எண் 8 (8, 17, 26)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

ஓவ்வொரு எண்ணுக்கும் ஒரு தனித்தன்மை இருப்பது போல 8 ம் எண்ணிற்கு உண்டு. அஷ்டவர்கங்கள், அஷ்ட லஷ்மிகள், அஷ்ட ஐஸ்வர்யங்கள், அஷ்டமா சித்திகள் என 8ம் எண்ணும் தெய்வ சக்தி வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா கூட 8 வதாக அஷ்டமி திதியில் பிறந்தவர்தான். ஒவ்வொரு மாதமும் 8,17,26 ம் தேதிகளில் பிறந்தவர்கள் 8ம் எண்ணில் பிறந்தவர்களாக கருதப்படுகிறார்கள். 8ம் எண்ணுக்குரிய கிரகம் சனி பகவானாவார். எட்டாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் தி.றி ஆகும்.

குண நலன்கள்

எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். எப்பேர்பட்ட அவசரமான காரியமாக இருந்தாலும் மிகவும் நிதானமாகவே செய்வார்கள்.  நிதானமே இவர்களின் பிரதானமாக இருக்கும். தங்கள் கஷ்டங்களை பிறரிடம் சொல்லி உதவி கேட்க மாட்டார்கள். இவர்களும் தன்னால் முடிந்த உதவியை மட்டும் தான் பிறருக்கு செய்வார்கள். எதையும் எளிதில் கிரகித்து கொள்ளக்கூடிய ஆற்றல் இருக்கும்.  கடமையே பிரதானமாக கொண்ட இவர்களுக்கு வாழ்வில் எவ்வளவு சோதனைகள் நேர்ந்தாலும் வேதனையடைய மாட்டார்கள். எந்தக் காரியங்களை எடுத்துக் கொண்டாலும் இருவிதங்களில் ஆதாயம் அடையக்கூடிய ஆற்றல் இவர்களுக்கு உண்டு. எப்போதும் கவலை தோய்ந்த முகத்துடன் ஆழ்ந்தை சிந்தனை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் பேச்சில் அழுத்தம் திருத்தமும், நிதானமும், உறுதியும் இருக்கும்.

எதிலும் பிரதிபலன் பாராது உழைத்திடும் இவர்கள் தெய்வத்தை கூட உழைப்பிற்கு அடுத்தபடியாகத்தான் நினைப்பார்கள். நினைத்ததை விடாத பிடிவாததக்காரர் என்றாலும் வீண் பிடிவாதக்காரர் இல்லை.  வீண் பேச்சிலும், வெட்டிப் பேச்சிலும் ஈடுபட மாட்டார். பிறர் தம் மீது கொண்டுள்ள தவறான அபிப்ராயங்களுக்கு செவி சாய்க்க மாட்டார். சிரிக்க, சிரிக்க பேசும் சுபாவம் கொண்ட இவர்களுக்கு, மற்றவர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கக்கூடிய ஆற்றலும் உண்டு. எதையும் கூர்ந்து ஆராய்ந்து பார்ப்பவர். ஆதலால் எந்த காரியத்திலும் அதன் சாதகப் பலனை பார்த்த பின்தான் செயலில் ஈடுபடுவார்கள். மற்றவர்களின் குணாதிசயங்களை கூர்ந்து கவனிப்பதிலும், அவர்களை எடை போடுவதிலும் மிகவும் திறமை சாலிகள். நியாயம், அநியாயம் இவற்றை தெள்ளத் தெளிவாக யாராக இருந்தாலும் பயமின்றி எடுத்துரைப்பார்கள். சொன்ன சொல் தவறாத குணம் இருக்கும் பிறர் வாழ்க்கையில் எந்த வகையிலும் குறுக்கிடாத உயந்த பண்பும், லட்சியமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

