கன்னி : 2015 - குருப்பெயர்ச்சிப் பலன்கள்

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த முறை நன்மை அளிக்கும் இடமான பதினொன்றாம் இடத்தில் உச்ச நிலையில் இருந்த குருபகவான் தற்போது அதிலிருந்து மாறி செலவுகளையும், விரையங்களையும் தரும் ஸ்தானமான பனிரெண்டாம் வீட்டிற்கு மாறுகிறார்.

மேம்போக்காகப் பார்த்தால் நல்ல இடத்தில் இருந்து கெடுதல் தரும் இடத்திற்கு குருபகவான் மாறுவது போலத் தோன்றினாலும் உபயராசிகள் எனப்படும் மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ராசிகளுக்கு மறைவு ஸ்தானங்களில் குரு இருந்தால்தான் நன்மைகளைச் செய்வார் என்ற விதிப்படி கன்னி ராசிக்கு சென்ற வருடத்தை விட இந்த வருடமே குருபகவானால் சிறப்புக்கள் சேரும்.

குருப்பெயர்ச்சிப் பலன்களே பொதுவான பலன்கள்தான் என்றாலும் அதிலும் துல்லியமான நுட்ப  விதிகளைப் பயன்படுத்தித்தான் நான் பலன் சொல்லுகிறேன் என்பது உங்களுக்கு தெரியும் என்பதால் இதற்குமேல் குருபகவானின் நிலை பற்றி நான் உங்களுக்கு விளக்கத் தேவையில்லை.
அதேநேரத்தில் சென்ற வருடம் பதினொறாமிடத்தில் கன்னிக்கு உச்சமடைந்தும், மீன ராசிக்கு ஐந்தாமிடத்தில் உச்சமடைந்தும் வலுவான நிலையில் இருந்த குருபகவான் தன்னை ராசிநாதனாகக் கொண்ட மீன ராசிக்குக் கூட நன்மைகளை செய்யவில்லை என்பதும் கன்னி ராசிக்கும் மிகப்பெரிய லாபங்கள் எதுவும் சென்ற வருடத்தில் கிடைக்கவில்லை என்பதும் கண்கூடாகத் தெரிந்த பலன்தான்.

அடுத்து சுபக்கிரகங்கள் விரயஸ்தானம் எனப்படும் பனிரெண்டாமிடத்தில் இருந்தால் சுபச்செலவுகள்தான் ஒருவருக்கு இருக்கும் என்பதாலும் செலவு செய்துதான் மனநிறைவை அனுபவிக்க முடியும் என்பதாலும் செலவு செய்தால்தான் ஒரு பொருளை வாங்க முடியும் என்பதாலும் குருவின் பனிரெண்டாமிடப் பெயர்ச்சி உங்களுக்கு நன்மைகளையே செய்யும்.

இன்னும் ஒரு சூட்சுமமாக செலவு செய்யப் போகிறீர்கள் என்றால் வருமானம் வரப்போகிறது என்று அர்த்தம். வரவு வந்தால்தானே தொடர்ந்து செலவு செய்ய முடியும். கடன் வாங்கி எந்தனை நாள் செலவு செய்ய முடியும். எனவே இந்த குருப்பெயச்சியில் கன்னி ராசிக்காரர்களுக்கு சுபச்செலவு செய்யப் போதுமான வருமானங்கள் இருக்கும்.

ஆகவே இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் கன்னி ராசிக்காரர்களின் குடும்பங்களில் திருமணம், வீடு வாங்குதல், வீடு கட்டுதல், பெண்களுக்கான பூப்புனித நீராட்டு விழா போன்ற மங்கள விழாக்கள் மற்றும் குடும்பத்தில் ஒரு புது ஜீவன் வருவதற்கான பிரசவச்செலவுகள் போன்ற சுபகாரியச் செலவுகள் இந்த வருடம் இருக்கும்.

அடுத்து குருபகவான் பார்க்கும் இடங்கள் வலுப்பெற்று பலன்களைச் செய்யும் என்பதால் குருபகவானின் பார்வையால் நான்கு, ஆறு, எட்டு ஆகிய இடங்கள் வலுப்பெற்று அந்த பாவங்களுக்குரிய விளைவுகளைச் செய்யும் என்பதன்படி நான்காமிட குருவின் பார்வையால் வீடு, வாகனம், தாயார், தன் சுகம், கல்வி ஆகிய விஷயங்களில் கன்னி ராசிக்கு மிகச்சிறந்த பலன்கள் கிடைக்கும்.

இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு இப்போது கடன் வாங்கியோ ஹவுசிங் லோன் போட்டோ, சொந்த வீடு அமையும். பெருநகரங்களில் உள்ளவர்கள் சொந்த பிளாட் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட நல்ல சொகுசு வாகனம் வாங்குவீர்கள்.

அம்மாவின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தாய்வழி சொத்துக்களில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் விலகும். தாயாரின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். உயர்கல்வி கற்க இதுவரை இருந்து வந்த தடங்கல்கள் விலகும். ஒரு சிலர் ஏற்கனவே இருக்கும் படிப்புத்தடை விலகி தொடர்ந்து படிப்பீர்கள்.

குருவின் ஆறாமிடத்துப் பார்வையால் ஆறாம் பாவம் வலுப்பெறும் என்பதால் மறைமுக எதிரிகள் தோன்றுவார்கள். நண்பர் ஒருவரே உங்களுக்கு எதிராக திரும்பி விரோதியாகும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு உங்களுடைய முன்யோசனை இல்லாத அவரசக் குடுக்கைத்தனமான செய்கையோ அல்லது கவனமின்றி சொல்லப்படும் ஒரு வார்த்தையோ காரணமாக இருக்கும்.

வயதானவர்கள் உடல்நலத்தில் எப்போதும் கவனம் வையுங்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். நீண்டகால குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் இப்போது வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

ஏற்கனவே இருக்கின்ற பழைய கடனை புதுக்கடன் வாங்கி அடைக்க நேரிடலாம். அல்லது தொழில் விரிவாக்கம், வியாபாரம், புதுத்தொழில் போன்றவற்றிற்காகவோ கடன் வாங்க நேரிடலாம். கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எக்காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம்.

வம்பு வழக்கு வரும் நேரம் இது. தேவையில்லாமல் எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். யாரிடமும் அனாவசியமாக பேசி சிக்கலை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். ஏதேனும் கோர்ட் போலிஸ் ஸ்டேஷன் வழக்கு போன்றவைகளில் சிக்கி அலையக் கூடிய வாய்ப்பு இருப்பதால் எல்லாவற்றிலும் உஷாராக இருங்கள்.

நிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் கோர்ட் கேஸ் என்று அலைய வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே அனைத்திலும் உஷாராக இருங்கள்.

எட்டாமிடம் வலுப்பெறுவதால் வெளிநாடு சம்பந்தப்பட்ட கம்பெனியில் வேலை செய்பவர்கள் வெளிநாட்டோடு வியாபாரத் தொடர்பு வைத்திருப்பவர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள் மேன்மை அடைவார்கள். 
வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு உடனே விசா கிடைக்கும். மாணவர்கள் கல்வி கற்க வெளிதேசம் செல்வார்கள்.

சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், மற்றும் புதையல், லாட்டரி போல முற்றிலும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் கிடைப்பது நடக்கும். நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து பெரும்தொகை கைக்கு கிடைக்கலாம்.

பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பணியில் இருக்கும் சில கன்னி ராசிக்காரர்கள், அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு மதிப்பு வாய்ந்த பதவி, அல்லது அதிகாரம் தரும் பதவி மற்றும் அந்தஸ்து உண்டாகும் செயல்கள் கௌரவமான நிகழ்வுகள் நடந்து நீங்கள் புகழ் பெறுவதற்கான அமைப்பு இப்போது இருக்கிறது.

தொழில் வேலை வியாபாரம் போன்ற அமைப்புக்கள் சுமாரான பலன்களைத்தான் தரும். வேலைப்பளு அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத் தொழில் செய்பவர்கள் வேலைக்காரர்களை அதிகம் நம்ப வேண்டாம். எந்த நேரமும் பரபரப்பாக அலைந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் அதற்கு தகுந்த பிரதிபலன் கிடைப்பது கஷ்டமாக இருக்கும்.

அரசு தனியார் துறை ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். விருப்பம் இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து உங்களை சங்கடப்படுத்தலாம். அனைத்தையும் பொறுமையாக எதிர்கொள்வதன் மூலம் சிக்கல்களில் இருந்து நல்லபடியாக வெளிவர முடியும்.

வீடு மாற்றம் தொழில் மாற்றம் வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான ஒரு விஷயத்தில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று இப்போது நடக்கும். இயந்திரம் சம்பந்தப்பட்ட தொழில், நகரும் பொருட்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு இப்போது தொழில் மாற்றங்கள் இருக்கும். அது நல்லதாகவும் இருக்கும்.

பணிபுரியும் இடங்களில் டிரான்ஸ்பர் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வெளியூருக்கு மாறுதல்கள் கிடைக்கும். இந்தக் குருப்பெயர்ச்சியால் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். எனவே அதுபோன்ற நிலைகளில் வேலை அமையும் வாய்ப்பு உள்ளது.

கூட்டுத்தொழில் செய்பவர்கள் பங்குதாரர்கள் விஷயத்தில் கவனமாக இருங்கள். தொழிலில் பிரச்னைகள் ஏற்படலாம். வேலைக்காரர்கள் உள்ளிட்ட எவரையும் நம்ப வேண்டாம். தொழில் ரீதியான பயணங்கள் இனிமேல் அடிக்கடி இருக்கும். வெளிமாநிலங்களுக்கு செல்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும். வெளிநாட்டுப் பயணங்களும் உண்டு.

பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி நல்ல பலன்களைத்தான் தரும். அதே நேரத்தில் பணி புரியும் இடங்களில் யாரையும் நம்பி எதையும் செய்ய வேண்டாம். குறிப்பாக அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும் என்பதால் அனைத்திலும் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது. வேலை மாற்றம், வீடுமாறுதல், அலுவலகம் மாறுதல், 
வெளியூருக்கு டிரான்ஸ்பர் ஆகுதல் போன்றவைகள் நடந்து கணவர் ஓரிடம் நீங்கள் ஓரிடம் என்று அலைச்சல்கள் இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி உங்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கான அடித்தளங்களை அமைத்துத் தருவதாக அமையும் என்பதால் கன்னி ராசிக்காரர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வீர்கள் என்பது உறுதி.

உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு:

மருத்துவம், ஆன்மிகம், எலக்டிரிகல் எலக்ட்ரானிக்ஸ், அன்றாடம் அழியும் பொருட்கள் போன்ற துறைகளில் இருப்பவர்கள் மிகப்பெரிய லாபம் அடைவீர்கள். இந்தக் குருப்பெயர்ச்சியால் உங்களுடைய வேலை தொழில் வியாபார அமைப்புக்கள் சிறப்பாக நடைபெறும். குறிப்பாக கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம் சொகுசு வாகனம் அலங்காரம் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு மிக விசேஷமான நல்ல பலன்கள் நடக்கும்.

அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு:

வேறு இன மொழி மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் இந்த வருடம் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள். குருப்பெயர்ச்சியின் பிற்பகுதியில் மிகவும் நல்ல பலன்கள் உங்களுக்கு நடக்கும். என்னதான் பிரச்னைகள் இருந்தாலும் பண வரவிற்கு கண்டிப்பாக குறைவு இருக்காது. எனவே எதையும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள்.

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு:

அரசியல்வாதிகளுக்கு மறைமுக எதிரிகள் பின்னால் குழி பறிப்பார்கள் என்பதால் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். பொது வாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கூடவே உங்கள் விரோதிகளும் உங்களை எதில் சிக்க வைக்கலாம் என்றும் அலைவார்கள். பத்திரிக்கை, ஊடகங்கள் போன்ற துறையில் இருப்பவருக்கு அலைச்சலும், வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க சிரமங்கள் இருக்கும்.

பரிகாரங்கள்:

ஜென்ம நட்சத்திரம் அன்று குடும்பத்துடன் கும்பகோணம் அருகில் உள்ள புகழ்பெற்ற குருபகவானின் திருத்தலமான ஆலங்குடி சென்று சிறப்பு ஆராதனைகளை செய்யுங்கள். மேலும் ஒரு வியாழக்கிழமை பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள் குரு ஹோரையில் ஒரு யானைக்கு அதற்கு விருப்பமான உணவு என்ன என்று அதன் பாகனிடம் கேட்டு தெரிந்து கொண்டு உணவிடுவது மிகுந்த நன்மை தரும்.

துலாம் : 2015 - குருப்பெயர்ச்சிப் பலன்கள்

துலாம் ராசிக்கு இதுவரை பத்தாமிடத்தில் இருந்து உங்களுடைய தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவனஅமைப்புகளில் தடங்கல்கள் ஏற்படுத்தி தொல்லை தந்துக் கொண்டிருந்த குருபகவான் இம்முறை பதினொன்றாம் இடத்திற்கு மாறி லாப குருவாக உங்களுக்கு நன்மைகளை தர போகிறார்.

பொதுவாக சுக்கிரனின் ரிஷப, துலாம் ராசிகளுக்கு குருபகவான் வலிமை அடைந்தால் நன்மைகளைச் செய்யமாட்டார் என்பது ஜோதிடவிதி. அதன்படி சென்ற முறை ரிஷப ராசிக்கு மூன்றிலும், துலாம் ராசிக்கு பத்திலும் உச்சம் பெற்ற குருபகவான் இவ்விரு ராசிகளுக்கும் நன்மைகள் எதுவும் செய்யவில்லை.

அதிலும் பெரும்பாலான துலாம் ராசிக்காரர்களை வேலை, தொழில் விஷயங்களில் பத்தில் இருந்த உச்சகுரு பிழிந்தெடுத்து விட்டார். சென்ற வருடத்தில் வேலை இழந்தவர்கள், வேலையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டவர்கள், காரணம் சொல்லப்படாமலேயே வேலையை விட்டு வெளியேற்றபட்டவர்கள் என துலாம் ராசிக்காரர்களின் துயரங்கள் அதிகம்.

அதேபோல சொந்தத் தொழில் செய்யும் துலாம் ராசிக்காரர்களுக்கும் வியாபாரிகளுக்கும் கடந்த காலங்களில் சுணக்கமான நிலையே இருந்து வந்தது. இந்த நிலைகளுக்கு காரணம் உச்சகுருதான் என்பதால் இப்போது நடைபெற இருக்கும் குருப்பெயர்ச்சி உங்களுக்கு இருக்கும் மனக்குறை அனைத்தையும் தீர்க்கும் என்பதால் துலாம் ராசிக்கு இது துன்பங்களை நீக்கும் குருப்பெயர்ச்சியாக இருக்கும்.

பதினொன்றாமிடத்தில் அதிநட்பு நிலைப்பெற்று லாபகுருவாக இருக்கும் குருபகவான் செய்கின்ற தொழிலில் அதிக முயற்சி இல்லாமலேயே நிறைந்த லாபங்களை தருவார். கண்மூடிக் கண் திறப்பதற்குள் பாக்கெட்டில் எப்படி பணம் வந்தது என்று சொல்ல முடியாத அமைப்பில் பண வரவு தற்போது உங்களுக்கு இருக்கும்.

அலுவலங்களில் நல்ல பெயர் கிடைக்கும். இழந்த போன பெருமையை மீட்டெடுப்பீர்கள். நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நீங்கள் நினைத்தபடியே நடக்கப்போகும் காலம் இது. எனவே இனிமேல் உங்களின் உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.

இதுவரை நல்லவேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.

அலுவலகத்தில் இதுவரை புரமோஷன் கிடைக்காதவர்கள் இரட்டிப்பு பதவிஉயர்வு கிடைக்கப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பள  உயர்வு உடனடியாகக் கிடைக்கும். இதுவரை உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, உங்களைப் புரிந்து கொள்ளும் நபர் உங்களுக்கு அதிகாரியாக வருவார்.

சுயதொழில் புரிபவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். வியாபாரிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். உங்களின் எதிரிகள் ஓட்டம் பிடிப்பார்கள். வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி போன்றவைகளிலும், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் வகைகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும். சினிமா தொலைகாட்சி போன்ற துறைகளில் இருப்போர் இந்த சாதகமான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மத்திய மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகள் மற்றும் வங்கி சம்பந்த பட்ட தேர்வுகள் எழுதுவோருக்கு இம்முறை வெற்றி கிடைக்கும். ஏற்கனவே எழுதி முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு குரு பகவான் நல்ல செய்திகள் கிடைக்க வைப்பார்.

கூட்டுக் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பீர்கள். வயதில் பெரியவர்கள் மூத்தவர்கள் மூலம் லாபம் உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினர்களுக்கு மளமள வென்று வரன்கள் நிச்சயிக்கப்பட்டு திருமண மண்டபம் புக்கிங் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று நடந்து திருமணம் கூடி வரும்.

குழந்தை இல்லாத தம்பதியினருக்கு உடனடியாக குழந்தை பிறக்கும். குடும்பத்தில் சொத்துச் சேர்க்கை இருக்கும். நகை வாங்க முடியும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்னைகள் விலகி உங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். நிலமோ, வீட்டுமனையோ வாங்க முடியும்.

பொதுமக்களோடு தொடர்புள்ள பணிகள் செய்யும் துறைகள், அரசியல்வாதிகள் போன்றோருக்கு கௌரவமான பதவிகள் மற்றும் அதிகாரம் செய்யக் கூடிய பதவி தேடி வரும். அரசு மற்றும் தனியார்துறை ஊழியருக்கு சம்பளம் தவிர்த்த ‘மேல்வருமானம்’ இருக்கும். பங்குதாரர்கள் இடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். 

புதிதாக ஆடம்பர வாகனம் வாங்குவீர்கள். அரசாங்க வழியில் நன்மைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். உங்களுடைய மாற்றங்களை அடுத்தவர்கள் உணரும்படி நடந்து கொள்வீர்கள்.

நண்பர்கள், நலம் விரும்பிகள் மூலம் பொருளாதார உதவிகள் ஆதரவான போக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். இதுவரை கோர்ட்கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும்.

புதிய ஏஜென்சி எடுக்கலாம். நல்ல கம்பெனியின் டீலர்ஷிப் கிடைக்கும். தொழிலை விரிவாக்கம் செய்யவோ புதிய கிளைகள் ஆரம்பிக்கவோ இது நல்லநேரம். விவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்ற எந்த துறையினர்களாக இருந்தாலும் இந்த நல்லநேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நினைத்ததை சாதிக்கலாம்.

கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். மூன்றாவது மனிதரால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அடையாளம் காணப்பட்டு நீங்களே பிறர் உதவியின்றி குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வீர்கள். லாபஸ்தானத்தில் இருக்கும் குருபகவான் தனது விசேஷ பார்வைகளால் உங்கள் ராசிக்கு மூன்று ஐந்து ஏழாமிடங்களைப் பார்ப்பார் என்பதால் அந்த இடங்கள் மிகவும் வலுப்பெற்று உங்களுக்கு நல்ல பலன்களை செய்யும்.

குருபகவானின் மூன்றாமிடப்பார்வையால் இதுவரை காணாமல் போயிருந்த உங்களின் மனதைரியம் இப்போது மீண்டும் வரும். எதையும் சமாளிப்பீர்கள். ஒரு சிலர் ஏதேனும் ஒரு செயலால் புகழ் அடைவீர்கள். சகோதர உறவு மேம்படும். இளைய சகோதரத்தால் நன்மை உண்டு. தம்பி தங்கையர்களுக்கு நல்லது செய்ய முடியும். மூத்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள். நோய்வாய்ப்பட்டிருந்தவர்கள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

பெண்களுக்கு தங்கம் மற்றும் வைரத்திலான கழுத்துநகை வாங்கும் யோகம் வந்துவிட்டது. மூன்றாம் இடம் கழுத்துப் பகுதியை குறிக்கும் என்பதால் இளம்பெண்களுக்கு தாலிபாக்கியமும் திருமணமானவர்களுக்கு நகைகள் சேருதலும் இந்த குருப்பெயர்ச்சியால் நடக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் அருமையான வாய்ப்புகள் வரக்கூடிய காலகட்டம் இது. அலுவலகத்தில் பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருக்கும் இளம் பெண்களுக்கு நீங்கள் விரும்பியவாறே அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.

இளம் பருவத்தினர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த வருடம் சந்திக்க வாய்ப்பு இருப்பதால் உங்களுக்கு காதல் வரக்கூடும். மாணவர்கள் படிப்பைத் தவிர மற்ற அனைத்து உல்லாசங்களிலும் ஈடுபடுவீர்கள். ஆனால் தேர்வு நேரத்தில் ஏதோ ‘மாய மந்திரம்’ செய்து பாசாகி விடுவீர்கள்.

குருபகவான் தனது பார்வையால் ஐந்தாமிடத்தைப் பார்த்து புனிதப் படுத்துவதால் வயதானவர்களில் இதுவரை தீர்த்த யாத்திரை செல்லாதவர்கள் இந்தக் குருப் பெயர்ச்சியால் நினைத்த புனிதத்தலத்திற்கு சென்று வருவீர்கள். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் கயிலை போன்ற வடமாநில புனித யாத்திரை செல்லும் பாக்கியம் சிலருக்கு கிடைக்கும்.

பூர்வ புண்ணிய ஸ்தானம் குருவின் பார்வையால் வலுப் பெறுவதால் மகன் மகள்களால் பெருமைப்படக் கூடிய செய்திகள் இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்யும் பிள்ளைகளை தற்போது பார்க்க முடியும். நீண்ட நாட்களாக தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாடு சிறப்பாகச் செய்ய முடியும்.

நேர்த்திகடன்கள் செலுத்துவீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். ஷீரடி மகான் ராகவேந்திரர் மகாபெரியவர் பகவான்ரமணர் சத்யசாய் போன்ற ஆன்மிகத் திருவுருக்கள் அவதரித்து அருளாட்சி செய்த திருத்தலங்களை தரிசிப்பீர்கள்.

