படிகட்டுகள்

சிறிய இடமாக இருந்தாலும் அதில் தனக்கென ஒரு சொந்த வீட்டை கட்டி வாழ்வதில் தான் மனிதனுக்கு தனி பெருமைதான். வீடு கட்டினால் மட்டும் போதாது அது தளம் போட்ட வீடாக இருந்தால் அதில் ஒரு மகிழ்ச்சிதான். தளம் போட்ட வீட்டிற்கு அதனுடையே படிகட்டுகளையும் கட்டி விட்டால் அது மாடி வீடாகி விடும். படிகட்டுகளுடன் மாடி வீட்டை கட்டி கொண்டால் காற்றுக்காக மாடியில் போய் அமர்ந்து கொள்ளலாம், படுத்துக் கொள்ளலாம். வானில் உள்ள நட்சத்திரங்களின் அழகையும் பௌர்ணமி நிலவையும் ரசிக்கலாம். மாடி வீடு என்பதே நிறைய சௌகர்யங்கள் நிறைந்தாக தான் இருக்கும். மன்னர்கள் காலத்திலேயே மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் அமைந்திருக்கிறார்கள். இவற்றில் ஏறி செல்ல படிக்கட்டுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த படிக்கட்டுகளுக்கென்று ஒரு புராண கதையும் உண்டு. அக்காலங்களில் கருங்கல்லில் தான் படிக்கட்டை அமைப்பார்கள். நாம் வழிபடும் இறைவனையும் கருங்கல்லில் தான் வடிப்பார்கள். தினமும் படிக்கட்டுகளில் பல்லாயிரம் பேர் ஏறி ஏறி இறைவனை வழிபட்டு அருள் பெற்று சென்றார்களாம். பலர் ஏறி சென்றதால் வலி தாங்க முடியாத படிகட்டுகள் ஒர் இரவில் இறைவனிடத்தில் புலம்பியதால், நீயும் கல் தான் நானும் கல் தான். என்னை மிதிக்கிறார்கள். உன்னை வணங்குகிறார்கள். இது என்ன வேற்றுமை என்று--?  அதற்கு கடவுள் நீ அவர்களின் பாவங்களை தாங்கி மன்னித்து மேலே ஏற உதவி செய்தால் மட்டுமே அவர்களுக்கு என் ஆசி கிடைக்கும். அதனால் நீதான் என்னை விட பெரியவன். பாவங்களை மன்னிப்பவன். நான் வெறும் ஆசி கூறுபவன் மட்டும் தான் என்றாராம்.
    
இப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த படி கட்டுகளை வீடுகளில் அமைக்கும் போது வாஸ்து படி எந்தந்த தசைகளில் அ¬ப்பது நல்லது என்று ஆராய்ந்தே கட்ட வேண்டும். பொதுவாக ஒரு கட்டிடத்தில் அதிக எடை வைக்க கூடாத திசையான வடகிழக்கு மூலையைத் தவிர மற்ற எந்த திசைகளில் வேண்டுமானாலும் படிகட்டுகளை அமைத்துக் கொள்ளலாம். இதிலும் ஒரு சில விதிகள் உள்ளன. படிக்கட்டுகள் அமைக்கும் போது அதன் எண்ணிக்கையானது ஒற்றை படையில் இருப்பது நல்லது. ஏனென்றால் நம் வீட்டில் பூஜையறையில் வைக்கும் மகாலஷ்மி விளக்கை (காமாட்சி விளக்கு) வாங்கும் போது பெரியவர்கள் அந்த விளக்கின் ஒரத்தில் உள்ள அறம் போன்ற அமைப்பை லாபம், நஷ்டம் லாபம், நஷ்டம் என எண்ணிக் கொண்டே வருவார்கள் அப்படி எண்ணும் போது அதன் முடிவானது லாபத்தில் இருக்க வேண்டும். அதைப் போலத் தான் நாம் ஏறி செல்லும் படிக்கட்டுகளும் லாபம், நஷ்டம் என்ற கணக்கில் வரும் போது லாபத்தில் நிற்க வேண்டும்.
    
