சனிபகவானைக் கும்பிடலாமா?

அஷ்டமச் சனி உங்களுக்கு ஆரம்பிக்கப் போகிறது என்றால் ஆடிப்போகாத ஆளே இல்லை. மனித வாழ்வில் கிரகங்களின் தாக்கத்தை நம்பும் ஒவ்வொருவருக்கும் சனிப்பெயர்ச்சி என்றாலே ஆர்வமும் பயமும் தரும் விஷயம்தான்.

வருடக்கிரகங்களான குரு, ராகு-கேது, சனி ஆகியவற்றில் சனிப் பெயர்ச்சிக்கே நாம் எல்லோரும் அதிக முக்கியத்துவம் தருகிறோம். அதற்கு காரணம் சனிபகவான் மட்டுமே ஒன்பது கிரகங்களில் நமக்கு கொடிய துன்பத்தைத் தருபவர் என்பதினால்தான்.

பரம்பொருளால் நமக்கு அருளப்பட்டவை அனைத்தும் இருவேறு எதிரெதிர் நிலைகளைக் கொண்டவைதான். ஆண்-பெண் பகல்-இரவு நன்மை-தீமை என்பதைப் போல கிரகங்களிலும் சுபகிரகம் அசுபகிரகம் என இருக்கும் இரண்டு பிரிவுகளில் முதன்மையான பாபகிரகம் சனிபகவான்.

சனிபகவான் உலகில் பிறந்த எல்லோருக்கும் நன்மை செய்பவர் அல்ல. குறிப்பிட்ட சில லக்னங்களில் பிறப்பவர்களுக்கு மட்டுமே அவர் நன்மை செய்யக் கடமைப்பட்டவர். அப்போது கூட மற்ற சுப கிரகங்களைப் போல அல்லாமல் தனது தீய செயல்பாடுகளின் வழியேதான் அதனைச் செய்வார்.

சனிபகவான் ஒரு இரக்கமற்ற நீதிபதி. மனிதனின் கர்மவினைகளின்படி அவனைத் தண்டிக்கும் அதிகாரம் பெற்ற ஒரே கிரகம் இவர்தான்.

மற்ற கிரகங்களை வழிபடுவதைப் போல அல்லாமல் சனிபகவானுக்கு மட்டும் சில குறிப்பிட்ட வழிபாட்டு முறைகளையும் பரிகாரங்களையும் நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகளும் சித்தர்களும் சொல்லியிருக்கிறார்கள். காலப்போக்கில் அவைகளை நாம் சரிவரப் புரிந்து கொள்ளாமல் அவற்றைத் தலைகீழாக செய்து கொண்டிருக்கிறோம்.

குறிப்பாக நமது ஞானிகள் சனிக்கு எதிரே போய் நிற்கக்கூடாது என்று நம்மைத் தெளிவாக அறிவுறுத்தியிருக்கிறார்கள். ஆனால் நாம் அதைப் புரிந்து கொள்ளாமல் ஒதுங்கி நின்று சனியை வணங்கிக் கொண்டிருக்கிறோம்.

திறந்த மார்பு காட்டி நேருக்குநேர் நின்று வணங்கும் உன்னத முறைகளைக் கொண்ட நமது உலகின் மேலான இந்து மதத்தில் ஒரு கிரகமூர்த்திக்கு முன்பு போய் நிற்காதே என்று நமது ஞானிகள் சொன்னதற்கு உண்மையான அர்த்தம் நீ சனியை வழிபட வேண்டாம் என்பதுதான்.

ஒரு கிரகத்தை எதற்காக வணங்குகிறோம்?

அந்தக் கிரகம் அதனிடம் இருக்கும் நமக்கு வேண்டியவைகளை, நமக்குத் தேவையானவைகளை அருள வேண்டும் என்பதற்காகத்தான்.

அதன்படி குருபகவானை வணங்கினால் அவர் தன, புத்திரகாரகன் என்பதால் அவரிடம் இருக்கும் பணத்தையும் குழந்தைபாக்கியத்தையும் நமக்கு அருளுவார். சுக்கிரனை வணங்கினால் அவரிடம் இருக்கும் வீடு வாகனம் நல்லமனைவி ஆகியவை கிடைக்கும். சந்திரனை வழிபட்டால் மனோபலமும் மாதாநலமும் தரப்படும். புதனைப் பற்றினால் அறிவாற்றல் நிச்சயம். செவ்வாயைச் சரணடைந்தால் கூட சகோதர ஆதரவும் தைரியமும் உண்டு.

சனியை வணங்கினால் உங்களுக்கு என்ன கிடைக்கும்? தருவதற்கு அவரிடம் என்ன இருக்கிறது? தன்னை வணங்கும் மனிதனுக்கு எதைக் கொடுக்க அதிகாரம் அளிக்கப்பட்டவர் அவர்?

