நவாம்ச பலன்கள் – மிதுனம்


மிதுன நவாம்ச லக்னத்தை கொண்டவர்கள் காண்போரை வசீகரிக்கும் தோற்றம் கொண்டவர்கள். காலம் அறிந்து காய் நகர்த்தும் சாமர்த்தியசாலிகள். இவர்கள் செய்யும் செயல்களால் பாராட்டப்படுவார்கள். இசை, இலக்கியம், நாடகம், கதை, கவிதை, காவியம் மற்றும் எழுத்து துறைகளில் ஞானம் மிக்கவர்கள், பிறரைப் போல் கேலியாக நடித்து காட்டுவதில் வல்லவர்கள். கவிபாடும் ஆற்றல் உள்ளவர்கள். கேட்போரை வயப்படுத்தும் பேச்சுத் திறன் வாய்கப்பெற்றவர்கள்.

புதுமைகளும், புரட்சிகளும் இவரதுசொற்களில் தெறிக்கும். சீர்திருத்தம் உடனே தேவை என்று முழங்குவார்கள். இவரது வார்த்தையை பின்பற்ற பெரும் கூட்டமே காத்திருக்கும் என்றாலும் பேச்சில் இருக்கும் வேகம் செயலில் இருக்காது. தலைமை ஏற்று முன் நடத்தி செல்ல மாட்டார்கள். வெறும் பேச்சோடு சரி. விமர்சனம் செய்வதிலும், விவரமாக கேள்வி கேட்டு மடகுவதிலும் சமர்த்தர்கள். இவர்களிடம் தர்க்கம் செய்பவர்களை தன்னுடைய பேச்சுத் திறமையால் தலைதெறிக்க ஓடச் செய்திடுவார்கள். பட்டி மன்றம், வழக்காடு மன்றம் போன்ற இலக்கிய சர்ச்சைகள் செய்யும் இடங்களில் இவரைக் காணலாம். வாதப் பிரதிவாதம் செய்வதில் இவருக்கு நிகர் இவரே.

முன் யோசனை இன்றி முடிவேடுப்பவர்கள். உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று நினைபவர்கள். இதனாலேயே இவர் செயல்படுத்தும் செயல்கள் அனைத்தும்இறுதியில் குழப்பத்திலேயே முடியும். பிறர் கையை எதிர்நோக்குவார்கள், மற்றவர்களிடம் பொறுப்பை கொடுத்து விட்டு வேறு காரியங்களில் இறங்கி விடுவார்கள். யோசித்து செய்யலாம் என்று சிந்திக்க ஆரம்பித்தால் முடிவே இராது. யோசனைக்கு மேல் யோசனை என்று காலம் கடந்த பின்னரே முடிவெடுப்பர். எல்லாம் கை நழுவி பொய் இருக்கும். உதாரணமாக பெண் பார்க்க சென்றால் சீக்கிரமாக முடிவு செய்ய வேண்டும். பெண்ணின் படிப்பு, குனாதிசியங்களில் என்று யோசனையில் இறங்கினால் அப்பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிந்த பின்னரே முடிவை சொல்வார்கள்.

தந்திரமாக சிரித்து பேசி பழகுவார்கள். மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்யும் குணம் உடையவர்கள்.பெண்களை கண்டால் பேருவகை கொள்வார்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்திருப்பார்கள். குடும்பத்திற்காக எதையும் செய்வார்கள். வசதி மிக்கவர்களின் தொடர்பு இவருக்கு மிக எளிதாக அமைந்துவிடும். பலர் நிறைந்த அவையில் முன் நிற்பவர்கள் ஆவார்கள். சிற்றின்ப அனுபவம் சிறு வயதிலேயே கிடைக்கும். அத்துடன் கேளிக்கை நடக்கும் இடங்களுக்கு அவ்வப்போது சென்று வருவார்கள். வாகன வசதியும், வீடும் கால காலத்தில் அமையும். ஒரே நேரத்தில் இரண்டு வித வேலை செய்வார்கள். உத்தியோகமும் , வியாபாரமும் சேர்ந்து அமையும். மிதுன நாவம்சத்திருக்கு சூரியன் 1௦ ஆம் இட தொடர்பானால் அரசாங்க தொடர்புகள் மூலம் காண்டிராக்ட், கமிஷன் என சம்பாதிக்கலாம்.