படிக்கட்டானது எந்த திசையில் அமைக்க வேண்டும் என பார்க்கின்ற போது வடக்குலிருந்து தெற்கு  நோக்கி ஏறும்படியோ, அல்லது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஏறும்படியோ அமைப்பது சிறப்பு, படிக்கட்டில் ஏறி மாடிக்கு செல்லும் போது மாடியிலுள்ள வீட்டின் தலைவாசலானது எந்த திசையை நோக்கி உள்ளதோ அந்த திசையின் உச்ச ஸ்தானத்தில் அமைவது நல்லது.
ஒரு வீட்டில் ஒரே நேர் குத்தால படிக்கட்டுகள் அமைக்கும்படி நேர்ந்தால் மேலே காட்டப்பட்டுள்ள வரை படத்தை போல அதாவது தெற்கு பார்த்த வாசற்படியுள்ள வீட்டிற்கு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஏறும்படியும், மேற்கு பார்த்த வாசற்படியுள்ள வீட்டிற்கு வடக்கிலிருந்து தெற்கு திசை நோக்கி ஏறும்படியும் படிக்கட்டுகளை அமைப்பது நல்லது. அதிலும் தெற்கு பார்த்து அமைந்துள்ள வீட்டிற்கு தென்கிழக்கு மூலையில் வாசற்படியும் மேற்கு பார்த்த வீட்டிற்கு மாடியின் வாசற்படியானது வடமேற்கு மூலையிலும் அமைத்தல் நல்லது.
பொதுவாக வடகிழக்கு மூலையில் படிக்கட்டுகளை அமைக்க கூடாது என்ற காரணத்தால் வடக்கு பார்த்து அமைந்த வீட்டிற்கு நேர்குத்தாக படிக்கட்டுகளை அமைக்கும் பொழுது வடக்கு மத்தியில் படிகட்டு தொடங்கி வடமேற்கு திசையை நோக்கி ஏறுவது போல அமைத்து விட்டு மாடியில் ஒரு (வராண்டா) நடைபாதை போல அமைத்து விட்டு வடகிழக்கு உச்ச ஸ்தானத்தில் வீட்டின் வாசற்படியை வைப்பது நல்லது.
    
கிழக்கு பார்த்த வீட்டிற்கு நேர் குத்தாக படிகட்டுகளை அமைக்கும் போது கிழக்கின் மத்திய பகுதியில் படிகட்டை தொடங்கி தெற்கு திசையை நோக்கி ஏறுவது போல அமைத்து விட்டு மாடியில் ஒரு நடைபாதை போல (வராண்டா) அமைத்து விட்டு வடகிழக்கு உச்ச ஸ்தானத்தில் வீட்டின் வாசற்படியை அமைப்பது நல்லது.
  
படிகட்டுகளை இரு பாகங்களால் அமைக்கின்ற போது முதலில் ஏறுவது தெற்கு அல்லது மேற்கு நோக்கி ஏறுவதும் படிக்கட்டை ஒற்றை படையில் அமைத்து கொள்வதும் நல்லது. நான்கு திசைகளுக்கும் எப்படி அமைத்தால் நன்றாக இருக்கும் என்பதனை மேலே உள்ள வரைபடத்தில் காணலாம். முதல் மாடிக்கு சென்று வீட்டின் உள்ளே செல்லும் போது கதவானது உச்ச ஸ்தானத்தில் இருப்பது சிறப்பு. வடக்கு மற்றும் கிழக்கு  மதில் சுவரை தொடாமல் படிகட்டுகளை அமைப்பு சிறப்பு.

செப்டிக் டேங்க்

சென்னை போன்ற பெருநகரங்களில் கழிவு நீர் கட்டிடத்தை விட்டு வெளியே செல்வதற்கு டிரைனேஜ் வசதி இருக்கிறது. கிராமப் பகுதிகளில் டிரைனேஜ் வசதி இல்லாத காரணத்தால் கழிவு நீர் தேங்குவதற்காக செப்டிங் டேங்க் அமைக்கிறார்கள் அந்த செப்டிக் டேங்கானது எந்த இடத்தில் அமைத்தால் சிறப்பு என பார்க்கின்ற போது கட்டிடத்தின் வெளியே வடமேற்கு, மேற்கு ஒட்டிய வடக்கு, வடக்கு ஒட்டிய மேற்கு தென்கிழக்கு, தெற்கு ஒட்டிய கிழக்கு, கிழக்கு ஒட்டிய தெற்கு ஆகிய திசைகளில் உள்ள பகுதிகளில் செப்டக் டேங்க் அமைக்கலாம் வடகிழக்குப் பகுதியில் நீரோட்டம் இருப்பது நல்லது என்றாலும், ஈசான்ய மூலை என்பதால் கழிவுநீர் தேங்குவது நல்லதல்ல. அதனால் வடகிழக்குப் பகுதியில் செப்டிக் டேங்க் அமைக்க கூடாது. ஒரு மனையில் தென்மேற்குப் பகுதியில் பள்ளம் இருக்க கூடாது என்ற காரணத்தாலும் செல்வத்தை குவிக்கும் உன்னத ஸ்தானம் தென்மேற்கு ஸ்தானம் என்பதாலும், தென்மேற்கில் செப்டிக் டேங்க் அமைக் கூடாது.
     ஒரு மனையில் உள்ள நுழையும் தலைவாசல் பகுதியல் நடைபாதைக்கு கீழே செப்டிக்டேங்க் கழிவுநீர் தேங்கும் சேம்பர், கழிவுநீர் குழாய் அமைவது கண்டிப்பாக கூடாது. தவிர்க்க முடியாத இடங்களில் கழிவுநீர் குழாய் மட்டும் அமைவது தவறல்ல.