இதுவரை சேமிக்க முடியாதவர்கள் இந்த முறை குழந்தைகளின் பெயரில் அவர்களின் எதிர்காலத்திற்காக ஏதேனும் ஒரு வழியில் முதலீட்டு சேமிப்புகள் செய்ய முடியும். மொத்தத்தில் துலாம் ராசிக்கு குருபகவானின் லாபஸ்தானப் பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் நல்ல யோகங்களையும் தரும் என்பது உறுதி.

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு:

எழுத்து சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்கள், அக்கவுண்டண்டுகள், கணிப்பொறித்துறையினர், செல்போன் போன்ற நூதன எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் விற்போர் குறிப்பாக காண்ட்ராக்டர்கள், நிர்வாகப்பணி சம்பந்தப்பட்டவர்கள், ஒரு துறைக்கோ அல்லது நிறுவனத்திற்கோ தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், தந்தையின் தொழிலைச் செய்பவர்கள், நெருப்பு சம்பந்தப்பட்டவர்கள் போன்றோருக்கு இந்தக் குருப்பெயர்ச்சி அற்புதமான பலன்களைத் தரும்.

சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு:

உங்களுக்கு மிகப்பெரிய லாபங்கள், பணவரவுகள் கிடைக்கும். வீடு வாகன விஷயங்களில் புதிய மாற்றங்கள் இருக்கும். சொந்த வீடு புதிய வாகனம் அமையும். மனைவியால் நன்மைகள் இருக்கும். இதுவரை அடுத்தவரை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள். தாயாரின் நன்மைகளுக்காக வரும் வருமானத்தில் செலவுகள் செய்வீர்கள். தாயாருக்காக ஏதேனும் வாங்கிக் கொடுப்பீர்கள். வரும் வருமானத்தை எதிர்காலத்திற்காக சேமிக்க முயற்சி செய்யுங்கள்.

விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு:

மாமியார் வீட்டில் இருந்து வாழ்க்கைத்துணையின் பங்காக ஏதேனும் ஒரு சொத்தோ, அல்லது நல்லதொகையோ சரியான சந்தர்ப்பத்தில் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. ரியல் எஸ்டேட், வீடு கட்டிக் கொடுக்கும் புரமோட்டர்கள், சிகப்புநிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், செம்மண் பூமி, ஆறு, மலைப்பாங்கான இடங்களில் தொழில் வைத்திருப்பவர்கள் மேன்மைகளை அடைவீர்கள். சீருடை அணிந்து செயல்படும் துறையினருக்கு இதுவரை இருந்த அனைத்துப் பிரச்னைகளும் விலகி நிம்மதி இருக்கும்.

பரிகாரங்கள்:

மூத்தவர்களுக்கும் குரு ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கும் சிறு உதவியாக இருந்தாலும் தேடிப்போய் உதவி செய்து அவர்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பெறுங்கள். வயதானவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப் பட்டால் உதவுவது, ஏழை மாணவருக்கு கல்வி உதவி, வசதிக்குறைவான குடும்பப் பெண்ணிற்கு திருமணத்திற்கு உதவுவது போன்றவைகளால் குருபகவானால் கிடைக்கும் நன்மைகளை இன்னும் பெருக்கிக் கொள்ள முடியும். 

விருச்சிகம் : 2015 - குருப்பெயர்ச்சிப் பலன்கள்

விருச்சிக ராசிக்கு இதுவரை ஒன்பதாமிடத்தில் இருந்து வந்த குருபகவான் பத்தாம் இடத்திற்கு மாறுகிறார். நமது மூலநூல்களில் ஒன்பதாமிடம் மிகச்சிறப்பான ஒரு இடமாகவும், பத்தாம் இடம் கேந்திர வீடு என்பதால் குருபகவானுக்கு சுமாரான இடமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில் சென்ற ஒரு வருடத்தில் ஒன்பதாமிடத்தில் இருந்த குருவால் விருச்சிக ராசிக்காரர்கள் ஓஹோவென்று இருந்திருக்க வேண்டும். ஆனால் என்னிடம் ஜாதகம் பார்க்க வந்தவர்களில் எழுபது சதவீதம் பேர் விருச்சிக ராசிக்காரர்கள்தான். விருச்சிகத்திற்கு கடுமையான ஏழரைச்சனி அமைப்பு நடந்து கொண்டிருப்பதால் கோட்சார நிலைகளில் சனியை தவிர வேறு எந்த நல்ல, கெட்ட கிரக நிலை அமைப்புகளும் வேலை செய்யாது.

முறையாகப் பார்த்தால் சென்ற மாதங்களில் ஒன்பதில் குரு, பதினொன்றில் ராகு என விருச்சிக ராசிக்காரர்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி சந்தோஷமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் பனிரெண்டு ராசிகளில் விருச்சிகம் மட்டுமே தற்போது வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் ஒரே வீட்டில் இருவருக்கு ஏழரை அஷ்டமச்சனி என்றால் வேதனைகளுக்கு சொல்லவே வேண்டாம்.

அவரவரின் பிறந்த ஜாதகத்திற்கும் வயதுகளுக்கும் ஏற்ப உங்களுக்கு ஏழரைச் சனியின் பலன்கள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. முப்பது வயதுகளில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு வேலை, தொழில், வியாபாரம் போன்ற அனைத்து அமைப்புகளிலும் துயரங்கள், துன்பங்கள், வாழ்க்கை இன்னும் செட்டிலாகாத நிலை, குடும்பம், குழந்தை என செட்டில் ஆனவர்களுக்கு வருமானம் இல்லாத நிலை என விருச்சிக ராசியின் வேதனைகள் அதிகம்.

எனவே ஒன்பதாமிடத்தில் உச்சமாக இருந்தும் சனியின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி நன்மைகளை செய்யாத குருபகவான் தற்போது பத்தாம் வீட்டில் சனியின் பார்வைக்குள்ளேயே வருவதால் உங்களுக்கு கெடுதல்களைச் செய்யப் போவதில்லை.

விருச்சிகராசியைப் பொறுத்தவரை கோட்சார நிலைமைகள் ஏழரைச் சனியின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் குருப்பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி எதுவும் இப்போது மிகப்பெரிய தாக்கத்தை உங்களுக்கு உண்டு பண்ணாது.

அதேநேரத்தில் சனியைத் தவிர வேறு கிரகங்கள் நன்மை-தீமைகளைச் செய்யாது என்று சொல்ல வருகிறீர்களா? என்று கேட்டீர்களானால் அதுவும் இல்லை என்றுதான் சொல்வேன்.

பிறகு ஒன்பது கிரகங்கள் என்று நவக்கிரக அமைப்பு என்ற ஒன்று இருப்பதே தவறு என்றல்லவா ஆகிவிடும்? சில சூட்சும நிலைகளில் கிரகங்கள் ஒன்றுக்கொன்று மற்றவைக்கு கட்டுப்பட்டவையாகிவிடும். அதுபோன்ற ஒரு நிலை இப்போது விருச்சிக ராசிக்கு இருப்பதால்தான் கோட்சாரத்தில் விருச்சிக ராசிக்கு பலன் சொல்லுவதற்கு மிகுந்த சூட்சும அறிவு தேவைப்படும்.

இம்முறை பத்தாம் வீட்டிற்கு மாறும் குருபகவான் சனியால் பார்க்கப்படுவதாலும் ஜனவரி மாதம் முதல் ராகுவுடன் இணைவதாலும் தன்னுடைய சுயத்தன்மையை இழப்பதால் விருச்சிக ராசிக்கு கலப்புப் பலன்களைதான் செய்வார்.

ஆனாலும் ஏழரைச்சனி முழுவதுமாக முடியாமல் இருப்பதால் எதிலும் அவரப்படாமல் பொறுமை காத்து புது முயற்சிகள் எதையும் இப்போது செய்யாமலும் மிகப்பெரிய முடிவுகள் எதுவும் எடுக்காமலும் புதிதாக எதையும் தொடங்காமலும் காத்திருப்பது நல்லது.

அதேநேரத்தில் இனிமேல் மிகப்பெரிய கெடுபலன்கள் எதையும் உறுதியாக சனி தரமாட்டார் என்றாலும் ஏழரைச்சனி என்பது அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு நீங்கள் சுகமாக வாழத் தேவையான அனுபவங்களைத் தரும் அமைப்பு என்பதால் சனியால் இன்னும் சில மாதங்களுக்கு சில எதிர்மறை அனுபவங்கள் உங்களுக்கு இருக்கும்.

இளைய பருவத்தினருக்கு இதுவரை வேலை விஷயங்களில் இருந்து வந்த இடையூறுகள் இப்போது நீங்கும். இதுவரை மனதை போட்டு அழுத்திக் கொண்டிருந்த சில விஷயங்கள் தெளிவாக ஆரம்பிக்கும். எந்த பாதையில் செல்வது என தீர்மானிக்க முடியாமல் இருந்தவர்கள் இப்போது தெளிவாகி பாதையை தேர்ந்தெடுப்பீர்கள்.

உயிர் நண்பன் என்று சொல்லிக் கொண்டவர்களையும், உறவினர்களையும் சனி ஏற்கனவே புரியவும், பிரியவும் வைத்துவிட்டபடியால் இனிமேல் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாகவே வைப்பீர்கள் என்பதால் இனிமேல் விருச்சிகத்திற்கு வேதனைகள் என்பதே இல்லை.

நடுத்தர வயதில் உள்ளவர்களுக்கு இனிமேல் வேலை, தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் சிக்கல்கள் எதுவும் இருக்காது. இதுவரை இருந்து வந்த கஷ்டங்களும், நஷ்டங்களும் இனிமேல் தொடராது. குருபகவான் இப்போது உங்களைச் சற்று இளைப்பாற வைத்து மூச்சுவாங்க வைப்பார் என்பதால் இனிமேல் நிம்மதியாக இருக்கலாம்.

அதேநேரத்தில் இந்தக் காலகட்டத்தில் எதிலும் சற்றுக் கவனமாக இருப்பது நல்லது. புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். முதலீடு செய்து தொழில் செய்ய வேண்டாம். தொழில் விரிவாக்கங்களும் கூடாது. அடுத்தவர்களையோ, வேலைக்காரர்களையோ, பங்குதாரர்களையோ முழுக்க நம்ப வேண்டாம். அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.

அடுத்த வருட பிற்பகுதியில் இருந்து விருச்சிகராசிக்கு நல்ல வருமானங்களும், ரொம்ப நாட்கள் மனதில் நினைத்திருந்த லட்சியங்கள் நிறைவேறுதலும், வீடு வாங்குதல் போன்ற சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். வீடுமாற்றம் அல்லது தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும் என்பதால் பொறுமை தேவை.

எல்லா விஷயங்களிலும் மிகுந்த எச்சரிக்கை உணர்வும் நிதானமும் அடக்கமும் கொண்டு செயலாற்றினால் நிச்சயம் சனியின் தாக்கத்திலிருந்து விடுபடலாம். குறிப்பாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் சிறிது காலம் அதைக் கை விடலாம். இயலாவிடில் அந்த நேரத்தில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.

யாரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும். பொருட்கள் திருட்டு போவதற்கோ நீங்கள் கை மறதியாக எங்காவது வைத்த பிறகு தொலைந்து போவதற்கோ வாய்ப்பிருக்கிறது. கைப்பொருளை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது. வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லது பெரிய தொகைகளை கையாளும்போதோ மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

வேலையில் இருப்பவர்கள் தங்களின் மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது நல்லது. வேலையில் மாற்றம் ஏற்படும் காலம்தான் இது என்றாலும் தேவையில்லாமல் வேலையை விட வேண்டாம். பிறகு அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

கடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு அவைகள் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து நிம்மதியைத் தரும். வீடு கட்டுவது இடையிலேயே தடைப்பட்டவர்கள், வீட்டுக் கடன் கிடைக்காமல் இருந்தவர்கள் இனிமேல் அந்த குறை நீங்கப் பெறுவார்கள்.

செலவுகளை சுருக்க வேண்டியது அவசியம். வீண் செலவுகள் செய்யாதீர்கள். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம்.
அவைகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது கடினம். தேவை இல்லாமல் யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். கூடுமானவரை எல்லோரையும் அனுசரித்து போவது நல்லது. என்னதான் பிரச்னைகள் இருந்தாலும் பணவரவிற்கு கண்டிப்பாக குறைவு இருக்காது. எனவே எதையும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள்.

பத்தாமிட குருபகவான் தனது பார்வையால் இரண்டு நான்கு ஆறு ஆகிய இடங்களைப் பார்த்து பலப்படுத்துவார் என்பதால் மேற்கண்ட பாவங்களின் தன்மைகள் பலப்படும். குடும்பத்தில் சந்தோஷமும் மங்கள நிகழ்ச்சிகளும் இருக்கும். தனகாரகனான குரு தனஸ்தானத்தை பார்ப்பதால் அந்த பாவம் வலுப் பெறுகிறது. இதனால் தனலாபம் உண்டாகும். பணத்திற்கு பஞ்சம் இருக்காது என்பதால் பணச்சிக்கல் வராது. கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள்.

குருவின் நான்காமிடப் பார்வையால் நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு வீட்டுக்கனவு நனவாகும். ஆனாலும் பெரும்பாலானவர்கள் லோன் போட்டுத்தான் வீடு கட்டவோ வாங்கவோ செய்வீர்கள். இந்தக் குருப்பெயர்ச்சி உங்களை கடன்காரராக்கி அதன் மூலம் ஒரு நல்ல சொத்து சேர்க்க வைக்கும்.

அம்மா வழி உறவினர்களுடன் நல்ல சுமுகமான உறவு இருக்கும். அவர்களால் ஆதாயம் வரும். பூர்வீக தாயார்வழி சொத்துகள் தற்போது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இருக்கும் பழைய வாகனத்தை மாற்றி புதியதாக வாங்குவீர்கள். வாகனம் இல்லாதவர்களுக்கு வாகனயோகம் இப்போது உண்டு. மாணவர்களுக்கு படிப்பு நன்கு வரும். உயர்கல்வி கற்பதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கி மேல்படிப்பு படிக்க முடியும்.

மகன், மகளுக்கு திருமணம் நடக்கும். வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா போன்ற பெண்கள் சம்பந்தப்பட்ட மங்கள நிகழ்ச்சிகளால் நீங்கள் சகோதரிகளுக்கோ, மகள்களுக்கோ, பேத்திகளுக்கோ கடன் வாங்கி சுபச்செலவு செய்ய வேண்டி இருக்கும். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி உங்களுக்கு கெடுதல்கள் எதையும் செய்யாது என்பதால் விருச்சிகத்திற்கு நிம்மதி தரும் பெயர்சிதான் என்பது உறுதி.

விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு:

சகோதர சகோதரிகளின் விஷயங்களில் நல்ல சம்பவங்களும் ஒருவருக்கொருவர் ஆதரவான நிகழ்வுகளும் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கித் தருவீர்கள். வீட்டில் ஆபரணச் சேர்க்கையும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குதலும் நடக்கும். இனிமேல் அதிர்ஷ்டம் உங்களுக்கு கை கொடுக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் இருந்த குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியும்.

அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு:

புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய அறிமுகங்கள் கிடைக்கும். ஒரு சிலர் தங்கள் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்திப்பார்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களிடமிருந்து விலகி இருந்தவர்கள் உங்களைப் புரிந்து கொண்டு தற்போது பக்கத்தில் வருவார்கள். இனிமேல் வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லத் துவங்கும். இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனிமேல் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். பண வரவுகள் சரளமாகி குடும்பத்தில் பணப் பிரச்னைகள் எதுவும் இல்லாமல் நிம்மதி இருக்கும்.

கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு:

இதுவரை உங்களுக்கு இருந்து வந்த தேவையற்ற பய உணர்வுகளும் கலக்கமான மனநிலையும் சிறிய விஷயங்களைக் கூட பெரிதாக்கி பார்த்து பயந்து கொண்டிருந்த சூழ்நிலையும் இனிமேல் விலகி மனத்தில் ஒரு புத்துணர்ச்சி பிறந்து புதுமனிதராக மாறப் போகிறீர்கள். இதுவரை விடை தெரியாமல் தத்தளித்து கொண்டிருந்த விஷயங்களுக்கான பதில்களும் தீர்வுகளும் உங்கள் மனத்தில் நல்லவிதமாகத் தோன்றி உங்களின் அனைத்துப் பிரச்னைகளும் உங்களுக்கு சாதகமாக முடிய போகிறது.

பரிகாரங்கள்:

ஏழரைச்சனி நடைபெறுவதால் சனிக்கிழமைதோறும் அருகிலுள்ள பழமையான சிவன் கோவிலில் அருள்புரியும் காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதும், வியாழக்கிழமையன்று தக்ஷிணாமூர்த்தி வழிபாடு செய்வதும் நல்லது. சென்னையில் இருப்பவர்கள் நங்கநல்லூர் மற்றும் ஆழ்வார்ப்பேட்டை ஆஞ்சநேயர் ஆலயங்களுக்கு சென்று அவரின் அருள் பெறுவதும் துன்பங்களைக் குறைக்கும். 

தனுசு : 2015 - குருப்பெயர்ச்சிப் பலன்கள்

தனுசு ராசிக்கு இதுவரை எட்டாமிடத்தில் உச்சமாக இருந்து கெடுபலன்களைத் தராத அமைப்பில் இருந்த ராசிநாதன் குருபகவான் தற்போது ஒன்பதாம் இடத்திற்கு மாறி தனது ராசியைப் பார்க்கப் போகிறார். இது ஒரு மிகவும் சிறப்பான நிலை. இந்த குருப்பெயர்ச்சியினால் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகுந்த நன்மைகளும், மேன்மைகளும் இருக்கும்.

தனுசு ராசிக்கு தற்போது ஏழரைச்சனி நடந்து கொண்டிருந்தாலும் சனியின் தாக்கத்தை முழுவீச்சில் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள்தான். தனுசுவிற்கு சனியின், கெடுபலன்கள் உணரப்படுவதற்கு இன்னும் சிறிது காலம் பிடிக்கும்.

இந்தப் பெயர்ச்சி மூலம் குருபகவான் தனக்கு மிகவும் பிடித்த அதிநட்பு வீடான சிம்மத்தில் அமர்ந்து அந்த இடம் இயற்கை சுபக்கிரகமான குருபகவானுக்கு பெருங்கோண வீடாகி தனது ராசியை தானே குருபகவான் பார்ப்பதால் மிகவும் நல்லபலன்கள் தனுசு ராசிக்கு உண்டு.

அதே நேரத்தில் ஏழரைச் சனியாக உங்களின் பனிரெண்டாம் வீட்டில் இருக்கும் சனிபகவானின் பத்தாம் பார்வை குருவின் மேல் பதிவதாலும் ஜனவரி மாதத்திற்கு மேல் குருபகவானுடன் ராகு இணைந்து குருவின் வலிமையை பறித்துக் கொள்ளுவதாலும் இந்த குருப்பெயர்ச்சியால் எழுபது சதவீத நன்மைகள் மட்டுமே உங்களுக்கு நடக்கும். அதே நேரத்தில் குருவால் கொடுக்கப்படும் இந்த எழுபது சதவீதமே உங்களுக்கு மிகவும் மேன்மையான பொருளாதர வலிமைகளை அளிக்கும் என்பது உறுதி.

மேலும் நட்புவீட்டில் பெருங்கோணத்தில் வலிமையுடன் இருக்கும் குருபகவானுக்கு முழுப்பார்வையும் உண்டு என்பதாலும் “குரு பார்க்க கோடி நன்மை” என்ற பழமொழி தனுசுக்கு முழுவதும் பலன் தரும் என்பதாலும் குருவின் பார்வைபடும் உங்களின் ராசி மூன்று மற்றும் ஐந்தாமிடங்கள் வலுப்பெற்று உங்களுக்கு அதித நன்மைகளை தரும்.

இந்த குருப்பெயர்ச்சி காலம் நடுத்தர வயதினருக்கு மிகவும் மேன்மையான ஒரு காலமாக இருக்கும். இளைய பருவத்தினருக்கு இந்த காலகட்டத்தில் படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளில் நல்ல பலன்கள் நடைபெறும்.

எந்த ஒரு விஷயத்திலும் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த மனக் கவலைகள் குழப்பங்கள், உடல் நலக் குறைவு, கடன் தொல்லை மற்றும் எதிர்மறை எண்ணங்கள், தொழில் தேக்கம், அதிர்ஷ்டக் குறைவு, தடைகள், தாமதங்கள் போன்ற அனைத்தும் இனித் தீரும் உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். எந்த ஒரு செயலையும் உடனுக்கு உடன் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும்.

இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள், தாமதமாகிப் போனவைகள் அனைத்தும் நல்லபடியாக நடந்து உங்களுக்கு மகிழ்ச்சியையும், வருமானத்தையும், புகழையும் தரும். உங்களுடைய சிந்தனை, செயல்திறன் கூடும், முகத்தில் பொலிவு வரும்.

தன்னம்பிக்கை மனதில் குடி கொள்ளும். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். உங்களுடைய கௌரவம், அந்தஸ்து கூடும் படியான சம்பவங்கள் நடக்கும். கையில் எந்த நேரமும் பணப்புழக்கம் அதிகரித்து குடும்பத்தில் உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும். இதுவரை பண விஷயத்தில் புரட்ட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் சிறிதளவு முயற்சி, பெரிதளவு அதிர்ஷ்டம், அதனால் நல்ல மேம்பாடான நிலை ஆகியவற்றை கண்கூடாக காண்பீர்கள்.

அலுவலகத்தில் இதுவரை புரமோஷன் கிடைக்காதவர்கள் பதவிஉயர்வு கிடைக்கப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பள உயர்வு உடனடியாகக் கிடைக்கும். இதுவரை உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, உங்களைப் புரிந்து கொள்ளும் நபர் உங்களுக்கு அதிகாரியாக வருவார்.

இதுவரை திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமண காலம் கூடி வந்து விட்டது. தடைகள் நீங்கி வரன்கள் கூடிவந்து உடனடியாக திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். ஒரு சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களின் வாழ்க்கைத் துணைவரை அடையாளம் காண்பீர்கள்.

