சனி என்ற பெயரைக் கேட்டாலே அனைவருக்கும்
கிலிதான். ஆனால் சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும்
தடுக்க முடியாது. நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி
கருதப்படுகிறார். மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன்,
ஆயுள் காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படும் சனி சூரியனின் மகனாவார்.
பொதுவாக தந்தைக்கும் மகனுக்கும் ஒற்றுமை இருக்கும். ஆனால் சூரியனும்
சனியும் ஜென்ம பகைவர்கள் ஆவார்கள். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடம்
தங்கும் கிரகம் சனியாவார். இவர் ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றிவர 30
வருடங்கள் ஆகிறது. சனியின் ஆட்சி வீடு மகரம், கும்பம். உச்ச வீடு துலாம்.
நீச வீடு மேஷம். பகை வீடு சிம்மம்.
சனிக்கு நட்பு கிரகங்கள் புதன், சுக்கிரன், ராகு, கேது, சமகிரகம் குரு. பகை கிரகம் சூரியன், சந்திரன், செவ்வாய். பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு சனி அதிபதியாவார். சனி திசை 19 வருடங்களாகும். சனி ஆண்கிரகமும் இல்லாமல் பெண் கிரகமாகாவும் இல்லாமல் அலியாக இருக்கிறார்.
சனியின் வாகனம் காக்கை, எருமை. பாஷை அன்னிய பாஷைகள், உலோகம் இரும்பு, வஸ்திரம் கறுப்பு பூ போட்டது, நிறம் கருமை, திசை மேற்கு, தேவதை யமன், சாஸ்தா, சமித்து வன்னி, தானியம் எள்ளு, புஷ்பம் கருங்குவளை, சுவை கசப்பு ஆகும்.
ஆயுள் காரகனாக செயல்படும் சனி கலகங்கள், அவமதிப்பு, நோய், போலியான வாழ்வு, அடிமை நிலை, கடுகு, உளுந்து எள்ளு, கருப்பு தானியங்கள், இயந்திரங்கள், ஒழுங்கற்ற செயல்கள், விஞ்ஞான கல்வி, இரும்பு உலோகங்கள், அன்னிய நாட்டு மொழிகள், ஏவலாட்கள், எடுபிடி, திருட்டு, சோம்பல் முதலியவற்றிற்கும் காரகம் வகிக்கிறார். இது மட்டுமின்றி பாரிச வாய்வு, வாதநோய், எலும்பு வியாதிகள், பல் நோய், ஜலதோஷம், யானைகால் நோய், புற்றுநோய், ஆஸ்துமா, ஹிஸ்ப்ரியா சித்த சுவாதீனம், கை கால் ஊனம், சோர்வு மந்தமான நிலை இயற்கை சீற்றத்தால் உடல் பாதிப்பு ஏற்படும்.
சனி தான் நின்ற வீட்டிலிருந்து 3,7,10 ம் வீடுகளை பார்வை செய்கிறார். இதில் 10ம் பார்வை மிகவும் பலம் வாய்ந்தது. 7 ம் பார்வை பாதி பங்கு பலம் வாய்ந்தது. 3 ம் பார்வை மிகவும் குறைந்த பலத்தை உடையது. செவ்வாயின் பார்வையை விட சனி பார்வை கொடியது. சனி சூரியனை பார்வை செய்தால் மிகவும் கஷ்டப்பட்டே உணவு உண்ண வேண்டும். பல சிரமங்களையும் எதிர்கொள்ள நேரிடும். சனி சுக்கிரனை பார்வை செய்தால் இல்வாழ்வில் நிம்மதி இருக்காது. சனி சந்திரனை பார்வை செய்தால் உடல் நிலையில் பாதிப்பு, தாய்க்கு தோஷம் உண்டாகும்.
மகரம்,கும்பம் லக்னங்களில் பிறந்தவர்களுக்கு சனி ஜென்ம லக்னத்திலிருந்தால் எல்லா பாக்கியமும் கிடைக்கப் பெறும். நீண்ட ஆயுளைக் கொடுக்கும். ஒருவருக்கு சனி திசை 4 வது திசையாக வந்தால் மாரகத்திற்கு ஒப்பான கண்டங்களை ஏற்படுத்தும். மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி நான்காவது திசையாக வரும். சனி ஜெனன ஜாதகத்தில் 3,6,10,11 ல் இருந்தால் கேந்திர திரிகோணங்களில் பலமாக இருந்தாலும், ஆட்சி உச்சம் பெற்று இருந்தாலும் ஏற்றமான வாழ்வு உண்டாகும்.