உடல்நிலை ஆரோக்கியம்

எட்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு நடுத்தர உயரத்தை விட சற்றே குறைவான உயரம் இருக்கும். முட்டி எலும்புகள் எடுப்பான தோற்றம் அளித்து அழகாக இருக்கும். இவர்கள் சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். ஆதலால் கருப்பான நிறமும், சற்று வயது முதிர்ந்தத் தோற்றமும் இருக்கும். நீண்ட கழுத்தும், பரபரப்பில்லாத நடையும், நெற்றியில் ஆழ்ந்த கோடுகளும் இருக்கும். முகத்தில் எப்பொழுதும் கவலை குடிகொண்டிருக்கும். நிதானமாக பேசினாலும் பேச்சில் உறுதி தொனிக்கும். இவர்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அடிக்கடி உண்டாகிக்கொண்டே இருக்கும். வயிற்று வலி, வயிற்றுப் புண், மலச்சிக்கல், வாயுத் தொல்லை போன்றவைகள் உண்டாகும். தோல் சம்மந்தமான வியாதிகளும் ஏற்படும். மார்புச் சளியும், இவர்களுக்கு தொல்லை கொடுக்கும். எலும்பு சமபந்தப்பட்ட பிரச்சினைகளும் உண்டாகும்.

குடும்ப வாழ்க்கை

எட்டாம் எண்ணில் பிறந்தவர்களின் குடும்ப வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தின் மீது அதிக அக்கறை உடையவர்களாக இருப்பார்கள். காதல் விவகாரங்களில் ஈடுபட்டாலும் இவர்களுக்கு  அவ்வளவு எளிதில் வெற்றி கிடைப்பதில்லை. தன்னுடைய முயற்சி தவறு எனத் தெரிந்தவுடன் ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என நழுவி விடுவார்கள். வாழ்வில் சுக துக்கங்கள் மாறி மாறி வந்தாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் இருக்கும். இவர்களுக்கு வாய்க்கும் வாழ்க்கை துணை மிகவும் சிக்கனமானவராகவும் எதிர்த்து பேசாத குணசாலியாகவும் இருப்பார். கணவன், மனைவி இருவரும் எப்போதும் இணைபிரியாது ஒற்றுமையுடன் இருப்பார்கள். புத்திரர்களால் மிகச் சிறப்பான அனுகூலம் இருக்கும். உடன் பிறப்புகளை மிகவும் அனுசரித்து செல்பவர்களாக இருப்பார்கள்.

பொருளாதாரம்

எட்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு தேவைக்கேற்றபடி பணவசதியும் உண்டாகி கொண்டே இருக்கும். தங்களுடைய சுக வாழ்க்கைக்காக இவர்களது வருமானம் முழுவதும் செலவழியும். தாமே சுயமாக உழைத்து பூமி, வீடு, வாகனம் முதலியவற்றை அமைத்துக் கொள்வார்கள். கொடுக்கல், வாங்கலில் இவர்கள் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டியிருக்கும். தாராள மனப்போக்காலும், பிறருக்கு உதவி செய்ய நினைக்கும் பண்பாலும் கடன்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு. எவ்வளவு கடன்கள் ஏற்பட்டாலும் அவற்றைக் குறித்த நேரத்தில் அடைக்கும் ஆற்றலும் உண்டு. கொடுத்த வாக்குறுதியை  காப்பாற்ற தவறமாட்டார்கள். சேமிப்பு என்பது இவர்களுக்கு குறைவாகவே இருக்கும். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை மேல் அலாதி விருப்பம் உடையவராக இருப்பார்கள்.