கழிவு நீர் செல்லும் வழி

கழிப்பறை குளியல் அமைந்த பிறகு இதிலிருந்து செல்லும் கழிவு நீரானது எந்த திசையில் கொண்டு சென்றால் நல்லது என பார்த்தால் குறிப்பாக ஒரு வீட்டின் நீரோட்டம் வடகிழக்கு மூலை வழியாக செல்வது நல்லது. குறிப்பாக ஒரு மனையில் தென் மேற்கு மூலையிலிருந்து முடிந்த வரை தெற்கு சுவருக்கு வெளிபுறம் குழாய் அமைத்து தென்கிழக்கு மூலைக்கு வந்து அதன் பிறகு அங்கிருந்து கிழக்கு சுவர்புறமாக வடகிழக்கு மூலைக்கு வந்து வடகிழக்கு வழியாக கழிவு நீர் வெளியேற வேண்டும். மற்றொரு பாதையாக மேற்கு சுவரை ஒட்டி வெளிபுறமாக வடமேற்கு மூலைக்கு வந்து அங்கிருந்து வடகிழக்கு மூலைக்கு வந்து வடகிழக்கு வழியாக கழிவு நீரானது வெளியேற வேண்டும். மேற்கூறிய விஷயங்கள் வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த வீட்டிற்கு சாத்தியமான ஒன்றாகும்.
வடக்கு பா£த்த வீட்டிற்கு கண்டிப்பாக வடமேற்கு கழிவு நீர் வெளியேறாமல் வடகிழக்கு மூலையிலோ, கிழக்கு சார்ந்த வடக்குப் பகுதியிலோ அமைப்பது தான் மிகவும் சிறப்பு. அது போல கிழக்குப் பார்த்த வீட்டிற்கு தென்கிழக்கு மூலையில் கழிவு நீர் வெளியேறாமல் வடகிழக்கு பகதியிலோ வடக்கு ஒட்டிய கிழக்கு பகுதியிலோ கழிவு நீரானது வெளியேறுவது போல் அமைக்க வேண்டும்.
    
வடகிழக்கு மூலையில் கழிவு நீர் வெளியேற வேண்டிய அமைப்பு வாஸ்து ரீதியாக சிறப்பான அமைப்பு என்றாலும் தெற்கு மற்றும் மேற்கு பார்த்த வீட்டிற்கு வடகிழக்கு மூலையில் கழிவு நீர் வெளியேற்ற முடியாது என்பதால் முடிந்தவரை வடமேற்கு மூலையில் வடக்கை ஒட்டிய மேற்கு பகுதியில் கழிவு நீர் வெளியேறுவது போல் அமைப்பது சிறப்பு. கண்டிப்பாக தென்மேற்கு பகுதியில் கழிவு நீர் கட்டிடத்தை விட்டு வெளியேறுவது போல் அமைக்கக் கூடாது.
    
தெற்கு பார்த்த வீட்டிற்கு தென்கிழக்கு மூலையிலும், கிழக்கு ஒட்டிய தெற்கு பகுதியிலும் கழிவுநீர் கட்டிடத்தை விட்டு வெளியேறுவதுப் போல் அமைக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் கழிவு நீரானது தென் மேற்கு மூலையில் கட்டிடத்தை விட்டு வெளியேறுவது போல் கழிவு நீர் குழாய் அமைக்க கூடாது.
    