சந்திரன் 1௦ ஆம் இட தொடர்பானால் உணவும், கேளிக்கையும் என உற்சாகமாக பணம் சம்பாதிக்கலாம். செவ்வாய் எனில் சமையல துறை, செக்ஸ் வைத்தியர், கிரிமினல் வக்கீல், உலோக வியாபாரங்கள் போன்ற துறைகளில் உலா வரலாம். புதன் எனில் எழுத்து துறையும், கமிஷன் சார்ந்த துறையும் சிறப்பாக அமையும். குரு எனில் பணம் புழங்கும் வங்கி, வட்டிக்கடை, தங்கம், வெள்ளி வியாபாரங்கள் என தாரளமாக பணம் சேர்க்கலாம். சனி 1௦ ஆம் இட தொடர்பானால் கனரக தொழில்களும், வாகனமும், வனம் சார்ந்த துறைகளிலும் பொருள் ஈட்டலாம். ராகு, கேது பத்தாம் இட தொடர்பு பெற்றால் குருவுக்கு குறிபிட்ட தொழில்களே அமையும்.

நாவம்சதில் மிதுன சூரியன்

ஆகாய கோட்டை கட்டி அதில் அரசராக வாழ்வார்கள். யதார்த்தமாக இருக்க மாட்டார்கள். தனது கற்பனையை தானே நம்பி மகிழ்வார்கள். உடல் நிலையம் ஒத்துழைக்காது. புரியாத தொந்தரவுகளால் மன உளைச்சல் ஏற்படும். மகிழ்ச்சியோ, துக்கமோ, வறுமையோ, கடனோ எதையும் மறைக்க மாட்டார்கள். இதனால் இவர்களைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்து விடும்.

ஒன்றையும் உருப்படியாக செய்ய தெரியாது. ஒரே சமயத்தில்.பல வேலைகளை துவக்குவார்கள். தனது தவறுகளை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். சாஸ்திரங்கள், ஜோதிடம், கணக்கு போன்றவற்றில் மேன்மையடையலாம். இரட்டை மனப்பான்மையை தவிர்க்க பழக வேண்டும்.

நவாம்சத்தில் மிதுன சந்திரன்

எந்த ஒரு செயல்களிலும் மாற்றத்தை செய்வார்கள். புது புது யுக்திகளை புகுத்துவார்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பாக எதையாவது செய்து கொண்டிருப்பார்கள். இலக்கியம் படிக்க பிடிக்கும். துப்பறிவதில் கில்லாடிகள். பல மொழிகளை கற்றுக்கொள்வார்கள். உடனடியாக முடிவெடுக்கும் திறன் படைத்தவர்கள். ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளுக்கும் சாதகமாக/பாதகமாக பேசுவார்கள்.

நவாம்சத்தில் மிதுன செவ்வாய்

பேச்சிலும், எழுத்திலும் வல்லவர்கள். உடனுக்குடன் பதில் கூறும் திறன் படைத்தவர்கள். உள்ளதை உள்ளபடி கூறாமல் மிகைபடுத்தி பேசுவார்கள். இவர்களிடம் தற்பெருமை பேசுபவர்களை கோபம் கொண்டு அவமானப்படுத்துவார்கள். இவரது வாழ்க்கை ஒருவரது வசதி வாய்ப்புகளை ஒட்டியே அமையும். யாரை ஒட்டி வாழ்ந்தாலும் அவரை மட்டம் தட்ட தயங்க மாட்டார்கள். இதனால் உயர்வும், தாழ்வும் மாறி மாறி ஏற்படும். இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிப்பது போல் ஆகிவிடும்.

