அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

 இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்மூன்றாவது இடத்தை பெறுவது அவிட்ட நட்சத்திரமாகும். இதன் அதிபதி செவ்வாய் பகவானாவார். இது  ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இதில் 1,2 ஆம் பாதங்கள் மகர ராசிக்கும்  3,4 ஆம் பாதங்கள் கும்ப ராசிக்கும் சொந்த மானதாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் க, கி, கு, கூ ஆகியவை தொடர் எழுத்துக்கள் ஞ, ஞா, கே ஆகியவைகளாகும்.

குண அமைப்பு
     
அவிட்டம் செவ்வாய் பகவானின் நட்சத்திரம் என்பதால் பல கலைகளையும் கற்று வைத்திருப்பார்கள். பிறருடைய முகத்தை நேருக்கு நேர்ப் பார்த்து பேசுவார்கள். மெதுவாக நடப்பார்கள், ஆடை ஆபரணங்கள் மீது அதிக விருப்பம் உடையவர்கள். தன் பேச்சாற்றலால் எதிரிகளை ஒட ஒட விரட்டுவார்கள். அழகும் அறிவும் நிறைந்தவர்கள்.  மற்றவர்களின் சொத்துக்கு ஆசை படாதவர்கள். அடுத்தவர் தன்னைபற்றி விமர்சனம் செய்தாக பொருத்து கொள்ள மாட்டார்கள். உலகமே தலை கீழாக கவிழ்ந்தாலும் அஞ்சாமல் இருப்பார்கள். அடுத்தவர்களின் உதவியை எதிர் பார்க்க மாட்டார்கள். ஜாதி, இனம், மொழி மீது அதிக பற்றுதல் இருக்கும். மதியாதவர்களின் வாசற்படியை கூட மதிக்க மாட்டார்கள். வலிய சண்டைக்கு போகாவிட்டாலும் வந்த சண்டையை விட மாட்டார்கள். அனாவசியமாக பிறருக்கு செலவு வைக்கவும் மாட்டார்கள், தன்னம்பிக்கை அதிகம் உள்ளவர்கள் போராடி வெற்றி பெற கூடியவர்கள். அனுபவ அறிவாளி மற்றவர்களுக்கும் வழி காட்டுவார்கள். அவிட்டத்தில் பிறந்தவர்கள் தவிட்டு பானையிலும் தங்கம் எடுப்பார்கள். செல்வாக்கும் சேரும்.
குடும்பம்;
     
அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மனைவி, பிள்ளை மற்றும் பெற்றோர், சகோதரர் என கூட்டாக வாழ்வதில் ஆர்வம் காட்டுவார்கள். குற்றம் செய்பவர்களை தண்டிக்க தவறாக முன்கோபிகள். தாய் தந்தையை ஆயுள் காலம் வரை பேணி காப்பார்கள். கோபமிருக்கும் இடத்தில் குணமிருக்கும் என்பதற்கேற்ப குடும்பத்திலுள்ளவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்வார்கள். உற்றார் உறவினர்களை விட மற்றவர்கள் மீது அதிக பாசம் இருக்கும். யாரையும் சார்ந்து வாழ பிடிக்காதவர்கள் சமூக சீர்திருத்த வாதியாகவும் மூட நம்பிக்கைகளை வேரோடு கலைபவர்களாகவும் இருப்பார்கள். பகட்டான வாழ்க்கையும்,  பஞ்சு மெத்தை உறக்கமும் இவர்களுக்கு பிடிக்காது. இலவசம் பொருட்களை வாங்க மாட்டார்கள். பொய் பேசுபவர்களை கண்டால் பொங்கி எழுவார்கள்.

தொழில்;
     
அவிட்ட நட்சத்திர காரர்கள் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் விளங்குவார்கள். பூமி மீது தீராத மோகம் உண்டு. பலர் நாட்டை காக்கும் ராணவ படைகளில் அதிகாரிகளாக விளங்குவார்கள். காவல் துறையிலும், சமூகத்தை காக்கும் இயக்கங்களிலும் சேர்ந்து பணியாற்றுவார்கள். கடின உழைப்பை விரும்புவார்கள். முத்து பவழம் போன்றவற்றிலும் லாபம் பெறுவார்கள். விளையாட்டு துறைகளிலும் அதிக ஆர்வம் இருக்கும். மாநில அளவில் பல பரிசுகளை தட்டி செல்வார்கள். எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறுவார்கள். 22 வயது வாழ்வில் போராட்டங்களை சந்தித்தாலும் 37 வயதிலிருந்து சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தினைப் பெறுவார்கள். அரசியலிலும் ஈடுபாடு அதிகமிருக்கும். அடிமைத்தனம், மூடநம்பிக்கை இவற்றிலிருந்து வெளியேறி வாழ்வில் முன்னேற்ற மடைவார்கள்.