மேற்கு பார்த்த வீட்டிற்கு தென் மேற்கு மூலையிலிருந்து வடமேற்கு பகுதிக்கு குழாய் சென்று அதன் மூலம் கழிவு நீர் வெளியேறுவது போலவும் மற்றொரு பாதையாக தென்கிழக்கிலிருந்து கிழக்கு சுவர் வழியாக வடகிழக்குக்கு சென்று அங்கிருந்து வடக்கு சுவர் வழியாக வடமேற்கு மூலம் கழிவு நீர் வெளியே செல்ல வேண்டும்.
    
தெற்கு பார்த்த வீட்டிற்கு தென் மேற்கு மூலையிலிருந்து குழாய் மூலம் தெற்கு சுவர் வழியாக தென்கிழக்கு மூலைக்கு வந்து வெளியே செல்ல வேண்டும். மற்றொரு பாதையாக தென்மேற்கு மூலையிலிருந்து மேற்கு சுவர் வழியாக வடமேற்கு சென்று அங்கிருந்து வடக்கு சுவர் வழியாக வடகிழக்கு சென்று அதன் பிறகு கிழக்கு சுவரை ஒட்டி தென்கிழக்கு வந்து அங்கிருந்து கழிவு நீர் கட்டிடத்தை விட்டு வெளியேற வேண்டும். பொதுவாக கழிவு நீர் குழாய் செல்லும் வழியில் அமைக்கப்படும். சேம்பரானது தெற்கு மேற்கு புறங்களில் முழுமையாக முடியிருக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அமையக் கூடிய சேம்பரானது திறந்தும் இருக்கலாம். குறிப்பாக கழிவு நீர் செல்ல கூடியக் குழாய் ஆனது கட்டித்திற்கு நடுவே அமைக்ககூடாது.

குளியல் மற்றும் கழிவறை

ஒரு வீட்டில் கழிவறை குளியலறை எங்கு அமைக்க வேண்டுமென வாஸ்து ரீதியாக பார்த்தால் ஒரு வீட்டில் தென் கிழக்கு, தெற்கு பகுதி கிழக்கை ஒட்டிய தெற்கு பகுதி வடமேற்குப் பகுதி, மேற்கு பகுதியில் வடக்கை ஒட்டிய பகுதியில் கழப்பறை, குளியலறை அமைக்கலாம். பொதுவாக தென் மேற்கு  பகுதியிலும் வடகிழக்கு பகுதியிலும் கழிவறை குளியலறை அமைக்க கூடாது. குறிப்பாக தென் கிழக்கு அல்லது வடமேற்கில் தான் கழிவறை குளியலறை அமைக்க வேண்டும். கழிப்பறையில் கழிவு பொருட்கள் செல்ல கூடிய தொட்டியானது எப்படி அமைக்க வேண்டுமென்றால் ஒருவர் கழிவறையை உபயோகிக்கும் போது தெற்கு அல்லது வடக்கு பார்த்து அமர்வதுப் போல அமைக்க வேண்டும். கண்டிப்பாக சூரியன் உதிக்கும் திசையான கிழக்குப் பார்த்தும் சூரியன் உதிக்கும் திசைக்கு எதிர்புறமான மேற்கு திசையிலும் கழிவறையில் அமர்வதும் போல் இருக்க கூடாது.
குறிப்பாக படுக்கையறைக்கு ஒட்டியவாறு கழப்பறை அமைக்கும் போது கூட அந்த படுக்கை அறைக்கு தென்கிழக்கு அல்லது வடமேற்கு திசையில் உள்ள பகுதியில் தான் அட்டாச்டு பாத்ரூம் அமைக்க வேண்டும். கண்டிப்பாக வடகிழக்கு தென்மேற்கில் அமைக்கக் கூடாது. பொதுவாக வடகிழக்கு திசையானது ஈசனே குடியிருக்க கூடிய தெய்வீக ஸ்தானம் என்பதினால் அங்கு கழிப்பறை அமைப்பதும் செல்வத்தை குவிக்கும் ஸ்தானமான தென்மேற்கு திசையிலும் கழிவறை அமைக்க கூடாது. கழிவறைக்கு ஒட்டியது போல பூஜையறை இருக்க கூடாது. அது போல தலைவாசலுக்கு நேராகவும், படிக்கட்டுக்கு கீழும் கழிவறை இருக்க கூடாது.