உறவுகள் கலகம் ஏற்படும். ரத்த சம்பந்தமான உறவுகள் கலகலப்பாக இருக்காது. வீடு, நிலம் சம்பந்தமாக பிரச்சனைகள் ஏற்படும். சமாதானதிற்கு இடம் இல்லாமல் போய்விடும். நிறைய பயணங்கள் மேற்கொள்வார்கள். யாருக்கும் தெரியாமல் பல இடங்களுக்கு சென்று வருவார்கள். இதனால் நன்மையே ஏற்படும்.

நவாம்சத்தில் மிதுன புதன்

தோல்விகள் வழக்கள் என எதற்கும் கவலைப்படாமல் நிம்மதியாக தூங்க கூடியவர்கள். பதற்றமோ பயமோ இவர்களிடம் இருக்காது. எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனோதைரியம் கொண்டவர்கள். மற்றவர்களால் ஏமாற்றபடுவார்கள். உடன் இருந்தவர்களே இவர்களுக்கு எதிராக கடை போடுவார்கள். ஜாமீன் போட்டாலும் பொறுப்பை ஏற்க அலட்டிக்கொள்ள மாட்டார்கள்.

கிரிமினல் வக்கீல் ஆகவும் அதே நேரத்தில் ஜீவகாருண்ய சங்கத்திலும் இருப்பார்கள். கடனோ, வரவோ பணம் வந்தால் கண்டபடி செலவு செய்வார்கள். கடன் கட்ட முடியாமல் தடுமாறுவார்கள். ஒரு முறையாவது நீதிமன்றம் செல்ல நேரும்.

நவாம்சத்தில் மிதுன குரு

நம்பிக்கைக்கு ஏற்றவர்கள். அனால் பிறர் செய்த நம்பிக்கை துரோகத்தால் அவதிப்படுவார்கள். பலரை வாழ்வில் ஏற்றி விட்ட எனியாக இருப்பார்கள். உயரே போனவர்களால் தூக்கி வீசப்பட்ட அறிவாளி என்று இவர்களை கூறலாம்.

கலைகளில் மேன்மை உண்டாகும். புது புது நுட்பங்களை கையாளுவார்கள். தொழில் நுட்ப மேதை என்று புகழப்படுவார்கள். பெண் சேர்கையால் சச்சரவுகளும், பொருள் இழப்புகளும் உண்டாகும். ஒரு முறை பெரும் விபத்துக்குள்ளாவார்கள்.

நவாம்சத்தில் மிதுன சுக்கிரன்

தான் சந்தோசப்பட்டால் உடனே இருப்போர் எல்லோரையும் உற்சாகத்தில் ஆழ்த்துவார்கள். துயரப்பட்டால் வீட்டையே துக்ககரமாக்குவார்கள். சாதியும், சமயமும், ஆன்மீகமும் பேசுவார்கள், கூடவே சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் என கலைத்துறையிலும் கைதேர்ந்தவர்கள். அரசியலை அலசுவார்கள். இனிமையாக பேசுவார்கள். நாரச நடையிலும் வெளுத்து வாங்குவார்கள். மிதுன நாவம்சதில் சுக்கிரன் இருப்பவர்கள் சகலகலா வல்லவர்கள்.

நவாம்சத்தில் மிதுன சனி

பிறந்ததில் இருந்தே இவர்களின் பெற்றோர்கள் பல சிக்கல்களை சந்திப்பர். குடும்ப சூழ்நிலை காரணாமாக படிப்பை நிறுத்திவிடலாமா? வேலைக்கு சென்று சம்பாதிக்கலாமா? என்ற கேள்விகள் எழும். இந்த பக்குவம் பின் காலத்தில் பயன்படும். காரியத்தில் முழு கருத்தாகவும், கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமலும், பிறரை இகழாமல் இருக்க வேண்டும் என முழுக்கவனத்துடன் செயல்படுவார்கள். பாதி வயதுக்கு மேல் முன்னேற்றம் காண்பார்கள். சுய சம்பாத்தியதால் நிலையான சொத்துகளை ஏற்படுத்திக் கொள்வார்கள்.

No comments:

Post a Comment