குடும்பப் பிரச்னை காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒன்று சேருவீர்கள். விவாகரத்து வரை போன தம்பதிகள் வழக்கைத் திரும்பப் பெற்று சமரசமாகி திரும்ப இணைவீர்கள். முதல் வாழ்க்கை கோணலாகிப் போனவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு உடனடியாக குழந்தை பிறக்கும். மகன் மகள் விஷயத்தில் இதுவரை இருந்து வந்த மனக் கவலைகள் இனிமேல் இருக்காது. பிள்ளைகள் விஷயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். வயதானவர்கள் தாத்தா பாட்டியாக பதவி உயர்வு பெறுவீர்கள். இளையவர்கள் பெற்றோர்களிடமிருந்து ஆதரவையும் ஆசீர்வாதங்களையும் பெற முடியும்.

சொந்த வீடு கட்டுவதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தி இருந்தவர்கள் நல்ல விதமாக வேலையை முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். சிலருக்கு கட்டிய வீடோ, காலிமனையோ வாங்குவதற்கு இப்போது நல்ல சந்தர்ப்பம் வரும்.

கடன் தொல்லையால் அவதிப்பட்டவர்களுக்கு கடனை தீர்க்கக் கூடிய அமைப்புக்கள் உருவாகும். ஒரு சிலர் புதிய கடன்கள் பெற்று பழைய கடன்களை அடைப்பீர்கள். இனிமேல் கடன்கள் கஷ்டங்களைத் தராது. உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் திரும்பக் கிடைக்கப் பெறுவீர்கள்.

புதிதாக நல்ல வாகனம் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட விலை உயர்ந்த வாகனம் வாங்க முடியும். குடும்பத்தில் சொத்து சேர்க்கை மற்றும் பொன்நகை சேர்க்கை இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்து விதமான பொருட்களையும் இப்போது வாங்க முடியும்.

குருவின் மூன்றாமிடப் பார்வையால் தனுசு ராசிக்காரர்கள் சிலர் புகழடைவீர்கள். அவரவர் துறைகளில் அவரவர் வயதிற்கேற்ப சாதனைகள் செய்வீர்கள். மூன்றாம் இடம் கீர்த்திஸ்தானம் என்பதால் நவீனயுகத்தில் டி.வி. போன்ற காட்சி ஊடகங்களிலும், பத்திரிகை போன்ற எழுத்து ஊடகங்களிலும் தனுசு ராசிக்காரர்களால் சாதிக்க முடியும்.

கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கி கழுத்தில் போட்டு அழகு பார்க்க முடியும். குழந்தைகளின் எதிர் காலத்துக்கு முதலீடு செய்ய முடியும். பிள்ளைகள் விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் அவர்களை சேர்க்க முடியும்.

பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட துறையினருக்கு பொறுப்பான பதவி கிடைக்கும். மக்கள் மத்தியில் அந்தஸ்தும் கௌரவமும் கிடைப்பதோடு வருமானத்திற்கும் வழி பிறக்கும்.

குருபகவானின் ஐந்தாமிடப் பார்வையால் பூர்வபுண்ணிய ஸ்தானம் வலுப்பெறுகிறது. உங்களுடைய அதிர்ஷ்டத்தையும், சிந்தனைப் போக்கையும் குறிக்கும் ஐந்தாமிடத்தை குருபகவான் பார்ப்பதால் அதிர்ஷ்டம் கைகொடுக்கும் காலமாக இது இருக்கும். பிறந்தகால ஜாதக தசாபுக்தி அமைப்பு யோகமாக இருப்பவர்களுக்கு பருத்தி புடவையாய்க் காய்த்தது எனும் வகையில் இரட்டிப்பு நன்மைகள் இருக்கும்.

குலதெய்வ வழிபாடு மிகச் சிறப்பாக செய்ய முடியும். நீண்ட நாட்களாக தள்ளி போய் இருந்த குலதெய்வ தரிசனம் இப்போது பெற முடியும். இதுவரை குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்களுக்கு இறையருளால் இவர்தான் தெய்வம் என்று தெரியும் சந்தர்ப்பம் வரும்.

ஞானிகள் மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகமாகும். அறப்பணிகளில் ஆர்வம் அதிகரித்து ஈடுபாடு காட்டுவீர்கள். கும்பாபிஷேகம் போன்ற ஆலயத் திருப்பணிகளில் பங்கேற்கும் பாக்கியம் கிடைக்கும். இதுவரை தரிசிக்காத புனிதத்தலங்களுக்கு சென்று திரும்புவீர்கள்.

தந்தை வழியில் நல்ல செய்திகள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாடு செல்வீர்கள். சகோதர வழியில் உதவிகளும் நன்மைகளும் இருக்கும். சகோதர சகோதரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். உங்களிடம் காரியம் சாதித்து கொள்வார்கள். அவர்களுக்கு உதவ முடியும்.

பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகப்பெரிய மேன்மைகளை அளிக்கும் எனபது உறுதி. வேலை செய்யும் இடங்களில் இதுவரை இருந்துவந்த மனக்கசப்புகள் அனைத்தும் நல்லபடியாகத் தீர்ந்து உங்களுடைய அதிகாரங்களும் மேலாண்மையும் நிலைநாட்டப்படும். இதுவரையில் வீட்டிலும், அலுவலகத்திலும் இருந்து வந்த அனைத்து பிரச்னைகளும் நல்ல படியாக உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வந்து நிம்மதி அடைவீர்கள்.

விவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்ற தனுசு  ராசிக்காரர்கள் இந்த நல்லநேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு எதிர்காலத்தை வளப்படுத்திக் கொள்ள முடியும்.

மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு:

இதுவரை மந்தமாக இருந்த வந்த கூட்டுத் தொழில் இனி சிறப்பாக நடைபெறும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும். தொழில் அதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியை மேலும் பெருக்கித் தருவார்கள்.

பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு:

உடல் உழைப்பை பிரதானமாகக் கொண்டவர்கள், கறுப்புநிறப் பொருட்கள் சம்பந்தப்பட்டவர்கள், ஆலைத் தொழிலாளர்கள், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த வருடம் மிகவும் நல்ல வருமானங்களும், மனது சந்தோஷப்படும் நிகழ்ச்சிகளும் நடைபெறும். அதேபோல ஆசிரியர்பணி, மார்கெட்டிங், விற்பனைப் பிரிவில் உள்ளவர்கள், ரியல் எஸ்டேட் தொழிலர்கள், ஆலோசனை சொல்பவர்கள், ஊராட்சி நகராட்சி மாநகராட்சி சம்பந்தப்பட்டவர்கள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள், வெரிபிகேசன் துறையில் இருப்பவர்கள், தபால் மற்றும் கூரியர்துறையில் இருப்பவர்கள் நல்ல பலன்களை பெறுவீர்கள்.

உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு:

ரியல் எஸ்டேட், வீடு கட்டிக் கொடுக்கும் புரமோட்டர்கள், சிகப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், செம்மண் பூமி, ஆறு, மலைப்பாங்கான இடங்களில் தொழில் வைத்திருப்பவர்கள் மேன்மைகளை அடைவீர்கள். காவல்துறை ராணுவம் போன்ற சீருடை அணிந்து செயல்படும் துறையினருக்கு இதுவரை இருந்த அனைத்துப் பிரச்னைகளும் விலகி நிம்மதி இருக்கும். வீடு, வாகன, தாயார் விஷயத்தில் செலவுகள் இருக்கும். தாயாரின் நன்மைகளுக்காக வரும் வருமானத்தில் செலவுகள் செய்வீர்கள். தாயாருக்காக ஏதேனும் வாங்கிக் கொடுப்பீர்கள்.

பரிகாரங்கள்:

நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டிக்கும் சேந்தமங்கலத்திற்கும் நடுவில் உள்ள நைனாமலையில் எழுந்தருளி இருக்கும் பெருமாளையும் மலையடிவாரத்தில் அவரை சேவித்தபடி அருள்தரும் ஆஞ்சநேயரையும் ஒருமுறை சென்று வணங்கி வாருங்கள். தென் மாவட்டத்தவர்கள் செந்திலாண்டவனை தரிசிப்பதன் மூலம் எல்லா வளமும் நிறைவும் பெறுவீர்கள். 

மகரம் : 2015 - குருப்பெயர்ச்சிப் பலன்கள்

மகர ராசிக்கு இதுவரை ஏழாமிடத்தில் இருந்த குருபகவான் தற்போது மாற்றங்களைத் தரும் எட்டாமிடத்திற்கு மாறி அஷ்டமகுரு எனும் நிலை பெறுகிறார்.

அஷ்டம குரு என்றவுடன் யாருக்கும் ஒருவிதமான கலக்கம் ஏற்படுவது இயற்கைதான். ஆனால் சுபக்கிரகங்கள் மறைவுஸ்தானத்தில் வரும்போது எதிர்காலத்திற்கான நன்மைகளையே செய்யும் என்பதையும் பாவக் கிரகங்களைப் போல சுபர்கள் கடுமையான கெடுபலன்களை எப்போதுமே செய்வதில்லை என்பதையும் புரிந்து கொண்டால் இங்கே கலக்கத்திற்கு இடமில்லை.

உதாரணமாக அஷ்டமச்சனி செய்யும் கெடுதல்களுக்கும் அஷ்டம குருவால் வரும் விளைவுகளுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கின்றன. மேலும் ஒரு கிரகம் அந்த ராசிக்கு யோகராக இருக்கும் நிலையில் மறைவு பெற்றால் மட்டுமே கெடுபலன் தரும். ஒரு ராசிக்கு பாவராக இருக்கும் கிரகம் வலு இழந்தால் தீமையில்லை எனும் விதிப்படி மகரராசிக்கு மூன்று பனிரெண்டு எனும் ஆதிபத்திய விசேஷம் இல்லாத குருபகவான் எட்டில் மறைவது ஒரு வகையில் நன்மையைத்தான் தரும்.

எட்டில் மறையும் குருவால் எதிர்கால மாற்றங்கள் தற்போது உங்களுக்கு நடைபெறும். குறிப்பாக இளைய பருவத்தினருக்கு நீங்கள் எந்த விதத்தில் வாழ்க்கையில் நிலை பெற இருக்கிறீர்களோ அந்த இடத்தை நோக்கி உங்களை நகர்த்தும் வேலையை குருபகவான் செய்வார்.

மேலும் இது போன்று எட்டாமிடத்திற்குக் கிரகங்கள் வரும் போது உங்களில் ஒரு சிலர் இப்போது இருப்பதை விட எதிர்காலத்தில் நன்றாக இருக்க வேண்டியவர்கள் என்பதை உணராமல் சோம்பலுடன் தற்போது இருக்கும் சுமாரான நிலையே போதும் என்று ஒரே இடத்தில் உழன்று கொண்டிருக்கும் நிலையில் உங்களின் நன்மைக்காக இருக்கும் வேலையை விட்டு அந்த இடத்தை விட்டு உங்களை எட்டாமிட கிரகம் பிடரியில் உதைத்து வெளியே தள்ளும்.

அப்போதைக்கு அந்த வெளியேற்றம் உங்களுக்கு கெடுதலாக தோன்றினாலும் வாழ்க்கையே முடிந்து விட்டதாகத் தெரிந்தாலும் அதன் பிறகு ஏற்படும் வாய்ப்புகளினால் முன்பை விட நீங்கள் நன்றாக இருக்கும் போது எதற்காக இந்த வெளியேற்றுதல் நடந்தது என்பது உங்களுக்குப் புரிய வரும். இதுவே எட்டாமிட சுபக்கிரகங்களின் விளையாட்டு.