படுக்கையறை

பகவெல்லாம் ஒடியாடி உழைத்துக் கொண்டிருக்கும் உடம்பிற்கு ஒய்வு என்பது மிக அவசியமான ஒன்றாகும். அதற்கு உதவும் இடம் தான் படுக்கை அறை. சிலருக்கு எந்த வெளி இடங்களுக்கு சென்றாலும் தூக்கமே வராது. தன் வீட்டில் தன்னுடைய பெட் மற்றும் தலையணை, பெட்சீட்டுடன் படுத்தால் மட்டுமே உறக்கம் வரும். இதற்கு காரணம் இவையெல்லாம் பழக்கப்பட்டவையாக இருக்கும். வெளியிடம் என்பது பழகாத இடமாக இருக்கும். வெளியில் செல்லும் மனிதனுக்கு தினம் தினம் எவ்வளவோ பிரச்சனைகள், சங்கடங்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது. சிலருக்கு மகிழ்ச்சியான செய்திகளும், குதூகலமும் உண்டாகிறது. அன்றாட நிகழ்வுகளை மீண்டும் நினைவு கூர்ந்து கணவன் மனைவி பகிர்ந்து கொள்ள கூடிய இடம் படுக்கை அறை தான். இப்பொழுது எல்லாம் இளைஞர்களுக்கும்  (ஜீக்ஷீவீஸ்ணீநீஹ்) தனிமை தேவைப்படுகிறது. படுத்துறாங்க, தன்னுடைய பொருட்களை பாதுகாத்து கொள்ள தனித்தன்மை முக்கியமாகிறது. இதற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் இடமும் அவர்களது படுக்கையறைதான். இளம் தம்பதியருக்கு சொல்லவே வேண்டாம். கொண்டாட்டமும் குதூகலமும் படுக்கையறையில் தான். முதியவர்களுக்கு எப்பொழுதும் ஒய்வு வேண்டும். அவர்களுக்கென்று படுத்துறங்க ஒரு அறையை ஏற்படுத்தி கொடுத்து விட்டால் அவர்களுக்கொரு மகிழ்ச்சி. வாழ்க்கை சக்கரத்தில் சிக்கி அன்றாடம் சுழன்று கொண்டிருக்கும் மனிதன் எல்லா கவலைகளையும் மறந்து நிம்மதியாக ஒய்வெடுக்க கூடிய இடமாக அவனது படுக்கை அறை இருக்க வேண்டும்.
    மனநிம்மதியையும், சந்தோஷத்தையும் தரக் கூடிய படுக்கையறையானது வாஸ்து ரீதியாக எந்த திசையில் அமைந்தால் நிம்மதியான உறக்கம், நல்ல ஆரோக்கியம், கட்டில் சுகம் தாம்பத்ய வாழ்வில் ஒற்றுமை கனவுகளற்ற உறக்கம், மனநிம்மதி போன்ற நற்பலன்கள் உண்டாகும் என பார்க்கும் போது மேற்கு, தென்மேற்கு, வடமேற்கு பகுதிகளே சிறந்ததாக கருதப்படுகிறது.
    இத்திசைகளில் அமையும் படுக்கை அறையில் கூட ஒருவர் படுத்து உறங்குவதற்கு உரிய பகுதியாக கருதப்படும் இடம் தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு பகுதியாகும். மேற்கூறிய இடங்களில் தான் கட்டில், மெத்தை, பாய் பேட்டுப் படுப்பது மிக சிறப்பு. அதுவும் கட்டில் மெத்தையானது கண்டிப்பாக கிழக்கு மற்றும் வடக்கு சுவற்றை ஒட்டிப் போடக் கூடாது. கட்டிலில் எந்த பக்கம் தலை வைத்துப் பார்த்தால் சிறப்பு என பார்க்கின்ற போது தெற்கில் தலை வைத்து வடபுறம் கால் நீட்டுவதும் மேற்கில் தலை வைத்து கிழக்கு புறம் கால் நீட்டுவதும், மிகச் சிறப்பாகும். தவிர்க்க முடியாத இடங்களில்  கிழக்குப் புறம் தலை வைக்கலாம். கண்டிப்பாக வடக்கு திசையில் தலை வைக்கவே கூடாது.