சூரியனுக்கு முன்பின் 15 டிகிரிக்குள் சனி அமையப் பெற்றால் அஸ்தங்கம் பெறுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் சனி 8 ல் அமைந்தால் வீடு, வாகனம், கால்நடை யோகம், அரசருக்கு சமமான வாழ்வு அமையப் பெறும். 10ல் அமைந்தால் ஒருவரை மிகவும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்கிறார்.
கோட்சார ரீதியாக வரக்கூடிய ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி, அர்த்தாஷ்டம சனி போன்றவற்றில் அசுப பலனையே அடைய நேரிடுகிறது.
சந்தை கூட்டத்தில் செருப்பை வீசினாலும் சனியன் பிடித்தவன் தலையில் சரியாக விழும் என்பது பழமொழி. ஒரு மாதத்தில் 5 சனிக்கிழமைகள் வந்தால் நாட்டில் பஞ்சம் வரப்போவதற்று அறிகுறியாகும். சனி பிணம் துணை தேடும் என்பார்கள். ஒருவர் சனிக்கிழமையில் இறந்துவிட்டால் அடுத்த சனிக்கிழமையில் மேலும் ஒரு இழப்பு நிகழும். சைவர்கள் சனிக்கிழமைகள் இறந்தவர்களை கொண்டு செல்லும் போது ஒர தேங்காயையும், அசைவர்கள் ஒரு கோழியையும் கட்டிக் கொண்டு செல்வது பரிகாரமாகும்.
சனி தான் ஒரு ராசியில் நின்ற பலனைவிட பார்வை செய்யும் இடங்களுக்கு கொடிய பலன்களை உண்டாக்கும். புத்திர ஸ்தானத்தை பார்வை செய்தால் புத்திர பாக்கியம் தாமதப்படும். களத்திர ஸ்தானத்தை பார்வை செய்தால் திருமணம் நடைபெற தாமதம் உண்டாகும்.
ஏழரை சனி,
ஒருவருடைய ஜெனன ராசிக்கு 12 ல் சனி வரும் போது ஏழரை சனி தொடங்குகிறது. ஒவ்வொரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் வீதம் சந்திரனுக்கு 12,1,2,ல் சஞ்சாரம் செய்யும் காலமே ஏழரை சனி என்று கூறப்படுகிறது. மாளிகையில் வசிக்கும் மன்னரைகூட மண்குடிசைக்கு தள்ளக்கூடிய வலிமை சனிக்கு உண்டு. சனி இறைவனையும் விட்டு வைப்பதில்லை என புராணங்கள் கூறுகின்றன. ஜென்ம ராசிக்கு 12 ல் சனி சஞ்சரிக்கும் போது விரைய சனியும், ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் போது ஜென்ம சனியும், 2 ல் சஞ்சரிக்கும் போது பாத சனியும் நடைபெறுகிறது. இதில் சிறு வயதில் ஏழரை சனி நடைபெற்றால் மங்கு சனி என்றும், மத்திம வயதில் இரண்டாவது சுற்றாக ஏழரை சனி நடைபெற்றால் பொங்கு சனி என்றும் கூறுவது உண்டு, 3 வது சுற்று மரண சனி ஆகும்.
பொங்கு சனி நடைபெறும் காலங்களில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. சனி சந்திரனுக்கு கோட்சார ரீதியாக 8ம் வீட்டில் சஞ்சரிப்பதனை அஷ்டம சனி என்றும், 4ம் வீட்டில் சஞ்சரிப்பதனை அர்த்தாஷ்டம சனி என்றும், 7 ல் சஞ்சரிப்பதனை கண்ட சனி என்றும் கூறுவார்கள். ஆக, சனி கோட்சார ரீதியாக சந்திரனுக்கு 1,2,4,7,8,10,12 ல் சஞ்சரிக்கின்றபோது சாதகமற்ற பலன்களை வழங்குகிறார்.
பொதுவாக சனி ஜெனன காலத்தில் ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும் சனியின் ராசியான மகரம், கும்பத்தில் பிறந்தவர்களுக்கும், சனி யோகாதிபதியாக விளங்கும், ரிஷபம், துலாமில் பிறந்தவர்களுக்கும், சனியின் நட்சத்திரங்களான பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவற்றில் பிறந்தவர்களுக்கும் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி போன்றவற்றால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை.