எனவே இந்த அஷ்டம குரு அமைப்பு மகரராசிக்கு எதிர்காலத்தில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டியதற்கான மாற்றங்களை தற்போது தரும். அது சில காலம் கசப்பாக இருந்தாலும் எதிர்காலம் இனிக்கும் என்பதால் மாற்றங்களை எதிர்கொள்ள மகரத்தினர் தயாராகுங்கள்.

குருபகவானின் பார்வை பனிரெண்டு, இரண்டு, நான்கு ஆகிய ஸ்தானங்களில் விழுந்து அவை வலுப்பெறுவதால் பனிரெண்டாமிடத்தின் சுபகாரகத்துவமான வெளிமாநிலம், வெளிதேசம் போன்றவற்றில் பிழைக்கும் வாய்ப்பு சிலருக்கு இப்போது ஏற்பட்டு உள்நாட்டில் இருக்கும் வேலையை விட அதிக சம்பளத்தில் சிலர் வெளிநாடு செல்வீர்கள்.

குறிப்பிட்ட சிலருக்கு வெளிநாட்டுக் கம்பெனிகளில் தலைமைப் பொறுப்பு கிடைப்பதும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் அமைவதும், வெளிதேச நட்பு மூலம் தொழில் லாபங்கள் இருப்பதும் வடக்கு நோக்கிச் செல்வதும் இந்த குருப்பெயர்ச்சியால் நடக்கும்.

குருபகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாமிடத்தை வலுப்பெற்றுப் பார்ப்பதால் இந்தக் குருப்பெயர்ச்சியினால் உங்களுக்கு பணவரவில் தடைகளோ, பொருளாதார கஷ்டங்களோ இருக்காது. வருமானம் சீராக இருக்கும் என்பதால் எவ்வித கஷ்டங்களும் உங்களுக்கு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை.

அதேபோல வாக்குஸ்தானம் வலுப்பெறுவதால் ஒருவருக்கு கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியும். குடும்பத்தில் சந்தோஷம், மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் வாங்க முடியும். சிலருக்கு குடும்பம் அமைந்து குடும்பஸ்தன் ஆவீர்கள்.

அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும், பேச்சினால் தொழில் செய்ய கூடிய ஆசிரியர்கள் வக்கீல்கள் போன்றவர்களுக்கும் வீடுமாற்றம், அலுவலக இட மாற்றம், ஊர்மாற்றம் போன்றவைகள் நடக்கக் கூடிய கால கட்டம் இது.
அலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் தற்போது கிடைக்கும்.

அரசு ஊழியர்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சியால் நன்மைகள் உண்டு. குறிப்பாக அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கும் மிகவும் நல்ல பலன்கள் நடக்கும்.
குறிப்பாக பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும் காலகட்டமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப்பதவிகள் தேடி வரும். பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். அடிக்கடி பிரயாணங்கள் செய்வீர்கள்.

தனியார் துறையினர் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம். திடீரென நிர்வாகம் கண்காணிப்பு வேலைகளில் ஈடுபடவோ, அது சம்பந்தப்பட்ட கருவிகளைப் பொருத்தவோ, ஆட்களை நியமிக்கவோ வாய்ப்பு உள்ளது.

சொந்தத் தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான காலம்தான். சுயதொழிலர்களுக்கு உற்பத்தி ஆர்டர்கள் சீராகக் கிடைக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். பணவரவு தடைப்படாது.

வியாபாரிகளுக்கு வியாபாரம் நல்லபடியாக நடக்கும். போட்டியாளர்களால் தொந்தரவு இருக்காது. கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். விவசாயிகளுக்கு இம்முறை இயற்கை ஒத்துழைக்கும். தேவையான நேரத்தில் மழை பெய்யும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு பெரிய நன்மைகள் உண்டு.

தொலைக்காட்சி, சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத் துறையினர், காவல் துறையினர், நீதித்துறையினர், வாகனங்களை இயக்குபவர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், தொழில் அதிபர்கள், வெளிநாட்டுத் தொடர்புடையவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக் கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் இந்த குருப்பெயர்ச்சி நல்ல பலன்களையே தரும்.

பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகவும் நல்ல பலன்களைக் கொடுக்கும். பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வேலை செய்யும் இடங்களில் சிக்கல்கள் எதுவும் இருக்காது. வீட்டிலும் உங்கள் பேச்சை கணவரும் பிள்ளைகளும் கேட்பார்கள்.

குடும்பத்தில் சுபகாரியங்களை மிகச் சிறப்பாக நடத்துவீர்கள். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பணியிடங்களில் மகிழ்ச்சியும் மரியாதையும் நிச்சயம் உண்டு.

குடும்பத்தில் யாராவது ஒருவர் கோபத்தில் பேசினாலும் மற்றவர் அடங்கிப் போவதால் எல்லாவித பிரச்னைகளையும் சமாளிக்க முடியும். மேலும் அறிவுப் பூர்வமாக சிந்திக்கக் கூடிய பெண் ஒருவர் இருக்கும் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் பெரிதாக வராது.

புனிதயாத்திரை செல்வீர்கள். ஞானிகள் மகான்களின் திருப்பாதம் பதிந்த இடங்களுக்கு சென்று தரிசித்து உங்களை புனிதப்படுத்திக் கொள்வீர்கள். குறுப்பிட்ட சிலருக்கு காசி கயா ரிஷிகேஷ் போன்ற வடமாநில தீர்த்த யாத்திரைகளும் ஆன்மிக சுற்றுலாக்களும் உண்டாகும். தெய்வ தரிசனங்களும் கிடைக்கும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகமாகும். மகான்களின் கருணைப் பார்வை உங்கள் மீது விழும்.

நீண்ட நாட்களாக குலதெய்வ வழிபாடு நடத்தாதவர்கள் உடனடியாக அந்தக் குறையைத் தீர்க்கும் வண்ணம் குலதெய்வத்தை தரிசனம் செய்யுங்கள். எத்தனை இஷ்ட தெய்வத்தை வழிபட்டாலும் குலதெய்வத்திற்கு மிஞ்சிய சக்தி இல்லை என்பது சித்தர்களின் வாக்கு.

மகன் மகள்களால் இதுவரை இருந்து வந்த மனச் சங்கடங்கள் விலகி அவர்களால் இனிமேல் சந்தோஷம் இருக்கும். அவர்களுக்குத் தேவையான விஷயங்களை தாமதம் இன்றி இனிமேல் செய்து கொடுக்க முடியும்.

குருபகவான் முயற்சி ஸ்தானம் எனப்படும் மூன்றுக்குடையவராகி எட்டில் மறைவதால் எந்த ஒரு விஷயமும் நீண்ட முயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும் என்பதால் கடினஉழைப்பும் விடாமுயற்சியும் கண்டிப்பாகத் தேவைப்படும். சில நேரங்களில் தோல்வி மனப்பான்மையும் விரக்தியும் ஏற்படலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்து செயல்படுவது நல்லது
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி மகரத்திற்கு எதிர்கால நன்மைகளைத் தரும் என்பதால் துளியும் கவலைகளுக்கு இடமில்லை.

உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு:

பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பணியில் இருக்கும் அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு மதிப்பு வாய்ந்த பதவி, அல்லது அதிகாரம் தரும் பதவி மற்றும் அந்தஸ்து உண்டாகும் செயல்கள் கௌரவமான நிகழ்வுகள் நடந்து நீங்கள் புகழ் பெறுவதற்கான அமைப்பு இப்போது இருக்கிறது. எதிரிகள் உங்களைக் கண்டாலே ஒளியும்படி இருக்கும். மறைமுக எதிரிகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் நடக்க இருக்கிறது. தொழிலை விரிவு படுத்தும் எண்ணங்கள் ஈடேறும்.

திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு:

வருமானம் மிகவும் நன்றாக இருக்கும். பணவரவும் சரளமாக இருக்கும். தொழில் மேன்மை மற்றும் பொருளாதார வசதிகளை குருபகவான் அளிப்பார். கேட்கும் இடத்திலிருந்து உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். நீண்ட கால லட்சியங்களை இப்போது நிறைவேற்றிக் கொள்ள முடியும். உங்களில் கணக்கிலும், கம்ப்யூட்டரைக் கையாளுவதிலும் புலியான சிலருக்கு இந்த வருடம் புதிய வேலை மாற்றங்களும், பன்னாட்டு கம்பெனியில் பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்கும். டிரெயினிங்கிற்காக வெளிநாடு போவீர்கள்.

அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு:

எல்லாவற்றிற்கும் அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகுந்த யோகத்தை தரும். தொழில் ரீதியான பயணங்கள் இருக்கும்.. நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும்.

பரிகாரங்கள்:

மகர ராசிக்காரர்கள் ஸ்ரீ தட்சிணாமூர்த்திப் பெருமானுக்கு வியாழக்கிழமை தோறும் விரதமிருப்பதும், வியாழன்தோறும் அவரை பூஜித்து வழிபடுவதும், ஜன்ம நட்சத்திரம் அன்று ஒருமுறை ஆலங்குடி, சென்னை பாடி திருவலிதாயம், வட ஆலங்குடி என அழைக்கப்படும் போரூர் ஈஸ்வரன் கோவில், திருச்செந்தூர் போன்ற குரு ஸ்தலங்களுக்கு சென்று குருபகவானை ஆராதிப்பதும் அதிர்ஷ்டங்களைத் தரும். 

கும்பம் : 2015 - குருப்பெயர்ச்சிப் பலன்கள்

கும்ப ராசிக்கு இதுவரை ஆறாமிடத்தில் இருந்து உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் தடைகள் தாமதங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த குருபகவான் தற்போது அவருக்கு மிகவும் நற்பலன்களைத் தரக்கூடிய இடமான ஏழாமிடத்திற்கு மாறி நன்மைகளைத் தரப்போகிறார்.

குருபகவான் இந்தப் பெயர்ச்சியால் உங்கள் ராசியைப் பார்க்கப் போவதால் குருபார்க்க கோடி நன்மை எனும் பழமொழி உங்கள் விஷயத்தில் பரிபூரணமாக நன்மைகளை செய்து இந்தப்பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்க இருக்கிறது.

இன்னொரு துணுக்கமாக குரு ராசியை பார்ப்பது நன்மைதான் என்றாலும் அவர் எத்தகைய வலுவில் இருந்து ராசியை பார்க்கிறார் என்பது முக்கியம் என்பதால் தற்போது அவர் அதிநட்பு நிலையில் இருந்து ராசியை பார்க்க போவதால் கும்பராசிக்கு மிகச்சிறந்த மேன்மைகள் கிடைக்கும் என்பது உறுதி.
குருபகவான் ராசியை பார்க்கப் போவதால் உங்கள் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். முகத்தில் எந்நேரமும் சந்தோஷம் தெரியும். இதுவரை மனதில் இருந்து வந்த குழப்பங்கள் உடனே விலகும். சென்ற காலங்களில் உங்களை வாட்டி வதைத்த சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மைகள் இனிமேல் உங்களிடம் நெருங்காது. அனைத்து விஷயங்களிலும் இருந்த வந்த தொல்லைகள் தடைகள் தாமதங்கள் விலகி அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசப் போகிறது.