    படுக்கையறையானது தென்கிழக்கு திசையான அக்னி மூலையில் அமைத்தால் உடல் ஆரோக்கிய பாதிப்பு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பு, வீண் சண்டை சச்சரவுகள் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவு உண்டாகும் என்பதால் தென்கிழக்கு படுக்கையறை அமைக்க கூடாது. அது போல வடகிழக்கு திசையானால் ஈசனே குடியிருக்கும். ஈசான்ய திசை என்பதால் அங்கு படுக்கை அறை அமைப்பது அவ்வளவு நல்லதல்ல. இந்த இடத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வடகிழக்கில் படுக்கை அறை அமைந்தால் முதியவர்கள் குழந்தைகள் வேண்டுமென்றால் உபயோகிக்கலாம். தாம்பத்திய வாழ்வில் ஈடுபட கூடிய இளம் தம்பதிகள் கண்டிப்பாக உபயோகிக்க கூடாது. அது போல தென்கிழக்கு திசையில் படுக்கையறை அமைந்தால் அதனை விருந்தினர்கள் உபயோகிக்கலாமேத் தவிர பெண்கள் மற்றும் இளம் தம்பதியினர் உபயோகிப்பது அவ்வளவு நல்லதல்ல. சில வாஸ்து புத்தகங்கள் வடமேற்கு திசையில் வடக்கை, ஒட்டிய பகுதிகளில் கூட படுக்கை அறை அமைத்தால் அங்கு விருந்தினர்கள் மற்றும், முதியவர்கள் படுப்பது தான் சிறப்பு என கூறுகிறார்கள்.
   திருமணமாகாத இளம் பெண்கள் வடக்கை ஒட்டிய வடமேற்கு திசையில் படுக்கையறை அமைத்து படுத்தால் மனது  அலைபாய கூடிய சூழ்நிலை தேவையற்ற சிந்தனைகள் உண்டாகும் என சில வாஸ்து நூல்கள் கூறுகின்றன. ஆக தென் மேற்கில், மேற்கில், மற்றும் வடமேற்கு பகுதியில் படுக்கை அறை அமைப்பது தான் மிகச் சிறப்பு. தென் மேற்கில் படுக்கை அறை அமைக்கும் போது கூட சிலர் வீடு கட்டும் போது படுக்கை அறைக்கு தென்மேற்கு மற்றும் மேற்கு பகுதியில் கட்டில் போட முடியாத அளவிற்கு செல்ப், ஜன்னல் அல்லது கழிப்பறை கதவு போன்றவற்றை அமைத்து விடுகிறார்கள். அப்படி அமைக்காமல் கட்டில் போடுவதற்கு வசதியாக படுக்கை அறை அமைக்க வேண்டும். பொதுவாக நெருக்கடி மிகுந்த பகுதிகளில் இடப் பற்றாகுறை காரணமாக மிகச்சிறிய வீடுகளில் குடியிருப்பவர்கள் படுக்கை அறை எந்த இடத்தில் அமைத்தாலும் பரவாயில்லை. அந்த  இடத்திற்கு தென்மேற்கு திசையில் கட்டில் மெத்தை போன்றவற்றை போட்டு படுத்தால் நிம்மதியான உறக்கமும் திருப்தியான குடும்ப வாழ்வும், கணவன் மனைவியிடையே அந்யோன்யமும் அதிகரிக்கும். நல்ல ஆரோக்கியமும் உண்டாகும். தேவையற்ற கனவுகளும் வராது.

