மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சனி பகவானாவார்.
பொதுவாக, தொழில் காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய சனி பகவான் இந்த
லக்னத்திற்கு 10ம் அதிபதி என்பதால் அவர் சுக்கிரன், புதன், குரு போன்ற
கிரகங்களின் சேர்க்கை பெற்று பலமாக அமையப் பெற்றால், சொந்தத் தொழில்
செய்து அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதி சனியே பாதகாதிபதியாகவும்
இருப்பதால், வேலையாட்களிடமும் ஸ்பெகுலேஷன் சார்ந்த தொழில் விஷயங்களிலும்
முதலீடு செய்கின்ற போது முன்னெச்சரிக்கையுடன் இருந்து நிலையான விஷயங்களில்
மட்டும் முதலீடு செய்தால், லாபங்களை அடைய முடியும். 10ம் அதிபதி சனி பலமாக
அமையப் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் இரும்பு, எந்திரங்கள், வண்டி,
வாகனங்களில் மூலம் அனுகூலங்கள், பழைய பொருட்களை விற்பனை செய்யும் தொழில்,
கடின உடல் உழைப்பு சார்ந்த தொழில்கள் போன்றவற்றை செய்ய நேரிடும்.
சனி சுக்கிரனுடன் புதனும் இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் யோகம்,
பலரை நிர்வாகம் செய்து சொந்த தொழில் செய்யக்கூடிய யோகம் உண்டாகும்.
அதுமட்டுமின்றி வணிகம், வியாபாரம், ஏஜென்ஸி கமிஷன் தொடர்புடைய தொழில்களும்
ஏற்றத்தை ஏற்படுத்தும். சனி பகவானுடன் குரு சேர்க்கைப் பெற்று பலமாக
இருந்தால் வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும், கொடுக்கல், வாங்கல்,
ஏஜென்ஸி கமிஷன் போன்ற வற்றாலும் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். இது
மட்டுமின்றி மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் துறை, வக்கீல் பணி,
நீதித்துறை, இன்சூரன்ஸ் போன்றவைகளில் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும்.
குருபகவானுக்கு 10ம் வீடு நீச ஸ்தானம் என்பதனால் குரு வக்ரம்
பெற்றிருந்தாலோ, உடன் சனி அமைந்திருந்தாலோ மட்டும்தான் கௌரவமான பணிகள்
செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். மேற்கூறியவாறு குரு அமையப் பெற்று
புதனுடன் இணைந்திருந்தால் பள்ளிகல்லூரிகளில் ஆசிரியர், பேராசிரியர்களாக
பணியுரியக்கூடிய வாய்ப்பு, மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதில் வல்லவராக
விளங்கக்கூடிய வாய்ப்பு, வங்கி பணி போன்றவற்றின் மூலம் சம்பாதிக்க
முடியும்.
மேஷ லக்னத்திற்கு லக்னாதிபதியான செவ்வாய்க்கு 10ம் வீடு உச்ச ஸ்தானமாகும்.
செவ்வாய் 10ல் அமைந்து உச்சம், திக் பலம் பெற்று இருந்தால், மிகச் சிறந்த
நிர்வாகியாக விளங்கக்கூடிய அமைப்பு, போலீஸ், இராணுவம் போன்ற துறைகளில்
பணிபுரியக்கூடிய வாய்ப்பு, பேருந்து, ரயில்வே துறை போன்றவற்றில் உயர்
பதவிகளை வகிக்கும் அமைப்பு, அதிகாரமிக்க பதவிகளை அடையும் வாய்ப்பு
உண்டாகும். செவ்வாய் சூரியன் சேர்க்கைப் பெற்றிருந்தால் அரசு, அரசு சார்ந்த
துறைகளில் சம்பாதிக்கும் அமைப்பைக் கொடுக்கும். உடன் சனியும் பலம்
பெற்றிருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் பதவிகள் தேடிவரும். 10ல்
செவ்வாய் அல்லது சூரியன் அமையப் பெற்று உடன் சந்திரன் ராகு அல்லது கேது
சேர்க்கை பெற்றால் மருத்துவத் துறையில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு
உண்டாகும். சூரியன் செவ்வாயுடன் குரு சேர்க்கை அல்லது பார்வையிலிருந்தால்
கௌரவமான உத்தியோகம் கிடைக்கும்.
சனி பகவான் ராகு அல்லது கேது சேர்க்கைப் பெற்றால் வாழ்வில் பல்வேறு வகையில்
சோதனைகள், சட்ட சிக்கல்கள் நிறைந்த துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு
உண்டாகும். அதிலும் சுபர் பார்வையின்றி இருந்தால் மற்றவர்களை ஏமாற்றிப்
பிழைக்கும் அவலநிலை உண்டாகும். சனி பகவான் பலமிழந்திருந்தால் நிலையான வேலை,
நல்ல வருமானம் இல்லாமல் பல்வேறு துறைகளில் கடைநிலை ஊழியராக பணிபுரியும்
நிலை, அடிமைத் தொழில் செய்யக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.
No comments:
Post a Comment