்கப்படும் தருப்
தலத்தில் அருள் பாலிக்கும் வேளாலீசுவரர் காமாட்சியம்மன் திருக்கோயில்
இத்தலங்களை வழிபாடு செய்வதால் அஸ்த நட்சத்திர காரர்கள் நற்பலனை அடைய முடியும்.
அஸ்த நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் அத்திர மரமாகும். இம்மரத்தை
வழிபாடு செய்வதால் நற்பலனை அடையலாம். இந்த நட்சத்திரத்தை ஏப்ரல் மாதத்தில்
இரவு சுமார் பன்னிரண்டரை மணிக்கு வானத்தில் காண முடியும்.
கூற வேண்டிய மந்திரம்
ஓம் பூர்புவஸ்ஸீவ தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோயோ ப்ரசோதயாத்!!
பொருந்தாத நட்சத்திரங்கள்
ரோகிணி, திருவாதிரை, சுவாதி, திருவோணம், சதயம் போன்ற ஆண் பெண்
நட்சத்திரங்களை அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருமணம் செய்ய
கூடாது.
No comments:
Post a Comment