சமையலறை

ஒரு வீட்டில் சமையலறை எங்கு அமைத்தால் சிறப்பான பலன்கள் ஏற்படும் என்பதினை வாஸ்து சாஸ்திர ரீதியாக பார்த்தால் அக்னி மூலை என வர்ணிக்கப்பட கூடிய தென் கிழக்கு மூலையில் அமைப்பது மிக சிறப்பு. தென் கிழக்கு  மூளையில் அமைக்கும் அறையில் எப்படிப்பட்ட அமைப்பு இருந்தால் சிறப்பான பலன்கள் ஏற்படும் என பார்த்தால் தென்கிழக்கு அறையில் கிழக்கு சுவற்றில் அதுவும் தெற்கை ஒட்டிய கிழக்கு சுவற்றில் சமையல் மேடை அமைக்க வேண்டும். அந்த மேடையில் அடுப்பு வைத்து கிழக்கு பார்த்து சமைப்பது போல் சமையலறை இருக்க வேண்டும். சமையல் மேடைக்கு மேல் கிழக்கு சுவற்றில் சன்னல் அல்லது வென்டிலேட்டர் அமைத்து சமையலறைக்குள் சூரிய ஒளி வருவது போல் அமைப்பது மிகவும் சிறப்பு. சமையல் மேடைக்கு அருகில் கிழக்கு சுவற்றில் அதுவும் வடக்கை ஒட்டிய கிழக்கு சுவற்றில் பாத்திரம் கழவுவதற்கான தொட்டி அமைப்பது, வடகிழக்கு பகுதியில் தண்ணீர் வருவது போல் வைப்பது மிக சிறப்பு. குறிப்பாக சமையல் அறையில் வடகிழக்குப் பகுதியில் பலமான பொருட்கள் எதுவும் வைக்காமல் முடிந்த வரை காலியாக விட்டு விட்டு தண்ணீர் தேக்கி வைக்க கூடிய பாத்திரங்களை வைப்பது மிகவும் சிறப்பு.
சமையல் அறையில் முடிந்த வரை கனமான பாத்திரங்களை தென் மேற்குப் பகுதியில் வைப்பது மிக சிறப்பு. அதாவது கிரைண்டர், குளிர் சாதனப் பெட்டி ஆகியவற்றை தென்மேற்கு பகுதி அல்லது மேற்கு சுவரை ஒட்டிய பகுதி, வடமேற்கு பகுதியில் வைப்பது மிக சிறப்பு. சமையல் அறையில் செல்ப் ஆனது தெற்கு சுவர் மற்றும் மேற்கு சுவற்றில் அமைத்து அதில் சமையலுக்கு தேவையான பொருட்களை வைக்கலாம். செல்ப் ஆனது கிழக்கு மற்றும் வடக்கு சுவற்றில் அமைப்பது அவ்வளவு சிறப்பல்ல. ஒரு வீட்டில் சமையல் அறை ஆனது மேற் கூறியவாறு அமைப்பதன் மூலமாக அனுகூலமான பலன்கள் உண்டாகும். தென் கிழக்கு மூலையில் சமையலறை வைக்க சாத்தியமான சூழ்நிலை இல்லாத பட்சத்தில் அதாவது தெற்கு பார்த்த வீட்டிற்கு உச்ச ஸ்தானமான கிழக்கு ஒட்டிய தெற்கு பகுதியில் தலை வாசல் வைக்கும் பட்சத்தில் சமையலறை தென் கிழக்கில் வைக்க முடியாது. அப்போது வடமேற்கில் சமையலறை அமைத்து எப்படி தென் கிழக்கு அறையில் சமையலறை வைத்தால் எப்படி அமைப்போமோ, அதே போல அமைப்பில் வடமேற்கில் அமைக்க வேண்டும்.
    
இடநெருக்கடிக் கொண்ட சென்னை போன்ற பெருநகரங்களில் தென் கிழக்கில் அமைக்க முடியாத சூழ்நிலையில் மற்ற இடங்களில் சமையலறையை அமைத்தால் தெற்கை ஒட்டிய கிழக்கு பகுதியில் சமையலறை, கிழக்-கு சுவற்றில் சமையல் மேடை அமைப்பது மிகவும் சிறப்பு. பொதுவாக தென்கிழக்கில் சமையலறையை அமைக்காமல் ஈசான்ய மூலை என வர்ணிக்கப்பட கூடிய வடகிழக்குப் பகுதியில் சமையலறை அமைத்தால் நல்லதல்ல நைரிதி என வர்ணிக்கப்பட கூடி தென் மேற்கிலும் சமையலறை அமைக்க கூடாது. வடகிழக்கு பகுதி தெய்வீகமான ஸ்தானம் ஆகும். ஜல நடமாட்டம் கொண்ட ஸ்தானம் ஆகும். அங்கு அடுப்பு இருப்பதன் மூலமாக பல்வேறு கெடுபலன்கள் ஏற்படும். தென் மேற்கு பகுதியில் பணப்பெட்டி முக்கியமான பொருட்கள், படுக்கயறை போன்றவை இருக்கும் ஸ்தானமாகும். அங்கு அடுப்பு வைத்தால் குடும்பத்தில் சுபிட்சங்கள் குறையும்.
   