இந்தக் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு புதிய மனிதரைப் போல உணருவீர்கள். உங்களின் அந்தஸ்து மதிப்பு அனைத்தும் உயரும் நேரம் இது. அடுத்தவர்களால் கௌரவமாக நடத்தப் படுவீர்கள். நீங்கள் தொட்டது துலங்கும் நேரம் இது. நீங்கள் நினைத்தது நடக்கும் காலம் இது. பிறந்த ஜாதகத்தில் நல்ல யோக தசா புக்திகள் நடந்து கொண்டு இருந்தால் உங்களில் சிலர் சாதனைகளை படைத்து புகழின் உச்சிக்கு செல்வீர்கள் என்பது உறுதி.

இதுவரை வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த போட்டிகளும், எதிர்ப்புகளும், பொறாமைகளும், தடைகளும் விலகி அனைத்தும் உங்களுக்கு நன்மை தரும் விஷயங்களாக மாறும். பணிபுரியும் இடங்களில் இதுவரை இருந்து வந்த நிம்மதியற்ற சூழல் இனிமேல் இருக்காது.

உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களுக்கு தொல்லை கொடுத்த மேல் அதிகாரிகள் மாறுதலாகி உங்களைப் புரிந்து கொண்டவர்கள் அங்கே வருவார்கள். இதுவரை தடைப்பட்ட பதவிஉயர்வு, சம்பளஉயர்வு போன்றவைகள் இப்போது கிடைக்கும்.

இளைய பருவத்தினருக்கு நல்லவேலை கிடைத்து திருமணமும் நடக்கும். காதலிப்பவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் நீங்கள் நினைத்தவரை மண முடிப்பீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. மண வாழ்வில் பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு அது தீரும். சிலருக்கு வேலை மாற்றம் நடந்து வெளியூரில் வேலை அமையும்.

போட்டி பந்தயங்கள் கை கொடுக்கும். தொழில் ஆரம்பிக்க உகந்த நேரம் இது. சுயதொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும். தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகளும் அதிருப்தியான நிலைமையும் மாறி தொழில் சூடு பிடிக்கும். வேலை செய்பவர்களும் பங்குதாரர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றம் மற்றும் விரிவாக்கத்திற்கான அனைத்தையும் தற்போது நல்ல விதமாகச் செய்ய முடியும்.

வியாபாரிகளுக்கு இது மிகுந்த லாபங்கள் வரக்கூடிய ஒரு காலகட்டமாக அமையும். எல்லாவிதமான வியாபாரமும் இப்போது கை கொடுக்கும். கிளைகள் திறக்கலாம். புதிய டீலர்ஷிப் எடுக்கலாம். வருமானம் சிறப்பாக இருக்கும். தொழிலில் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வதற்கு நல்ல நேரம் இது. அவர்கள் மூலம் முன்னேற்றங்கள் இருக்கும்.

சில தொழில்முனைவோர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து அமோகமான தொழில் வெற்றியைப் பெற்று பெரும்பணக்காரர்கள் ஆவதற்கு தற்போது வாய்ப்பு இருக்கிறது. விடா முயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள்அருள் உங்கள் பக்கம் இருக்கும் என்பது நிச்சயம்.

அரசு வேலை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மத்திய மாநில அரசுகளின் முதன்மைத் தேர்வுகளான ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் போன்ற பதவிகளுக்கு நல்லமுறையில் தேர்வுகளை எழுத முடியும். ஏற்கனவே தேர்வுகளை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு அது கைகூடும். சொந்தத் தொழில் செய்பவர்கள் மிகுந்த நல்ல மாற்றங்களை உணர்வார்கள். தொழில் சீர்படும். லாபம் தரும். வரும் லாபத்தை சேமிக்க முடியும். செலவுகள் குறையும். விரையங்கள் இருக்காது.

வியாபாரிகளுக்கு வியாபாரம் திருப்திகரமாக இருக்கும். நல்ல வேலைக்காரர்கள் அமைவார்கள். எந்த ஒரு விஷயமும் வெற்றி தரும். ஆரம்பிக்கும் காரியத்தை சுபமாக முடிக்க முடியும். கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள்.

இந்த குருப்பெயர்ச்சி காலம் முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப்பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.

தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு ஆலயப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக முடியும். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போன்ற வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும்.
ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். மகாபெரியவரின் அதிஷ்டானம் போன்ற மிகப்பெரும் புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும். தள்ளிப் போயிருந்த நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.

தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். இளைஞர்களுக்கு நீங்கள் விரும்பிக் கேட்கும் ஒரு பொருளை உங்கள் அப்பா வாங்கித் தருவார். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. இதுவரை இருந்துவந்த பங்காளிப் பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் உங்களுக்கு கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும்.

ஏழாமிடத்திற்கு மாறும் குருபகவான் தனது பார்வையால் பதினொன்று, மூன்றாம் இடங்களையும் பார்வையிடுவார் என்பதால் மேற்கண்ட இடங்கள் வலுப்பெற்று உங்களுக்கு லாபம் இம்முறை உண்டு.

மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும். அவர்களால் உதவிகள் இருக்கும். அண்ணன் தம்பி அக்கா தங்கை உறவுகள் பலப்படும். வயதில் மூத்தவர்களுக்கு மங்களகரமான நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும். இதுவரை திருமணம் தாமதமான அக்கா அண்ணன் போன்றவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணமாகும். அதிகம் பெண்களுடன் பிறந்தவர்கள் தங்கள் சகோதரிகளின் வீட்டு சுபகாரியங்களுக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும்.

குறிப்பிட்ட சிலருக்கு இப்போது இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள். அருமையான புதிய வீடு கட்டுவீர்கள். பெருநகரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் சொந்தமாக டீலக்ஸ் பிளாட் அமையும்.

பொதுவாழ்வில் உள்ள அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். ஊடகம் பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும். கலைத்துறையினர் இதுவரை இல்லாத நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். வாய்ப்புகள் வந்து வாசல்கதவைத் தட்டும். அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும்.

பெண்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி நல்ல பலன்களை அதிகம் தரும். இதுவரை உங்களை புரிந்துக் கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும்.

கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு நிரந்தரமாக கடன்கள் அடைந்து நிம்மதி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். இதுவரை மருத்துவத்திற்கு கட்டுப்படாமல் இருந்து வந்த நோய்கள் தீரும்.

கும்ப ராசிக்கு இது எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் காலகட்டமாக அமையும் என்பதால் இப்போது ஏற்படும் நன்மைகளால் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள்.

அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சிக் காலம் முழுவதுமே நல்ல பலன்கள் நடக்கும். பணவரவு திருப்தியாக இருக்கும். நீண்ட நாள் கனவு ஒன்று இப்போது நனவாகும். உங்கள் மனது போலவே எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கும். குறிப்பாக கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம் சொகுசு வாகனம் அலங்காரம் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு மிக விசேஷமான நல்ல பலன்கள் நடக்கும். அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கும் மிகவும் நல்ல பலன்கள் உண்டு.

சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு:

மனதில் ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். சித்தர்களின் ஆசிகள் எப்போதுமே உங்களுக்கு உண்டு. இம்முறை நீங்கள் தரிசிக்க விரும்பும் புனிதத்தலங்கள் அனைத்திற்கும் செல்லும் பாக்கியம் கிடைக்கும். நீண்டகால லட்சியங்களை இப்போது நிறைவேற்றிக் கொள்ள முடியும். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட துறையினர் சிறப்படைவார்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். இதுவரை காணாமல் போயிருந்த உங்களின் விடாமுயற்சியும் தைரியமும் மீண்டும் உங்களிடம் தலையெடுத்து அனைத்து பிரச்னைகளையும் நீங்கள் தனியொருவராகவே சமாளித்து தீர்க்கப் போகிறீர்கள்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:

எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் காலம் இது. வருங்காலத்தில் நீங்கள் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த வருடம் நிர்ணயிக்கும் என்பதால் மிகவும் பயனுள்ள பெயர்ச்சியாகும் இது. இந்த வருடம் அறிமுகமாகும் ஒருவர் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு தொடரும் உறவாக மாறுவார். அரசாங்கம் சம்பத்தப்பட்ட அனைத்தும் இனிமேல் உங்களுக்கு கைகூடி வரும். ஏதேனும் ஒரு பொறுப்பு கிடைக்கும். மற்றவர்களை வழி நடத்துவீர்கள். இனி எல்லாம் நல்லபடியாக நடக்கப் போகிறது.

பரிகாரங்கள்:

ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுங்கள். சென்னையில் இருப்பவர்கள் மாடம்பாக்கம் அருள்மிகு தேனுபுரீஸ்வரரை தரிசித்து அருள்பெறலாம். தென் மாவட்டத்தவர்கள் நெல்லை கிருஷ்ணாபுரம் அபயஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஜன்ம நட்சத்திரம் அன்று அர்ச்சனை ஆராதனைகளைச் செய்யுங்கள். 

மீனம் : 2015 - குருப்பெயர்ச்சிப் பலன்கள்

மீன ராசிக்கு இதுவரை உச்ச நிலையில் ஐந்தாமிடத்தில் இருந்து ராசியை பார்த்த குருபகவான் தற்போது நமது மூலநூல்களில் சாதகமற்ற இடம் என்று சொல்லப்படும் ஆறாமிடத்திற்கு மாறுகிறார்.

குருபகவான் ஆறாமிடத்தில் இருந்தால் நன்மைகள் கிடைக்காது என்று பொதுப் பலனாகச் சொல்லப்படுகிறது. ஜோதிடத்தில் பொதுவிதி என்று ஒன்று சொல்லப்பட்டால் சில சிறப்பு நிலைகளில் அதற்கு விதிவிலக்கு கண்டிப்பாக இருக்கும். அதன்படி மீன ராசி போன்ற உபய ராசிகளுக்கு குருபகவான் மறைவு ஸ்தானங்களில் இருக்கும்போது நன்மைகளைத் தருவார்.

ஏற்கனவே உங்களின் ஐந்தாமிடத்தில் உச்சமாக இருந்து ராசியை பார்த்த குருபகவானால் மீன ராசிக்கு மிகப்பெரிய நன்மைகள் எதுவும் சென்ற வருடம் கிடைக்கவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
உபய ராசிகளுக்கு ராசிநாதன் மறைவிடத்தில் மறைவது யோகமாக நமது கிரந்தங்களில் சொல்லப்படுவதால் இம்முறை ஆறாமிடத்திற்கு மாறும் குருபகவானால் சென்ற பெயர்ச்சியால் கிடைக்காத நன்மைகள் அனைத்தும் கிடைக்கும் என்பது உறுதி.

கேந்திராதிபத்திய தோஷம் பெறும் சுபக்கிரகம் மறைந்து நட்பு ஸ்தானத்தில் இருந்தால் நற்பலன் செய்யும் என்பதன்படியும் இம்முறை ஆறாமிடத்தில் உங்கள் ராசிநாதன் குரு அதிநட்பு வலுப்பெறுவதால் குருவால் உங்களுக்கு நன்மைகள் அதிகம் கிடைக்கும்.