தொழில்

எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் மிக கடினமான வேலைகளையும் மிக எளிதில் செய்து முடிப்பார்கள். இவர்களுக்கு இரும்பு சம்பந்தமான தொழில்கள் நல்ல லாபத்தைக் கொடுக்கும். குறிப்பாக இரும்பு உருக்குதல், அச்சு வார்த்தல், பாத்திரங்கள் செய்தல், இயந்திரங்கள் செய்தல், இயந்திரங்கள் பழுது பார்க்கும் பணிகள்  போன்றவைகள் இவர்களுக்கு ஏற்றது. பெரிய கரும்பாலைகள், எண்ணெய் எடுக்கும் செக்கு போன்றவை ஏற்றம் தரும். நீதிபதிகள், வக்கீல்கள், இராணுவ அதிகாரிகள், இரயில்வே அதிகாரிகள் போன்ற துறைகளும் 8ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு அமையும். சிலருக்கு விவசாயப் பணி, நிலபுலன்கள், பெரிய காண்டிராக்டர்கள் போன்ற  துறைகளும் முன்னேற்றம் கொடுக்கும். அடிமைத் தொழில்கள் சிலருக்கு அமைந்தாலும் படிப்படியாக முன்னேறி விடுவார்கள்.

நண்பர்களும் பகைவர்களும்

எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் எப்பொழுதும் கலகலப்பாக பேசி பிறரை சிரிக்க வைக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள் என்றாலும் திடீரென்று கோபம் கொள்வார்கள். இவர்களுக்கு எப்பொழுது கோபம் வரும் என்று கூறமுடியாது. தான் பிடித்த முயலுக்கு முன்றே கால் என பிடிவாதம் பிடிக்கும் இவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பதற்கு 4,5,6,7 போன்ற எண்ணில் பிறந்தவர்களே தகுதியானவர்கள் 1,2,9 ம் எண்ணில் பிறந்தவர்கள் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.

சனிக்குரிய காலம்

டிசம்பர் மாதம் 22ம் தேதி முதல் பிப்ரவரி 18 ம் தேதி வரையிலான காலம் சனிக்குரியது. சனி இரவில் பலமுடையவன். சனிக்கிழமை சனி பகவானுக்கு உகந்ததாகும். குறுகிய  கால அளவில் ஓர் ஆண்டு காலம் சனிக்குரியது.

சனிக்குரிய திசை

தெற்கு அல்லது தென் கிழக்கு சனிக்குரிய திசையாகும். எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் இந்த திசைகளில் எந்த பணிகளைத் துவங்கினாலும் வெற்றி கிட்டும். குகைகள், சுடுகாடுகள், சுரங்கங்கள், பழைய பாழடைந்த வீடுகள், பாலைவனங்கள் போன்ற  யாவும் சனிக்குரிய பிரதேசங்களாகும்.

சனிக்குரிய கல்

சனிக்குரிய கல் நீலம். நிறத்தின் பெயராலேயே இக்கல் நீலம் என்றழைக்கப்படுகிறது. எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் மட்டும்தான் நீல நிறக் கல்லை அணிய வேண்டும். அதிலும் மிக ஆழ்ந்த நீலநிறக் கல்லை அணியக்கூடாது. சனியால் பாதிக்கப்பட்டவர்கள் அக்காலங்களில் மட்டும் நீலக்கல்லை அணிந்து கொள்ளலாம். நீலகற்களுக்கு பதிலாக அக்கோமரின் கற்களையும் பயன்படுத்தலாம். சனியால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் இக்கல்லை அணியக்கூடாது.

பரிகாரம்

எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் கலந்த நல்லெண்ணெயில் தீபமேற்றி நீலநிற சங்கு பூக்களால் அலங்கரித்து கருப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்வது நல்லது. சனி ப்ரீதி ஆஞ்சநேயரையும் வழிபடலாம். தினமும் காக்கைக்கு அன்னம் வைப்பது நல்லது. ஏழை, எளியவர்களுக்கும் தம்மால் இயன்ற உதவிகளை செய்யலாம். இதனால் சனியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் விலகும்.

அதிர்ஷ்டம் தருபவை

அதிர்ஷ்ட தேதி - 8,17,26

அதிர்ஷ்ட நிறம்-கருப்பு, நீலம்.

அதிர்ஷ்ட திசை-தெற்கு

அதிர்ஷ்ட கிழமை- சனி, புதன்

அதிர்ஷ்ட கல் - நீலம்

அதிர்ஷ்ட தெய்வம்-ஐயப்பன் 

No comments:

Post a Comment