சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்து நான்காவது இடத்தை பெறுவது சதய நட்சத்திரமாகும். இதன் அதிபதி ராகு பகவானாவார். இது ஒரு அலி இனமாக கருதப்படுகிறது. இது கும்ப ராசிக்குரிய நட்சத்திரமாகும். உடல் பாகத்தில் முழங்கால், கணுக்கால் போன்றவற்றை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் கோ, ஸ, ஸி, ஸீ ஆகியவை. தொடர் எழுத்துக்கள் தோ, தௌ ஆகியவையாகும்.
குண அமைப்பு;
     
சதய நட்சத்திராதிபதி ராகுபகவான் என்பதால் உடல் வலிமை கொண்டவர்களாக இருப்பார்கள். உழைத்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற கொள்கைக் கொண்டவர்கள். அனைவரிடமும் பாகுபாடு பார்க்காமல் உண்மையாக பழகுவார்கள். நல்ல அறிவாளியாகவும் நேர் வழியில் பணம் சம்பாதிப்பவர்களாகவும் இருப்பார்கள். தெளிவாக பேசுபவர்களாகவும், கேளிக்கை சம்மந்தப்பட்ட விஷயங்களில் நாட்டம் உடையவர்களாகவும் இருப்பார்கள். பகைவர்களை ஒட ஒட விரட்டுவார்கள். எந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து தீர்த்து வைப்பார்கள். தவறு செய்பவர்களை மன்னிக்கும் சுபாவம் இருந்தாலும் நேரம் பார்த்து அடி கொடுப்பார்கள். பிறர் சொத்துகளுக்கு ஆசைபட மாட்டார்கள். ஏழை பணக்காரர், படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடில்லாமல் அனைவரிடமும் அன்பாக பழகுவார்கள். எல்லாருக்கும் உதவக் கூடிய குணம் இருப்பதால் சொத்தை கூட விற்க வேண்டி வரும். கொடுத்த வாக்கை பிச்சை எடுத்தாவது காப்பாற்றி விடுவார்கள். மனிதாபி மானம் மிக்கவர்கள். உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் உண்டாகும்.

குடும்பம்;
     
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மனைவிக்கு அடங்கி நடப்பது போலும் பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பது போலும் தோன்றினாலும் தட்ட வேண்டிய நேரத்தில் தட்டி விடுவார்கள். உடன் பிறந்தவர்களுக்காகவும், பெற்றோருக்காகவும் உற்றார் உறவினர்களுக்காகவும் எதையும் தியாகம் செய்வார்கள். தன் சொத்தையே விற்று போண்டியாகி  நிற்பார்கள். ஆனால் இவர்கள் வைத்திருக்கும் பாசத்தைப் போல அவர்களும் இருப்பார்களா?  என்றால் வாங்கும் வரை வாங்கி விட்டு பின்பு ஒதுக்கி தள்ளி விடுவார்கள். எனவே இவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.  பெண்களால் அதிகம் விரும்ப படுவராக இருப்பதால் சில நேரங்களில் தடம் மாறவும் வாய்ப்பபுண்டு. 18 வயது வரை வாழ்வில் பிரச்சனைகளை சந்தித்தாலும் படிப்படியாக முன்னேறி வாழ்வின் உச்சியை அடைவார்கள். சமுதாயத்தில் ஒரு முக்கிய மனிதராக இருப்பார்கள்.

தொழில்;
    சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன் சுய சிந்தனையுடன் செயல்படுவார்கள் கற்றறிந்தவர்களின் சொல்படி நடப்பார்கள். சம்பாதிக்க வேண்டும் என்ற பெரிய குறிக்கோளுடன் செயல்படுவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று லாபம் சம்பாதிப்பதுடன் பல சாதனைகளையும் செய்வார்கள். ஆரம்பத்தில் உத்தியோகம் செய்யவராக இருந்தாலும் 39 வயது முதல் சொந்த காலில் நின்று சுய தொழில் புரிவார்கள். பைலட், தொழிலதிபர்கள், தொழில் சங்க தலைவர்களாக இருப்பார்கள். சிலர் ஸ்டீல் கார் தொழில்சாலை, சாயப்பட்டறை, பனியன் கம்பெனி, விமான நிலையம் கட்டுவது, கடலுக்குள் பாலம் கட்டுவது போன்ற துறைகளில் சாதிப்பார்கள். கனரகங்களை விற்பது, அனல் மின் நிலையம் கட்டுவது மேம்பாலம் போடுவது, சாலை அமைப்பது போன்றவற்றில் திறமையாக செயல்பட்டு பலரின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.
நோய்;
     
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சற்று முன் கோபம் அதிகமிருக்கும். இதனால் இதய துடிப்பு அதிகரித்து உயர் ரத்த அழுத்தம் உண்டாகும். ஹார்ட் அட்டாக்கும் வரலாம். தோல் நோய்களும் ஏற்படும்.