சனி பகவான் ஜெனன காலத்தில் நீசம் பெற்றோ, பலஹீனமாக அமையப் பெற்றோ இருந்தாலும், பிறக்கும் போதே ஏழரைச் சனி, அஷ்டமச் சனியில் பிறந்தவர்களுக்கும் கோட்சார ரீதியாக ஏழரைச் சனி, அஷ்டம சனி வரும் காலங்களில் அதிக பாதிப்புகள் ஏற்படும். ஒரு ராசியில் சுமார் இரண்டரை வருடகாலம் தங்கும் சனி பகவான் ஜென்ம ராசிக்கு கோட்சாரத்தில் 3,6,11 ல் சஞ்சரிக்கின்ற போது அனுகூலமான பலன்களை வாரி வழங்குவார்.
சனியின் வக்ரகாலம், சனிபகவான் சூரியனுக்கு 251 டிகிரியில் இருக்கும்போது (9 வது ராசியில்) வக்ரம் பெற்று சூரியனுக்கு 109 வது டிகிரியில் வருகின்றபோது (5 வது ராசியில்) வக்ர நிவர்த்தி அடைவார். சுமார் 140 நாட்கள் வருடத்திற்கு ஒரு முறை வக்ரம் பெறுவார்.
சனி ஓரையில் செய்யக்கூடியவை ,
இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் தொடங்க, நிலத்தில் உழவு செய்ய, மோட்டார் செட் வாங்க சனி ஓரை நல்லது. சனி ஓரையில் நல்ல காரியங்கள், சுபகாரியங்கள் ஆகியவை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
சனிபகவானுக்குரிய பரிகார ஸ்தலங்கள், திருநள்ளாறு, திருகொள்ளிகாடு.
திருநள்ளாறு,
இத்தலம் காரைக்கால் நகரிலிருந்து 6 கி.மீ. கும்பகோணத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது. நளனுக்கு நல்வழியை கொடுத்ததால் நல் ஆறு என்று பெயர் பெற்று, அதுவே மருவி நள்ளாறு என அழைக்கப்படுகிறது. இக்கோவிலுக்கு ஆதிபுரி, தர்ப்பாரணயம், நகவிகடங்கபுரம், நளேச்சுவரம் என்ற வேறு பெயர்களும் உண்டு. திருநள்ளாற்றில் 13 தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் நளதீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், அகஸ்தியர் தீர்த்தம், அம்ச தீர்த்தம் ஆகியன இங்கு உள்ளன. அதில் நள தீர்த்தத்தில் நீராடினால் அனைத்து நோய்களும், பிரச்சினைகளும் விலகும்.
திருகொள்ளிகாடு,
மனிதனின் துன்பங்களுக்கு தன்னையே காரணமாக்குகின்றாரே என வருந்திய சனி பகவான் திருக்கொள்ளிகாடு எனும் திருத்தலத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி அங்குள்ள அக்னீஸ்வரர் என்னும் சிவனை வணங்கினார். நடுநிலைமையுடன் மக்களின் நன்மை, தீமை செயல்களை ஆராய்ந்து பலனிப்பவன் என சிவனால் புகழப்பட்டு அதே தளத்தில் பொங்கு சூரியன் வீற்றிருக்கிறார்.
சனிபகவானை வழிபாடு செய்யும் முறைகள்,
சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழு மலையில் வீட்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை வழிபட்டால் சனியால் துன்பம் ஏதும் ஏற்படாது.
அனுமனையும் விநாயகரையும் வழிபடுவதாலும், சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும்.
சனிக்கிழமைகளில் விரதமிருந்து கருப்பு துணியில் எள்ளை மூட்டை கட்டி, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றவும்.
சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் சருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்யவும்.
ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்யவும். ஹனுமனை வழிபடவும். அனுமன் துதிகளை கூறவும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வதும் நல்லது.
நல்லெண்ணெய், எள், கடுகு, தோல் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், அடுப்பு போன்றவற்றையும், குடை, செருப்பு, நீல மலர்கள் ஆகியவற்றையும் ஏழைகளுக்கு தானம் செய்யவும்.
'சனியின் பிஜ மந்திரமான, ஹ்ரீம் ஸ்ரீம் க்ரஹ சக்ர வர்த்தினே, சனைச்சாரய க்லிம் இம் சஹ ஸ்வாஹா, இதை 40 நாட்களில் 19000 தடவை ஜெபிக்கவும்.
கருப்புநிற ஆடை அணிதல், கைக்குட்டை வைத்திருத்தல் நல்லது.
நீலக்கல் மோதிரம் அணிவதும் நல்லது.
No comments:
Post a Comment