 உண்ணும் உணவானது உடலுக்கு மிகுந்த அவசியமாகும். உண்ணும் உணவை கூட வாஸ்து ரீதியாக எந்த திசையில் அமர்ந்து உணவு உண்பது என்ற விதியும் உள்ளது. உணவு உண்ணும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி உட்கார்ந்து உண்டால் நல்ல செரிமானமாவதுடன் உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

பூஜை அறை

ஒரு வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நிகழ்ந்தால் முதலில் நன்றி சொல்வது இறைவனுக்கு தான். எங்கும் நிறைந்திருக்கும் பரம் பொருளான இறைவனை வீட்டில் நாம் வைத்து வணங்குவது பூஜையறையில் தான். கஷ்டங்கள் வந்தால் இறைவா ஏனிந்த நிலை என புலம்புகிறோம். மனநிம்மதி வேண்டி நாம் சென்று மனதார கை கூப்பி வணங்கி ஐந்து நிமிடங்கள் இறைவனிடம் நம் குறைகளை இறக்கி வைக்கும் இடமும் பூஜையறைதான். நம்மோடு வாழ்ந்து இறைவனடி சேர்ந்தவர்களையும் பூஜையறையில் வைத்து தான் இறைவனாக இருந்து நல்வழி காட்டும்படி வேண்டிக் கொள்கிறோம். தினமும் பூப் போட்டு, விளக்கேற்றி ஊதுபத்தி ஏற்றி, சாம்பிராணி புகை போட்டு நம்மால் முடிந்த அளவிற்கு ஏதாவது பொங்கலோ அல்லது ஏதாவது ஒரு பழ வகையோ வைத்து தினமும் வழி படுகிறோம்.
  
   நாம் வாழம் வீடானது சுபிட்சங்கள் நிறைந்ததாகவும், மகிழ்ச்சி கரமானதாகவும் இருப்பதற்கு பூஜைகள் செய்வது, பிராத்தனை செய்வது, கடவுளை வணங்குவது போன்றவை ஒர் சிறந்த வழியாகும். அதிலும் வாஸ்து ரீதியாக பூஜையறையை எங்கு அமைக்க வேண்டுமோ அந்த இடத்தில் அமைத்து வழிப்பட்டால் வீடு எப்பொழுதும் லட்சுமி கடாட்சம் நிறைந்ததாக இருக்கும். நம் வீட்டின் பூஜையறையை வாஸ்து ரீதியாக எங்கு அமைக்க வேண்டும் என பார்க்கின்ற போது ஈசானே குடியிருக்க கூடிய ஈசான்ய மூலையில் அதாவது வடகிழக்கு மூலையில் அமைப்பது மிகவும் சிறப்பு. கட்டிடம் அமைக்கும் இடம் பெரியதாக இருந்து தனியாக பூஜையறை அமைக்கும் பட்சத்தில் வடகிழக்கு மூலையில் பூஜையறையை வைத்து அந்த பூஜை அறையின் மேற்-கு சுவற்றில் மேடை அமைத்து சுவாமி படமானது கிழக்கு நோக்கி இருக்கும் படி வைத்தால் நாம் சுவாமியை வணங்கும் போது மேற்கு நோக்கி நின்று வணங்குவோம். இப்படி வணங்குவது குடும்பத்திற்கு மிகவும் நல்லது.
    
வீட்டில் ஏற்றப்படக் கூடிய மகா லக்ஷமி விளக்கை கிழக்கு அல்லது வடக்கு பார்த்ததுப் போல ஏற்றுவது நல்லது. குறிப்பாக வடகிழக்கு மூலையில் பூஜை அறை அமைக்கும் போது பூஜை அறையின் அளவானது அகலம் மற்றும் நீளமாக 6,8,10,11 அடிகளாக இருப்பது மிகவும் நல்லது.
    
கை கால் நீட்டி படுக்கே இடமில்லை இதில் பூஜை அறைக்கென்று தனி இடத்திற்கு எங்கு செல்வது என நினைப்பவர்கள் முடிந்த வரை கிழக்கு பா£த்தது போல வடகிழக்கில் சுவாமி மேடை அமைத்து அதில் படங்களை வைத்து வழிபடுவது நல்லது. முடிந்தவரை சுவாமி கும்பிடும் அறை அல்லது இடத்திற்கு அருகில் (அ) பக்கத்தில் கழிவறையோ குளியலறையோ இல்லாதிருப்பது நல்லது. குறிப்பாக மாடி படிகட்டுகளுக்கு கீழே பூஜையறை இல்லாதிருப்பது மிக மிக உத்தமம்.