கடன் நோய் தரித்திரம் உடல்ஊனம் ஆயுள் இவைகள்தானே அவரிடம் இருக்கின்றன? அவர் ஆயுள்காரகன் மட்டும்தானே?

அதனால்தான் சனிக்கு எதிரே நிற்காதே என்று சொன்னார்கள் நமது ஞானிகள். செல்போன் யுகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஆன்மீக விஷயத்தில் நம் முன்னோர்களை விட அறிவாளிகளா நாம்?

அனைத்து தெய்வங்களின் திருவுருவப்படங்களை நம் வீட்டிற்குள் வைத்து வணங்கி வழிபட நமக்குச் சொல்லித்தந்த நமது மூதாதையர்கள் சனியின் படத்தை மட்டும் ஏன் வீட்டிற்குள் வைத்து வணங்கக் கற்றுக் கொடுக்கவில்லை? சனியை வழிபட்டாலும் அதன் பிரசாதங்களை ஏன் வீட்டிற்குள் கொண்டு வராதே, சனி சம்பந்தப்பட்டதை வீட்டிற்குள் சேர்க்காதே என்றார்கள்?

( இப்போது சில சனி கோவில்களில் பிரசாதங்களை வீட்டுக்கு எடுத்துப் போகலாம் என்ற பிரச்சாரமும் நடக்கிறது. சனியின் உருவப்படங்களும் வந்து விட்டன.)

சரி...

கும்பிடக்கூடாது என்றால் கோவிலை ஏன் கட்டி வைத்தார்கள்?
ஒரு எண்பது வயதுக்கிழவன் தனது பேத்தியின் திருமணத்தைக் காண விரும்புகிறான். தடியை ஊன்றிக்கொண்டு தள்ளாடி சனி முன்பு நின்று இன்னும் ஒருவருடம் மட்டும் எனக்கு ஆயுள் கொடு. என் கண்ணுக்குக் கண்ணான என் செல்வத்திருமகளின் கல்யாண வைபவத்தை கண்குளிரப் பார்த்துவிட்டு பரமபதம் அடைகிறேன், ஒரு வாழப்பிறந்த வாலிபன் கர்ப்பிணி மனைவியை விட்டுவிட்டு விபத்தினால் சாகக்கிடக்கிறான், அவனுக்கு ஆயுள் கொடு, வரும்போதே இருதயவால்வில் ஓட்டையோடு வந்து விட்டது இந்தப்பிஞ்சு, இதனை வாழவிடு என்று வேண்டிக்கொள்ள மட்டுமே உருவாக்கப்பட்ட சன்னதிகள் இவை.

ஆயுளை வேண்டக் கட்டப்பட்டவை இவை. அதிர்ஷ்டம் கொடு என்று கேட்பதற்காக இல்லை.

திருநள்ளாறு ஸ்தல வரலாற்றில் கூட நளமகாராஜன் ஏழரைச்சனி முடிந்த பிறகு அங்கு வந்து குளத்தில் குளித்து எல்லாம் வல்ல இறைவன் எம்பெருமான் தர்பாரண்யேஸ்வரரைத்தான் தரிசித்து வணங்கிச் சென்றான்.
சனிபகவானுக்கு மட்டும் இறைவன் “ஈஸ்வர” பட்டதை அருளியதாக நம் தமிழகத்தில் ஒரு பொருத்தமற்ற கதை நிலவி வருகிறது. அது முற்றிலும் தவறு.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே கலாச்சாரத்தைக் கொண்ட நமது பாரததேசத்தில் அனைத்து தெய்வங்களின் பெயரும் நாடு முழுமைக்கும் ஒன்றாகத்தான் இருக்கிறது. சில இடங்களில் மட்டும் அந்தப் பகுதி மொழிக்கேற்ப பொருள் மாறாமல் பெயர்கள் மாறும். இங்கே முருகு என்றால் அழகு என்ற அர்த்தத்தில் முருகனாக இருப்பவர் வடமாநிலத்தில் கார்த்திகேயனாக மாறுவார். அவ்வளவுதான்.

ஆனால் சனிபகவானுக்கு தமிழ்நாட்டில் மட்டும் ஒரு அடைமொழி சேர்த்து சனீஸ்வரன் என்று கொண்டாடுகிறோம். வடபாரதத்தில் அவர் சனிதேவ், சனிமகாத்மா, சனிபகவான் மட்டுமே சனீஸ்வரன் இல்லை.