இன்னும் ஒரு கருத்தாக குருபகவான் தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களைத்தான் வலுப்படுத்துவார் என்பதால் இந்த முறை அவர் பார்க்கும் இடங்களான உங்கள் ராசிக்கு பத்து பனிரெண்டு மற்றும் இரண்டு ஆகிய ஸ்தானங்கள் வலுப்பெறுகிறது. இதனால் மேற்கண்ட பாவங்களின் அமைப்புகளில் உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும்.

முதலாவதாக ஜீவன ஸ்தானத்திற்கு குருவின் பார்வை இருப்பதால் உங்களுடைய தொழில், வேலை, வியாபாரம் போன்ற விஷயங்களில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த மந்த நிலை உடனடியாக விலகி தொழில் வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். பொருட்கள் சேதமின்றி மீதமுமின்றி லாபத்திற்கு விற்பனையாகும்.
அதேநேரத்தில் வியாபாரிகள் தொழிலிடத்திலேயே இருந்து கவனிக்க வேண்டியது அவசியம். வேலைக்காரர்களை நம்பி கடையையோ தொழில் ஸ்தாபனத்தையோ ஒப்படைத்தால் வேலை செய்பவர்களின் ஆதிக்கம் மேலோங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. கொள்முதலுக்கு பணம் கொண்டு போகும் நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய தொகை பரிமாற்றங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். அனைத்திற்கும் வேலை செய்பவர்களை நம்பாமல் கவனமாக இருப்பது நல்லது.

புதிதாக வேலை தேடிகொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ற வேலை உடனடியாக கிடைக்கும். ஒருசிலருக்கு வெளியூரிலோ வெளிமாநிலத்திலோ தூரதேசங்களிலோ தங்கி வேலை செய்ய கூடிய அமைப்புகள் உருவாகும். இருக்கும் இடத்தில் இருந்து தொலைதூரம் செல்லும் படியான மாற்றங்கள் சிலருக்கு உருவாகும்.

முதலீடின்றி தனது புத்திசாலித்தனத்தை வைத்து சொந்த தொழில் செய்பவர்கள், மெக்கானிக்குகள் போன்ற சுயதொழிலர்கள், கடுமையான உழைப்பாளிகள், ஆலைத் தொழிலாளர்கள் விவசாயிகள் கலைஞர்கள் போன்றவர்களுக்கு வருமானம் மற்றும் பணவரவுகளுக்கு எந்தக் குறையும் இருக்காது.

பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள், கலைத்துறையில் இருப்பவர்கள், அன்றாடத் தொழில் செய்பவர்களுக்கு இனிமேல் பிரச்னைகள் எதுவும் இருக்காது. விவசாயிகளுக்கு இது நன்மை தரும் காலம். விளைந்த பயிருக்கு நியாயமான விலை கிடைக்கும். பணப்பயிர் மற்றும் எண்ணை வித்துகள் போன்றவை பயிரிட்டவர்களுக்கு லாபம் வரும்.

தொழிலதிபர்கள், கலைஞர்கள், பத்திரிகை மற்றும் ஊடக துறையினர், இயக்கும் தொழில் செய்பவர்கள், தினசரி சம்பளம் பெறுபவர்கள் உள்ளிட்ட சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் முன்னேற்றம் காணுவீர்கள்.

குறிப்பாக காண்ட்ராக்டர்கள், நிர்வாகப்பணி சம்பந்தப்பட்டவர்கள், ஒரு துறைக்கோ அல்லது நிறுவனத்திற்கோ தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், தந்தையின் தொழிலைச் செய்பவர்கள், நெருப்பு சம்பந்தப்பட்டவர்கள் போன்றோருக்கு இந்தக் குருப்பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும்.

அரசு தனியார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவைகள் கிடைக்கப் பெறும். சம்பளம் தவிர்த்த மேல் வரும்படிகளுக்கு அதிகமாக ஆசைப்பட வேண்டாம். அதனால் சிக்கல்கள் வரலாம். முறைகேடான வருமானங்கள் வரும்போது விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம். அவற்றால் வேறு விதமான பிரச்னைகள் வரும்.

பணியிடங்களில் மேலதிகாரி சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது. எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். நண்பர்களும் விரோதியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதால் யாரையுமே பகைத்துக் கொள்ள வேண்டாம்.
இதுவரை செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு மாற முயற்சி எடுத்துக் கொண்டிருப்பவர்கள் அதை சற்று ஒத்தி வைப்பது நல்லது. ஆனாலும் மாற்றங்கள் வந்தே தீரும் என்பதால் வேலையை விட்டு வெளியேறுவதற்கான நெருக்கடிகள் அதிகரிக்கக் கூடும்.

பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகமாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் முதலாளியாலோ அதிகாரியாலோ மனக் கசப்புக்கள் வருவதற்கும் சங்கடங்கள் தோன்றுவதற்கும் வாய்ப்பு இருப்பதால் எதிலும் எச்சரிக்கையும் கவனமுமாக இருந்து பொறுத்துப் போவது நல்லது.
குருபகவான் ஆறாமிடத்தில் வலுப்பெறுவதால் கடன் நோய் எதிரிகளைக் குறிக்கும் ஆறாம்பாவம் வலுப்பெறுகிறது. இதனால் சில அத்தியாவசியத் தேவைகளுக்கு கடன் வாங்கியே ஆகவேண்டியது இருக்கும். எவ்வளவு பெரிய தலை போகிற பிரச்னையாக இருந்தாலும் கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். அதிக வட்டிக்கு வாங்கினால் அடுத்த வருட ஆரம்பத்தில் கடன் தொல்லையில் கொண்டு போய் விடும் என்பதால் எச்சரிக்கை தேவை.

மேலும் கடன் வாங்குவதால் பிரச்சனைகள் தீராமல் இன்னும் அதிகமாகவே செய்யும். ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்குவது சட்டியிலிருந்து தப்பித்து அடுப்பில் விழுந்த கதை ஆகிவிடும்.
சொந்தத் தொழில் வைத்திருப்பவர்கள் அதனை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளை செய்வீர்கள். இதுவரை தாமதமாகி வந்த வங்கிக்கடன் தற்போது உடனடியாக ஓகே செய்யப்படும். இதுவரை உங்களிடம் முகம் கொடுத்தும் பேசாத வங்கி அதிகாரி தற்போது உபசரித்து கடன் தருவார்.

ஆடம்பரச் செலவுகளுக்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. கிரெடிட் கார்டு உபயோகப் படுத்துவதில் கவனமாக இருப்பது நன்மையைத் தரும். குறிப்பிட்ட சிலருக்கு நீண்டகால வீட்டுக்கடன் அமைந்து கடனாளி ஆனாலும் நல்ல வீடு அமையும் யோகத்தையும் குருபகவான் தருவார்.
யாரிடமும் தேவையற்ற வீண் வாக்குவாதம் வைத்துக் கொள்ள வேண்டாம். ஆறாமிடத்துக் குரு நல்ல நண்பர்களையும் சிறு பிரச்னைகளால் எதிரிகளாக மாற்றுவார் என்பதால் தேவையற்ற பிரச்னைகளில் தலையிட வேண்டாம். யாரையும் நம்பி கையெழுத்து போடுவதோ எவருக்கும் ஜாமீன் கொடுப்பதோ 
கூடாது.

நடுத்தர வயதை எட்டுபவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம். சர்க்கரை ரத்த அழுத்தம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்படும் நேரம் இது என்பதால் உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு சுகக்குறைவு என்றாலும் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது. முடிந்தால் ஒரு முழு உடல் பரிசோதனை கூட செய்து கொள்ளலாம்.
நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். அவற்றால் சிக்கல்கள் வரலாம். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். பங்குச் சந்தை போன்ற ஊக வணிகங்கள் இப்போது கை கொடுக்காது. நஷ்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஷேர் மார்க்கட்டில் மிகவும் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் கவனமாக நடந்து கொள்வது நல்லது.

அடிதடி சண்டை போன்றவைகளால் கோர்ட் காவல்துறை போன்ற இடங்களுக்கு அலைய வேண்டியது ஏற்படக்கூடும் என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏற்கனவே வழக்கு விவகாரங்கள் இருந்தால் அவற்றை முடிப்பதற்கும் அவசரப்பட வேண்டாம். தற்போது தீர்ப்பு வரும் நிலை இருந்தால் அவற்றை தள்ளி வைக்க முயற்சிப்பது நல்லது. தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வருவது கடினம்.

பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியால் நல்லபலன்கள்தான் அதிகம் இருக்கும். குடும்பத்தலைவியாக இருக்கும் பெண்களுக்கு அதிகமாக நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு திண்டாட்டமாகலாம். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். இருவரும் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து போவீர்கள்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:
உங்களின் அனைத்துத் திறமைகளையும் மற்றவர்கள் அடையாளம் கண்டுகொள்ளும் நேரம் இது. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் எனும் பழமொழி இப்போது உங்களுக்குப் பொருந்தும். தோல்விகள் அனைத்தும் வெற்றியின் படிக்கட்டுகளாக மாறும் என்பதால் உற்சாகத்துடன் செயலாற்றுவீர்கள். கேட்கும் இடத்திலிருந்து உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். நீண்ட கால லட்சியங்களை இப்போது நிறைவேற்றிக் கொள்ள முடியும். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட துறையினர் சிறப்படைவார்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும்.

உத்திராட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:
கையில் தாராளமாக பண நடமாட்டம் இருக்கும் என்பதால் பணச்சிக்கல் வராது. கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். உங்கள் வாக்குப் பலிக்கும். நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு வீட்டுக்கனவு நனவாகும். பெரும்பாலானவர்கள் லோன் போட்டு வீடு கட்டவோ வாங்கவோ செய்வீர்கள். இந்தக் குருப்பெயர்ச்சி உங்களை கடன்காரராக்கி அதன் மூலம் ஒரு நல்ல சொத்து சேர்க்க வைக்கும்.

ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு:
உங்களில் சிலர் கிழக்கு நாடுகளுக்கு வேலை விஷயமாகச் செல்வீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். எதிர்கால நல்வாழ்விற்கு சேமிப்பது நல்லது. வீண் செலவுகளை முடிந்தவரை குறைத்துக் கொண்டால் வளமான வாழ்க்கை உண்டு. சுயதொழில் வியாபாரம் போன்றவைகளை நடத்துவோருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆயினும் வாங்கும் கடன் நல்லபடியான முதலீடாக முன்னேற்றத்திற்கானதாக வருமானம் வரும் வகையில்தான் செலவாகும்.

பரிகாரம் :
வியாழக்கிழமை தோறும் அருகில் உள்ள பழமையான ஈஸ்வரன் கோவிலில் உள்ள ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திப் பெருமானுக்கு கொண்டைக் கடலை மாலை சாற்றி மஞ்சள் ஆடை சமர்பித்து மஞ்சள் நிற இனிப்பான லட்டு நைவேத்தியம் செய்து நெய் தீபம் ஏற்றி வாருங்கள். வயதில் மூத்தவர்கள் மனம் குளிரும் காரியங்களை செய்யுங்கள். குருபகவான் உங்கள் ராசிநாதன் என்பதால் உங்களுக்கு எவ்வித குறையையும் இம்முறை வைக்க மாட்டார் என்பது உறுதி.