நோய்கள்;
     
அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, கை கால்களில் வலியும் நரம்புகளில் பிரச்சனையும், இருதய சம்மந்தப்பட்ட ரத்த  சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் ஏற்படும். மயக்கம், தலைசுற்றல், இருதய துடிப்பு அதிகமாதல் போன்றவற்றாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும்.
திசைப் பலன்கள்;
     
அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் நட்சத்திராதிபதி என்பதால் முதல் திசையாக வரும் செவ்வாய் திசையின் காலங்கள் 7 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளை அறியலாம். இத்திசை காலங்களில் குடும்பத்தில் சுபிட்சமும் பெற்றோருக்கு உயர்வும் உண்டாகும். சிறு வயது என்பதால் உஷ்ண சம்மந்த பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும்.
     
இரண்டாவதாக வரும் ராகு திசை காலங்களில் கல்வியில் சற்று மந்த நிலையும், பிடிவாத குணமும், பேச்சில் வேகம் விவேகமும், பெற்றோர் சொல் கேட்காதவர்களாகவும் இருப்பார்கள்.
     
மூன்றாவதாக வரும் குரு திசை காலங்களில் சற்று கல்வியில் உயர்வும் திருமண சுப காரியம் நடைபெறும் அமைப்பும் கொடுக்கும். 16 வருடம் நடைபெறும் குரு திசை காலங்கள் ஏற்ற இறக்கமும் நிறைந்தாக இருக்கும்.
     
நான்காவதாக வரும் சனி திசை காலங்களில் பல முன்னேற்றங்கள் பொருளாதார மேன்மைகள் உண்டாகும் என்றாலும், உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகளும் உண்டாகும். வண்டி வாகனங்களால் விபத்துகளை எதிர்கொள்ள  நேரிடும். பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. சனி ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை செய்ய மாட்டார். உடனிருப்பவர்களாலும் தொழிலாளர்களாலும் அனுகூலம் கிட்டும். பழைய இரும்பு பொருட்களாலும் லாபங்கள் கிடைக்கும்.
விருட்சம்;
     
அவிட்ட நட்சத்திர காரர்களின் ஸ்தல மரம் வன்னி மரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்வது நல்லது. இந்த நட்சத்திரத்தை ரிஷப லக்னம் உதயமாகி அரை நாழிகை சென்று செப்டம்பர் மாதத்தில் இரவு 11 மணிக்கு வானத்தில் காண முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
     
அவிட்ட நட்சத்திரத்தில் தாலிக்கு பொன் உருக்குதல், திருமணம், சீமந்தம் உபநயனம், குழந்தைக்கு மொட்டையடித்தல் காது குத்துதல் பெயர் வைத்தல் பள்ளியில் சேர்த்தல் போன்றவற்றை செய்யலாம். மருந்துண்பது, வண்டி வாகனம் வாங்குவது பயணங்கள் மேற் கொள்வது ஆகியவற்றையும் செய்யலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்
திருவான்மியூர்;
     சென்னைக்கு தெற்கில் 8 கி.மீ தொலைவில் உள்ள கடற்கரை ஸ்தலம். வன்மீகர், மருந்தீஸ்வரர், பால் வண்ண நாதர் என்ற பெயர்களுடன் ஈசன் அமைந்த ஸ்தலம் அன்னை திரிபுர சுந்தரி.
திருகாட்டுப்பள்ளி;
     தஞ்சை மாவட்டம், திருவையாற்றுக்கு மேற்கில் 10 கி.மீ தொலைவில் அக்னீஸ்வரர் அருள் புரியும் ஸ்தலம்.
கொடுமுடி;
      பாண்டி கொடுமுடி என்று அழைக்கபடும் கொங்கு நாட்டில் மகுடேஸ்வரர் சௌந்தர நாயகி அருள் பாலிக்கும் ஸ்தலம்.
திருப்பூந்துருந்தி;
      திருவையாருக்கு மேற்கே 5 கி.மீ தொலைவில் புஷ்பவன நாதர், அழகாலமர்ந்த நாயகி அருள் பாலிக்கும் ஸ்தலம்.

கூற வேண்டிய மந்திரம்
      ச்ரவிஷ்டா தேவதா; வந்தே
      வஸிந் ரதவராஸ்ரிதான்!
    சங்கம் சக்ராங்கிதகரான்
      க்ரீ டோஜ்வல மஸ்தகான்!!

பொருந்தாத நட்சத்திரங்கள்

      மிருக சீரிஷம், சித்திரை நட்சத்திரங்கள் பொருந்தாது.

No comments:

Post a Comment