நமது மேலான இந்து மதத்தில் சர்வேஸ்வரன் ஒருவன் மட்டுமே. அவர் இந்த சனிபகவானைப் போல கோடிக்கணக்கான கிரகங்களைப் படைத்த எல்லாம் வல்ல பரம்பொருள். அவனுக்கு மட்டுமே அந்தப்பட்டம். அவன் படைத்த எந்தப் பொருளுக்கும் இல்லை.

இந்த ஈஸ்வரப்பட்டம் தமிழில் எப்படிப் புகுந்தது?
சனியை நமது தெய்வமொழியான மகோன்னத சம்ஸ்கிருதம் “சனைச்சர” என்று குறிப்பிடுகிறது. இதன் அர்த்தம் மெதுவாக நகர்பவர் என்பதாகும். ஆலயங்களில் நன்கு கற்றறிந்த அந்தணர்கள் ஸ்பஷ்டமாக மந்திரங்களைச் சொல்லும் பொழுது உன்னிப்பாக கவனித்தால் சனிபகவான் துதியில் “சனைச்சராய சுவாமி” என்று உச்சரிப்பதைக் கவனிக்கலாம்.

இதுவே நாளடைவில் சனீஸ்வர சுவாமி என்று மருவியதே தவிர கிரகங்களில் அவருக்கு மட்டும் ஈஸ்வரப்பட்டம் என்பது பொருத்தமற்ற புகுத்தப்பட்ட கதை.

  
ஆயிரக்கணக்கான தெய்வங்கள், ஆயிரமாயிரம் கோவில்கள், வழிபாட்டு முறைகளைக் கொண்ட நம்முடைய உன்னத மதத்தில் அனைத்து முறைகளும் கிரகதோஷத்தைப் போக்குவதுதான். பழமையான நமது கோவில்கள் அனைத்தும் நமது ஞானிகளால் விஞ்ஞானமுறைப்படி பூமியில் ஒவ்வொரு கிரகங்களின் தாக்கம் ஏற்படும் இடங்களை கண்டறிந்து கட்டப்பட்டது தான். 

இந்த சனிப்பெயர்ச்சியில் இம்முறை கெடுபலன்கள் இல்லாத நிலையைப் பெறும் ராசிகள் மகரம் கன்னி மிதுனம் ராசிகள். இவர்களுக்கு சனிக்கான பரிகாரங்கள் எதுவும் தேவையில்லை.

கன்னிராசிக்கு ஏழரைச்சனி முடிவதால் நமது ஞானிகள் அறிவுறுத்தியபடி திருநள்ளாறு சென்று அந்தத் திருக்குளத்தில் குளித்து முறைப்படி சர்வேஸ்வரன் எம்பெருமான் தர்பாரண்யேஸ்வரரையும் அன்னையையும் தரிசித்து திரும்புவது நல்லது.

தனுசுராசிக்கு ஏழரைச்சனியும் மேஷத்திற்கு அஷ்டமச்சனியும் சிம்மத்திற்கு அர்த்தாஷ்டமச்சனியும் தொடங்குவதால் இந்த மூன்று ராசிக்காரர்களும் சனிக்கிழமைதோறும பழமையான சிவன்கோவில்களில் அருள்பாலிக்கும் சனியின் குருவான காலபைரவ பெருமானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றியோ அல்லது சனியால் நெருங்க இயலாத ஸ்ரீராமதாசன் ஹனுமனை நெய்தீபம் ஏற்றியோ வணங்க வேண்டும். இது சனியின் கடுமைகளைக் கண்டிப்பாக காணாமல் போகச் செய்யும்.

எக்காரணம் கொண்டும் எங்கும் எள்தீபம் ஏற்றாதீர்கள். இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படுத்தும்.

எள் என்பது அரிசியைப் போல ஒரு தானியம். அரிசியை எரிப்போமா? எள்ளை எண்ணையாக்கி அந்த எண்ணையைக் கொண்டு தீபமேற்றச் சொல்லித்தான் நமது பரிகாரமுறைகள் சொல்கிறதே தவிர எள்ளையே நேரிடையாக எரிக்க அல்ல. எள்ளை நைவேத்தியமாகத்தான் படைக்க வேண்டும்.

மனித உருவத்தில் நமது காலத்தில் வாழ்ந்து நம் கண் முன் நடமாடிய மகான் காஞ்சிக் கடவுள் ஸ்ரீமகாபெரியவர் ஒருமுறை இந்த எள்தீபம் கூடாது என்று தெளிவுபடுத்தியும் நமது கோவில்களில் இந்த முறையைத் தொடருவது துரதிர்ஷ்டம்தான்.

 மேலே உள்ள சனியைக் கும்பிடலாமா என்ற கட்டுரை ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி  பிரபலமான மாலைமலர் நாளிதழில் எழுதியது.

No comments:

Post a Comment