திசை பலன்கள்;
     
சதய நட்சத்திராதிபதி ராகு பகவான் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு முதல் திசையாக வரும் ராகு திசையின் மொத்த காலங்கள் 18 வருடங்கள் என்றாலும், பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறியலாம். ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்று அமைந்து விட்டால் கல்வியில் ஈடுபாடும் நல்ல நடத்தையும், குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். ராகு நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் பெரியோர்களை மதிக்காத நிலை, கல்வியில் ஈடுபாடற்ற நிலை, பாவ சொற்களை பேசும் அமைப்பு உண்டாகும்.
      இரண்டாவதாக வரும் குரு திசை மொத்தம் 16 வருடங்கள் நடைபெறும். இக்காலங்களில் கடந்த கால பிரச்சனைகள் விலகி கல்வியில் முன்னேற்றமும் பெற்றோருக்கு பெருமையும் சேரும். குடும்ப சூழலும் சிறப்பாக அமையும்.
     
மூன்றாவதாக வரும் சனிதிசை காலங்கள் 19 வருடங்களாகும். இத்திசை காலங்களில் பொருளாதார உயர்வும் அசையா சொத்து சேர்க்கையும், பழைய பொருட்களால் அனுகூலமும், வேலையாட்களின் ஆதரவும் கிட்டும்.
     
நான்காவதாக வரும் புதன் திசை 17 வருடங்கள் நடைபெறும். இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் பூர்வீக வழியில் அனுகூலமும், பிள்ளைகளால் மேன்மையும் கிட்டும். உற்றார் உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். 
      ஐந்தாவதாக வரும் கேது திசை 7 வருடங்கள் நடைபெறுவதால்  ஏற்ற இறக்கமான பலன்களை அடைய முடியும்.
விருட்சம்;
     
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஸ்தல விருட்சம் கடம்ப மரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்வது நல்லது. இந்த நட்சத்திரத்தை அக்டோபர் மாதம் இரவு 11 மணி அளவில் உச்சி வானத்தில் காணலாம்.
சதய நட்சத்தரத்தில் செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
     
திருமணம், குழந்தைக்கு பெயர் வைத்தல், கல்வி கற்க ஆரம்பித்தல், கிரக பிரவேசம் செய்தல், வீடு கட்டுதல், ஆடு மாடு வாங்குதல், விதை விதைத்தல், தானியம் வாங்குதல் போன்றவையாகும்.

வழி பாட்டு ஸ்தலங்கள்
பிச்சாண்டார் கோயில்;
  திருச்சிராப்பள்ளிக்கு வடக்கில் 6 கி.மீ தொலை உள்ள உத்தமர் கோயில், பிரம்மா சரஸ்வதிக்கு தனி சன்னதி உள்ளது.
கடம்பர் கோயில்;
      கரூர் மாவட்டம் குளித்தலை அருகில் உள்ள தட்சிண காசியில் கடம்பவனநாதராக ஈசன் முலையம்மையோடு காட்சி தரும் ஸ்தலம்.
கூடல்;
      மதுரை மாநகரில் உள்ள வைணவ திவ்ய தேசம். அஷ்டாங்க விமானத்தில் வீற்றிருந்த நின்ற மற்றும் சூரிய நாரயணன் 3 கோலங்களில் காட்சியளிக்கிறார்.
கடம்பனூர்;
     முருக பெருமான் ஐந்து ஸ்தலங்களில் சிவ பிரதிஷ்டை செய்ய வழிபட்ட கோவில் கடம்பனூர், பெருங்கடம்பனூர், ஆதி கடம்பனூர், இளம் கடம்பனூர், வாழிக்கடம்பனூர் ஆகியவையாகும். இத்தலங்களில் முருகன் வடக்கு நோக்கி காட்சி தருகிறார்.
கூற வேண்டிய மந்திரம்
      ஓம் த்ரயம்பகம் யஜாமஹே
      சுகந்திம் புஷ்டிவர்த்தனம்
    ஊர்வாருகமிவ பந்தனான்
      ம்ருத்யோர் முஷீயமாம்ருதாத்
பொருந்தாத நட்சத்திரங்கள்
   

ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.

No comments:

Post a Comment